Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்


Guru

Status: Offline
Posts: 7389
Date:
தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்
Permalink  
 


தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்

தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். 

சங்கநூல்களிலும், சிலம்பு, மேகலை,கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் திருக்குறள் கருத்துகள் பரவலாக ஆளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் திருக்குறளுக்கும் உரை கண்டு அந்நூலின் பயன்பாட்டுக்கு அரண்செய்தனர்.இவ்வாறு உரை கண்டவர்கள் தம் சமயம் சார்ந்தும், கொள்கை, இலக்கிய, இலக்கண பயிற்சிகளுக்கு அமையவும் உரை வரைந்துள்ளனர்.இவ்வாறு வரையப்பட்ட உரைகளுள் பரிமேலழகரின் உரை அனைவராலும் போற்றப்படுகிறது. சில உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் தூற்றப்படுகிறது. 

பரிமேலழகர் தம் அஃகி அகன்ற அறிவு முழுவதையும் பயன்படுத்தி உரை கண்டிருப்பினும் அவர்தம் வடமொழிச்சார்பு அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் எதிர்ப்பைத் தேடித் தந்தது.சிவப்பிரகாசர் உள்ளிட்ட சமயவாணர்கள் பரிமேலழகரின் உரையைக் கண்டித்துள்ளனர். வடமொழிக் கருத்துகளை நீக்கிப் பார்க்கும்பொழுது குன்றின்மேல் இட்ட விளக்காக அவர்தம் உரை விளங்கும்.

ஒருவகையில் பரிமேலழகரின் உரை கற்றவர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது போலத் தமிழ்ப் பற்றாளர்களையும்,தமிழகத்தில் தோற்றம் பெற்ற திராவிட இயக்க உணர்வாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. அவ்வுரைக்கு விளக்கமாகவும், மறுப்பாகவும் உரை வரையவும்,திருக்குறளைத் தங்கள் அறிவுஅடையாளம் காட்டும் நூலாகவும் காட்டும் போக்கைத் தமிழகத்தில் உண்டாக்கியது.இதனால் திருக்குறள் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும்,பிற்பகுதியிலும் புதுப்புது கருத்துகளை உருவாக்கும் களமானது.அக்கருத்து விளக்க உரைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. 

பழந்தமிழ்ப்புலவர்களிடம் இருந்த திருக்குறளை எளிய மக்களும் படிக்கும் வகையில் தெளிவுரை வழங்கியவர் அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.இவர்தம் திருக்குறள் தெளிவுரை கோடிக்கணக்கில் விற்பனை ஆனமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.திருக்குறளார் முனிசாமி அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர்.உரை வரைந்தும் பெருமை சேர்த்துள்ளார்.

மு.வ அவர்களின் உரை வெளிவந்த காலகட்டத்தில்(1949) தமிழகத்தில் தமிழ்,திராவிட இயக்க உணர்வு மேம்பட்டிருந்தது.தமிழர்கள் தங்களின் இலக்கியப் பரப்பையும்,இலக்கணப் பெருமையையும் பேசும்பொழுது சங்க நூல்கள்,திருக்குறளை அடையாளப்படுத்தினர். அதிலுலும் திருக்குறளைத் தம் மறையாக நிலைநாட்ட முயன்றனர்.தேசிய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. இக் காலகட்டத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாகத் திருக்குறள் அயல்நாட்டு அறிஞர்களால் அறியப்பட்டிருந்தது. 

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தில் அரசியல்,சமூகம், மொழி, இலக்கிய வளர்ச்சிக்குத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். தந்தை பெரியாரின் அரசியல், சமூகப் போராட்டங்களால் தமிழக மக்கள் கல்வி,அறிவுநிலைகளில் மேன்மையுறத் தொடங்கினர். சமூக விழிப்புணர்ச்சியுடன் இலக்கிய,கல்விச்சூழலும் பல நிலைகளில் வளரத் தொடங்கின. 

காலந்தோறும் உயர் சாதியினரின் கையில் இருந்த இலக்கிய இலக்கண நூல்கள் அனைத்தும் மக்களின் கைக்குக் கிடைத்தன.இதனால் அவரவரும் தத்தம் வாழ்க்கை, அறிவு, கொள்கை வழிப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்தனர்.புதுவகை இலக்கண,இலக்கிய உத்திகளை வகுத்தனர்.இதுநாள்வரை கேள்விக்கு உட்படுத்தப்படாமல் இருந்த நூல்கள், கருத்துகள், கொள்கைகள்,விளக்கங்கள் அடித்தட்டு மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.கல்வியறிவு கிடைத்ததுடன் அரசியலில் விடுதலைபெற்று விடுதலையாகத் தங்கள் கருத்துகளை எழுதவும் பேசவும் சூழல் வாய்த்ததால் தங்கள் கருத்துகளை உலகிற்கு வெளிப்படுத்தினர். 

அரசியல்,சமூக மாற்றங்களால் மொழி சார்ந்த இயக்கங்களும்,இனம்சார்ந்த இயக்கங்களும் கட்டமைக்கப்பட்டன. மறைமலையடிகளால் உருவாக்கம்பெற்ற தனித்தமிழ் இயக்கம்(1916 அளவில்)பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற அறிஞர்களைத் தனித்தமிழ்க் காப்பு முயற்சிக்குப் பாடுபடத் தூண்டியது.

பாவாணர் தமிழே உலகின் முதன் மொழி எனவும்,மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே எனவும்,தமிழிலிருந்தே பிறமொழிகள் தோன்றின எனவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தம் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டார். ஆரியமொழியால் தமிழ் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை வெளியிட்ட பிறகு தமிழகத்தில் இதுநாள் வரை மண்டிக்கிடந்த ஆரிய அடிமை உணர்வு ஆட்டம் காணத் தொடங்கியது.தமிழைப் பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் தொடங்கியதால் தமிழ் பண்டைய வளம்பெறத் தொடங்கியது. 

வழக்கிலிருந்த பிற சொற்களைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துரைக்க அதனைத் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மேடைப்பேச்சில்,எழுத்துரைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வகையில் தமிழ் இலக்கணநூல்களில் இலக்கியங்களில் ஆரியக் கருத்துகள் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டன. இதேபோல் அரசியல் சமூக நிலைகளில் பார்ப்பனர்களின் அதிகாரம், பதவிப் பெரும்பான்மை இருப்பதைக் கண்டு அரசியல் முனையில் விழிப்புணர்வு ஏற்பட்டது. மொழி அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் ஆரியத்தை, அதன் கொள்கைகளை, அடிப்படைக் கட்டமைப்பைக் குலைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. 

தமிழகத் தலைவர்கள் உயர்சாதியினரின் ஆதிக்கம் அரசியல்துறையில் இல்லாமல் செய்தது போல் மொழித்துறையில் வல்ல தமிழறிஞர்களும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர்.கம்பராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களையும் நூல்களின் கருத்துகளையும் எதிர்த்தனர். 

மாற்றுக் கருத்துடைய நூல்களைக் கண்டித்த தந்தை பெரியார் திருக்குறள்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைத் தொடக்கத்தில் எதிர்த்தார்.பின்னர் அதில் உள்ள பிற்போக்கான சிலபகுதிகளை மட்டும் கண்டித்துவிட்டு ஏற்கத் தகுந்த கருத்துகளை ஏற்கலாம் எனக் கருத்துச் சொன்னார். திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.1948 இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஐவர்குழு அமைத்து(நாவலர் பாரதியார்,புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள்) பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைவரைய வேண்டியதையும் இதன் அடிப்படையில் 25 நாள்களில் புலவர் குழந்தை உரை உருவானதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். 

தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருநூல் திருக்குறள் எனும் போக்கு தமிழகத்தில் உருவானதும் திருக்குறளை மூலமாகவும்,உரையாகவும் பலர் பதிப்பித்தனர். அடக்கவிலையிலும், இலவயமாகவும் திருக்குறள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உரைகள், உரைக்கொத்துகள்,ஆராய்ச்சிக் குறிப்புகள், தெளிவுரை, விளக்கவுரை, பதவுரை, குறிப்புரை எனும் அமைப்பில் திருக்குறள் பல பதிப்புகளைக் கண்டது.ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஒலிவட்டுகளிலும், குறுந்தட்டுகளிலும் பதியப் பெற்றுப் பரவின.உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியில் முன்னிற்கின்றனர். 

இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நூலாகத் திருக்குறள் மாறியதும் அறிஞர்களின் கடைசி விருப்பம் திருக்குறளுக்கு உரை வரைவது என்னும் கருத்தைத் தமிழகத்தில் உருவாக்கிவிட்டது.சமூகத்தில் தங்கள் பெயர் அனைவருக்கும் அறிமுகமானதும் அவர்கள் செய்யும் முதல் வேலையாகத் திருக்குறள் உரைவரையும் வேலை அமைந்துவிட்டது. திருக்குறளுக்கு எல்லாக் காலத்திலும் விற்பனை உள்ளதால் இதில் அனைவரும் தங்களின் தகுதிகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றனர்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இனமீட்புக்கு,மொழி மீட்புக்கு உரைகண்ட நிலைமாறி திருக்குறள்,திருவள்ளுவர் விருதுகளுக்கு இன்றைய உரைவரையும் போக்கையும் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகின்றது. 

இன்று வெளிவரும் உரைகளைப் பார்க்கும்பொழுது பெரும்பாலான குறட்பாவிற்கு அனைவரும் ஒன்றுபட்ட உரையே கண்டுள்ளனர்(மு.வ.உரையின் மறுபதிப்பாகவே உள்ளன).சில குறட்பாக்களுக்கு மட்டும் உரை காண்பதில் வேறுபடுகின்றனர்.தமிழ்,திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களின் உரைகளுக்கு இடையிலும் சில தனித்த போக்கினைக் காணமுடிகின்றது.தமிழ் இயக்க உணர்வாளர்கள் கண்டுள்ள உரைகளில் ஆரிய எதிர்ப்பு,மனுமுதலிய கொள்கைகள் எதிர்ப்பு, இவற்றைக் கைக்கொண்ட பரிமேலழகர் எதிர்ப்பு, தமிழ்மரபுகாட்டல் எனும் தன்மைகள் காணப்படுகின்றன.திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் கண்டுள்ள உரைகளில் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக் குறிப்புகள், விதி(ஊழ்) மறுப்பு, பார்ப்பன அடையாளம் எதிர்ப்பு உள்ளிட்ட தன்மைகள் காணப்படுகின்றன. 

தமிழ்,திராவிட இயக்க உணர்வுடைய அறிஞர்கள் வரைந்துள்ள உரையில் திருவள்ளுவரின் உள்ளம் காட்டும் முயற்சியில் அவர் குறிப்பிடும் இறைவன்,ஊழ் பற்றிய சிந்தனைகளை ஏற்றும் உரை கண்டுள்ள தன்மையைப் பார்க்கமுடிகிறது.பொற்கோ அவர்களின் உரையில் வள்ளுவர் உள்ளத்தை மனத்தில்கொண்டு உரை காணப்பட்டுள்ளது.உரையில் இன்னும் உண்மைப்பொருள் விளங்காத இடங்களைப் பொற்கோ குறிப்பிட்டுச் செல்கின்றார்.இது ஒருவகை உரை வரையும் போக்காக உள்ளது.கலைஞர் உரையில் பகுத்தறிவு கண்கொண்டும், கற்பனைநயம் மிளிரவும் உரை உள்ளது.சில இடங்களில் கலைஞர் திருவள்ளுவர் கருத்துக்கு உடன்பட்டே செல்வதைக் காணமுடிகின்றது.பாவேந்தர் வரைந்த உரை(குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் 08.12.1961 -07.02.1961 வரை உரை வரைந்துள்ளார்.83 குறட்பாக்களுக்கு இவர்தம் உரை உள்ளது.)திருக்குறளின் உண்மை வடிவை மாற்றும் வகையில் அவர்தம் தமிழ்ப்பற்று மிகுந்து விடுகின்றது. 

திருக்குறளுக்கு உரைகாண வேண்டிய முறைகள் 

திருக்குறளின் குறட்பாக்கள் தவிர அதனை இயற்றிய திருவள்ளுவர் பற்றிய மெய்யான சான்றுகள் நமக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.எனவே நாம் வெளியிடும் கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லாததால் அறிஞர் உலகம் அவற்றை ஏற்கத் தயங்குகின்றது.எனவே நம் கொள்கை,நம் உணர்வு,நம் விருப்பம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு திருவள்ளுவர் காலச் சமூகத்தையும்,காலப் பழைமையையும் மனதில்கொண்டே உரை வரையவேண்டும்.விளக்கம் தரவேண்டும். 

அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுவது போல் திருக்குறளுக்குத் திருக்குறளிலேயே பல இடங்களிலில் உரை உள்ளதை முதற்கண் மனத்தில் கொள்ளவேண்டும். அவர்காலத்தில் இல்லாத புராணச்செய்திகள் பிற்காலத்தில் எற்பட்டுள்ளன.பிற்காலச் செய்திகளின் அடிப்படையில் முற்கால வரலாற்றைத் திரிக்கக்கூடாது (ஐந்தவித்த இந்திரன் கதை).திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பல கருத்துகள்,சொற்கள் இன்றைய நிலையில் வைத்துப் பொருள் காணப்படுவதால் பல குழப்பங்களுக்கு வழி வகுக்கின்றன.திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும்பணியில் திருவள்ளுவர் தவச்சாலை கண்டுள்ள இரா.இளங்குமரனாரின் வாழ்வியலுரையில் திருக்குறளுக்குப் பல இடங்களுக்குப் பொருத்தமான உரை கண்டுள்ளார். 

திருக்குறளுக்கு உரை காணும் அறிஞர்கள் திருக்குறளுக்குப் புது விளக்கம் தருவதுடன் அதிகாரத் தலைப்பு மாற்றம் செய்துள்ளமையும் காண முடிகின்றது.அதிகாரத் தலைப்புகள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராததால் மாற்றிய முறையை (கலைஞர். பாவேந்தர்)க்காணும் அதே நிலையில் இளங்குமரனார் இறைவணக்கம் எனத் தலைப்பு இட்டுள்ளதற்குக் காரணம் காட்டுகிறார்.திருக்குறளில் எந்த இடத்தும் கடவுள் என்னும் சொல்வரவில்லை எனவும் வாழ்த்து என்னும் சொல் எவ்விடத்தும் இல்லை எனவும் கூறி இறைவணக்கம் எனப் பெயரிடுகின்றார்.அதுபோலவே புதல்வரைப் பெறுதல்(7) என்னும் அதிகாரத் தலைப்பை மாற்றும்பொழுது இத்தொடர் நூலின் எவ்விடத்தும் இல்லை எனவும் மக்கட்பேறு என உள்ளதையும் குறிப்பிட்டு மக்கட்பேறு எனத் தலைப்பிட்டதைக் குறிப்பிடுகிறார். 

இரா.இளங்குமரனாரின் உரைக் குறிப்புகளில் அரிய விளக்கம் சில உள்ளன.திருக்குறள் குறட்பாவில் வரும் இறை என்னும் சொல் சாதி,மத உணர்வுகளைத் தூண்டும் நோக்குடையது அன்று.மெய்யுணர்தல்,அவா அறுத்தல்,பேரா இயற்கையாம் செம்பொருளைக் கண்டுகொள்ள வழி வகுப்பது அது என விளக்குகிறார்(தந்தை பெரியாரும் இதே கருத்தினர்.காண்க : பெரியார் சிந்தனைகள்,தொகுதி.2,பக்கம்1260-65) 

கடவுள் வணக்கத்திலும் உருவ வணக்கம் இல்லை எனவும்,1330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட கடவுள் என்ற சொல் இல்லை எனவும்,கடவுள் பெயரில் நடைபெற்ற உயிர்க் கொலையைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார் எனவும் பெரியார் குறிப்பிடுகின்றார் (மேலது). மேலும் அந்தக் காலத்தில் இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் எனவும் இன்றைய நிலையில் திராவிடர்க்கு ஒழுக்க நூல் குறள்தான் எனவும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்(மேலது). 

இரா.இளங்குமரனார் திருக்குறளில் பொருள் காண அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தும் சிக்கலான சில இடங்களுக்குத் தெளிந்த பொருள் கிடைக்கச் செய்துள்ளார். அவ்வகையில் பின்வரும் கருத்தினை இளங்குமரனார் முன்வைத்துள்ளார்: 

புத்தேளிர் : தமிழகத்திற்குப் புதியதாக வந்தவர்கள்(58) 

இந்திரன் : ஐம்புல அடக்கத்திற்குச் சான்றானவன்(25) 

காமன்,வேள்வி,தவம்,நோன்பு,அந்தணர்,பார்ப்பான்,மறுமை,எழுமை, இருபிறப்பாளர், வீடு, நிரயம், பேய்,அலகை,ஊழ்,மறை எனும் சொற்கள் யாவும் தமிழ்மரபு சார்ந்து ஆளப்பட்டவை என்கிறார்.திருக்குறளின் துணைகொண்டே இவற்றை விளக்குகின்றார். 

தாமரையினாள்,செய்யாள்,திரு என்பன செல்வம்,நன்மை ஆகியவற்றின் உருவகம் என்கிறார்.முகடி(617),தவ்வை(937) என்பனவும் தொன்மக்கதை வழி பார்க்கும் பெயர்களன்று என்கிறார். 

பாவாணர் உரை 

பாவாணர் திருக்குறளை ஆழமாக நேசித்தவர்.குறடபாக்களைத் தம் ஆய்வுகளில் ஆங்காங்கு தக்க வகையில் பயன்படுத்தியுள்ளார்.குறளில் இருந்த பயிற்சி போலவே பரிமேலழகரின் உரையில் நல்ல விருப்பம் கொண்டவர்.பாவாணரின் உயிர்க்கொள்கை தமிழ்,தமிழர். இவற்றிற்கு எதிரான கருத்துகள், ஆரியச் சார்பாக்கித் திருக்குறளைக் காட்டியவற்றைப் பாவாணரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் மரபுரை செய்ய வைத்தது.தமிழ் மரபுகாட்டி இவர் செய்துள்ள உரை பரிமேலழகரையும் அவர் தம் ஆரியச் சார்பையும் தக்காங்கு மறுத்துள்ளது.

பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை உரை வரையத் தூண்டியது பாவாணர் உரை.பாவாணரின் உரை பெரும்பாலும் பரிமேலழகரின் வள்ளுவத்துக்கு மாறான கருத்துகளை மறுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களைப் பாவாணர் திறம்பட எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். பரிமேலழகரின் உரை பற்றிப் பாவாணர் கருத்து : 


'பரிமேலழகருரையே தலைசிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது.அது பெரும்பா£லும் ஏனை யுரைகளெல்லாவற்றினுஞ் சிறந்ததென்பதும்,சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே.ஆயின் பெறுதற்கரிய அறுசுவை யரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ளதொப்ப,உண்மைக்கு மாறானதும்,தமிழுக்கும்,தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நஞ்சுக் கருத்துகளை,முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது.இனி சில குறள்கட்கு முழுத் தவறாகவும்,சில குறள்கட்கு அரைத் தவறாகவும் பொருள் காட்டியுள்ளார்.சில சொற்களை வடசொல்லாகக் காட்டியிருப்பதுடன் சில சொற்கட்குத் தவறான இலக்கண வழுவமைதியுங் கூறியுள்ளார்'.(திருக்குறள் தமிழ் மரபுரை தொகு.1. பக்.18). 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
RE: தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்
Permalink  
 


பாவாணர் திருக்குறளின்மேல் கொண்ட பற்றின் காரணமாக உரைகண்டார் என்பதை விடப் பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களை எடுத்துரைத்து அடையாளங் காட்டுவதும், பொருத்தமான தமிழ்மரபுகளை முன்வைப்பதும் நோக்கமாகத் தெரிகிறது. பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களாகப் பாவாணர் குறிப்பிடும் இடங்கள்: 


1.ஆரியவழி காட்டல்(குறள் 27,களவியல் முன்னுரை) 

2.பொருளிலக்கணத்திரிப்பு( '...வடநூலுட் போசராசனும்...களவியல்.) 

3.ஆரியவழிப்பொருள் கூறல்(குறள் 43 பிதிரராவர் -படைப்புக்காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி இஃது வேதக்கருத்து) 

4.ஆரியக் கருத்தைப் புகுத்தல்(560 குறளுக்குப் 'பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன ஓதாமையானும்,வேள்வி நடவாதாம்' என்பது காண்க) 

5.தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பு எனல் 

உழையிருந்தான் எனப்பெயர் கொடுத்தார்,அமாத்தியர் என்னும் வடமொழிப்பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின்( ) 

6.தென்சொற்கு வடமொழிப்பொருள் கூறல் 

அங்கணம் = முற்றம் 

7.சொற்பகுப்புத் தவறு 

பெற்றத்தால்- பெற்ற வென்பதனுள் அகரமும்,அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன(524,உரை) 

8.சொல் வரலாற்றுத் தவறு 

அழுக்காறென்னும் சொல்குறித்த விளக்கம். 

9.சொற்பொருள் தவறு 

இனிது =எளிது(103) 

10.அதிகாரப்பெயர் மாற்று 

மக்கட்பேறு = புதல்வரைப்பெறுதல் 

11.சுட்டு மரபறியாமை 

அஃதும் = ஏனைத்துறவறமோ வெனின்(குறள். 49) 

12.இரு குறளைச் செயற்கையாக இணைத்தல் 

குறட்பாக்கள் 631,632 

பாவாணரின் உரைச்சிறப்பு 

பாவாணர் உரை பரிமேலழகர் வழுவிய இடங்களை எடுத்துக் காட்டியுள்ளதுடன் தமிழ்மரபுக்கு உகந்த வகையிலும் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நினைவுகூரும் வகையிலும் பல இடங்களில் உள்ளன.வேர்ச்சொற்கள் பல விளக்கப்பட்டுள்ளன.புதுச்சொற்கள் பல படைக்கப்பட்டுள்ளன. ஊர்வனவற்றை ஊரி எனவும்,ஞானியார் என்பதை ஓதியார் எனவும்ஆடம்பரம் என்பதை ஒட்டோலக்கம் எனவும் யோகம் என்பதை ஓகம் எனவும், பிரமசரியம் என்பதை மாணிகம் எனவும்,வாதி என்பதை உறழி எனவும்,உபாயம் என்பதை ஆம்புடை எனவும்,பாவனை என்பதை உன்னம் எனவும் பாவாணர் ஆண்டுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தருவதுடன் 'பரிந்தோம்' என்பதில் வரும் வேள்வி ஆரியவழியிலான கொலை வேள்வி எனப்பரி. பல இடங்களில் விளக்கம் காணப்,பாவாணரோ வேள்வி என்னும் தூய தென்சொல் விரும்பு என்னும் பொருளில் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகளிலும் உள்ளதை எடுத்துக்காட்டுவார்(88). 

எழு பிறப்பு என்பதற்கு உரையாசிரியர்கள் ஒவ்வொரு விளக்கம் தரப் பாவாணர் ஏழு என்பது ஒரு நிறைவெண்;ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது என்கிறார்(62). 

பொருத்தமான இடங்களில் பொருத்தமான தமிழ் இலக்கியச் செய்திகளையும் வரலாற்றையும் பாவாணர் உரையில் குறிப்பிட்டுச் செல்கின்றார்.ஒளவையார் தூது சென்றமை (அதி.69),வடநாட்டிற்குச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றபொழுது முப்பத்தி யிரண்டு மாதம் நீங்கியிருந்தும் நாட்டில் குழப்பமின்மைக்குக் காரணம் அவனது அனைத்திந்தியத் தலைமையைச் சுட்டுவது(குறள் 741),ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தன் செங்கோல் தவறியதால் உயிர் நீத்தமை(969),குமணவள்ளல் தன் உயிர் தர அணியமாய் இருந்தமை(குறள்.72)உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளமை பிற உரையாசிரியர்களிடம் காணப்படாத தன்மையாக உள்ளது. 

'கேட்ட தாய்' என்னும் தொடருக்கு உரைவரையும்பொழுது பரிமேலழகரின் கருத்தை எடுத்துக்காட்டி,சங்க காலத்தில் வாழ்ந்த 'ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ...வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால்,அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம்'(குறள் 69 உரை) என்று எழுதும்பொழுது பாவாணர் பண்டைக்காலத்துப் பெண்பாற்புலவர்களை நினைவுகூர்வார். 

பாவாணர் தம் உரையில் தமிழ் 65,மலையாளம் 1,ஆங்கிலம் 4 என எழுபது பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளமையை ஆ.முத்துராமலிங்கம் குறிப்பிடுவர்(2003,ஆ.கோ.3). பாவாணர் உரை வரைந்த பகுதிகளுள் மருந்து என்னும் அதிகாரத்திற்கு வரையும் உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது.நோய் வகை, நோய்நீக்கும் வகை,மருந்து வகை,மருந்து அதிகாரம் பெயர்பெற்றமை முதலியவற்றை விளக்கும் பாவாணர் எந்த எந்த உணவுப்பொருள் எந்த எந்த நோயைக் குணப்படுத்தும் என்பதைக் (குறள்.942இல்) குறிப்பிட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்துள்ள உரையாசிரியர்கள் பலராலும் காட்டமுடியாதபடியான இலக்கண,இலக்கியவழக்கு,மரபு,பிறமொழி சார்ந்த செய்திகள் பாவாணரின் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. 

பாவேந்தர் உரை 

'மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின் 

அமைவதாகுமோ? ஆய்தல் வேண்டும்' 

என்பார் பாவேந்தர். எனவே மதக் கருத்துகள் நீக்கித் திருக்குறளுக்கு உரைவரையப் பாவேந்தர் திட்டமிட்டுக் குயில் ஏட்டில் உரைவரைந்தார்(08.12.1959-07.02.1961 குயில்,வள்ளுவர் உள்ளம் என்னும் தலைப்பில்).இப்பணி தொடராமல் இடையில் நின்றுவிட்டது. பாவேந்தர் உரையை நோக்கும்பொழுது பரிமேலழகர் வழியை மாதிரியாகக் கொண்டு தமிழ் நெறி என்னும் அடையாளத்துடன் தம் உரையை வரைய முயற்சி செய்துள்ளார்.திருவாரூர் கபிலரால் நூலாக்கம் செய்யப்பெற்ற எண்ணூல் அடிப்படையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதாகப் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார். 

பாவேந்தர் அதிகாரத்தலைப்பு மாற்றம் செய்துள்ளமை,புதுப்பொருள் காண முயன்றமை,கடவுள் மறுப்பு,பெண்ணுரிமை பற்றிய தம் கொள்கைகளைத் தம் உரையில் பெய்து பார்த்துள்ளார்.கடவுள் வாழ்த்தை இறைவணக்கம் எனப் பிறர் எழுதப் பாவேந்தர் 'உலகின் தோற்றம்' என்று அதிகாரப்பெயர் மாற்றம் செய்கின்றார். பிற தமிழறிஞர்களைப் பின்பற்றிப் புதல்வரைப்பெறுதல் என்பதை மக்கட்பேறு என்கின்றார். எழு பிறப்பு என்பதை ஏழுதலைமுறை என்கிறார். 

'மலர்மிசை ஏகினான்' என்பதை விளக்குமிடத்து மலர் என்பதற்கு உலகம் என்னும் பொருள் உள்ளதை எண்ணூல் கருத்தின் துணையுடன் உலகம் என்றே குறிப்பிடுகிறார். (சமணச்சார்பில் எழுந்த உரையான சிறீ சந்திரனாரின் உரையில் 'மலரின்மேல் நடந்த அருகப்பெருமான்' என்று குறிப்பார்.பரிமேலழகர் இப்பகுதிக்கு எழுதும்பொழுது' இதனைப்பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்' என்பது பிறிதோர் கடவுள் இங்குச் சமண சமயக்கடவுளாகும்.சிவன் பூமேல் நடந்தவன் என அப்பர் பாடிய ஒருபாடலும்(தேவாரம்- தாளிடைச்செங்கமல...) அவரின் முன்னைய சமணச்சமய சார்பிலானது என்பர் மயிலை.சீனிவேங்கடசாமி(மேற்கோள்) திருக்குறள், வர்த்தமானன் வெளியீடு). 

பாவேந்தர் திருக்குறளுக்கு உரைவரைவதன் முன்பு உரைப்பாயிரம் வரைந்துள்ளார்.அவ்வுரைப் பாயிரப்பகுதி வருமாறு: ' இனி அகம் புறம் எனும் இரு பொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின் அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கு என்க.இவ்வாறு நூற்பயன் நான்காகக்கொள்வது வடவர்முறை அன்றோ எனின்,அன்று.....'என்று தம் உரைப் பாயிரத்தைத் தொடங்கி எழுதுகின்றார். முதற் குறட்பாவுக்கு உரை வரையும்பொழுது,' உலகும்,உயிர்களும் மற்றுமுள் ளவைகளும் ஆதி என்பதின்று தோன்றியவை.ஆயினும் உலகமக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே.... 

ஆதி வடசொல் அன்று.தூய தமிழ்ச்சொல்லே.அஃது ஆதல் எனப்பொருள்படும் தொழிற்பெயர். 

பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும். பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது.பகல்-அறிவு' என்பது பாவேந்தரின் உரை. 

பாவேந்தர் உரையை நோக்கும் பொழுது அவர்தம் காலத்தில் அவருக்கு இருந்த கொள்கையீடுபாட்டுடன் அவர் உரை வரைய முனைந்துள்ளமை புலனாகின்றது.அவர் தம் உரை குறித்து எவரேனும் ஐயம் எழுப்பினால் அவர்களுக்கு விடைதரும் வகையில் வினாக்களை அவரே எழுப்பிக்கொண்டு ஆத்திகர் நாத்திகர் உரையாட்டாக அமைத்துத் தம் விளக்கத்தையும் பாவேந்தர் தந்துள்ளார்.'ஆய்விடுமானால் ஆய்விடட்டும்.அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்? 'என்று உணர்ச்சிவயப்பட்டு எழுதும் பாவேந்தரைப் பல இடங்களில் காணமுடிகின்றது.

பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு 

பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230 மேற்கோள்கள் ஆளப்பட்டுள்ளதையும் 286 இடங்களில் அரும்பொருள் விளக்கம் தந்துள்ளதையும்,வடமொழி நூல்களில் நல்ல தோய்விருந்ததையும் கற்ற பேராசிரியர் அருளி வியப்படைவர்(திருக்குறள் மெய்ப்பொருளுரை, தொகு.1,பக்.19). இவ்வாறு பரிமேலழகர் மிகப்பெரும் திட்டமிடலுடன் உரை வரைந்தது போலப் பெருஞ்சித்திரனாரும் மிகப்பெரும் திட்டமிடலுடன் திருக்குறளுக்கு ஏறத்தாழ எட்டாயிரம் பக்கங்களில் உரை வரையத் திட்டமிட்டும் தமிழர்களின் போகூழ் குறைந்த அளவிலான குறட்பாக்களுக்கே உரை நமக்குக் கிடைக்கலாயிற்று.அவ்வாறு 240 குறட்பாக்களுக்கு நான்கு தொகுதிகளாக உரைநூல் வெளிவந்துள்ளன. 

முன்னுரைப் பகுதியே மிகப் பெரிய அறிவு ஆராய்ச்சிக் களமாகத் தெரிகின்றது.அதனை அடுத்து அவர் வரைந்துள்ள பகுதிகள் தமிழ் உரை வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெறத்தக்கன. 

பெருஞ்சித்திரனார் மெய்ப்பொருள் உணர்வுடையவர்.ஓரிறைக் கொள்கை உடையவர்.இவர்தம் மெய்ப்பொருள் உணர்வும்,இறைநெறி சார்ந்த கருத்துகளும் உரிய இடங்களில் பதிவாகியுள்ளன.இவர்தம் சொல்லாராய்ச்சியும், ஆழமான உலகியல் அறிவும்,யாப்பு ஆற்றலும்,பன்னூல் பயிற்சியும்,பல துறை அறிவும் கண்டு வியப்பே மேலிடுகின்றது. பெருஞ்சித்திரனார் தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வுகளைத் தம் உரையில் பொருத்தி எழுதியுள்ளார். 

பாவேந்தர் குயில் இதழில் உரை எழுதியபொழுது பரிமேலழகரின் ஆரியக் கருத்துகளை மட்டும் நீக்கி விட்டால் அவ்வுரையே போதும் எனவும்,பாவாணர் மரபுரை தந்த பிறகு வேறு எவரும் திருக்குறளுக்கு உரை வரைய வேண்டியதில்லை எனவும் கருதிய பெருஞ்சித்திரனார் பின்னர் காலத் தேவையறிந்து தாமே மிகப்பெரிய அளவில் உரை வரைய எண்ணினார்.இவர் சிறையில் இருந்தபொழுது இவ்வுரைத் தொகுதிகள் எழுதப்பெற்றன. 

திருக்குறளும் உரைகளும் குறிப்பிடும் பொருளின் துல்லியத்தை உரைப்பதே மெய்ப்பொருளுரையின் நோக்கமாகும் (ப.45). 

திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது தொல்காப்பியம், நன்னூல்,கழகநூல்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள்,சமயப் பாடல்கள்,சாத்திர நூல்கள், தோத்திர நூல்கள் எனப் பல வகைப்பட்ட நூல்களையும், பிறமொழி நூல்களையும் பயன்படுத்துவதுடன் அறிஞர்களின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் போற்றுவதும் குறைபாடுடைய இடங்களில் சுட்டிச்செல்வதும் இவர்தம் இயல்புகளாக உள்ளன. மூலநூல்ஆசிரியரையும் தேவையான இடங்களில் அடையாளப்படுத்துவதும் இவர்தம் இயல்பாக உள்ளன.பிறமொழி, பிறமதம், பிற பண்பாட்டுச் செய்திகளையும் பெருஞ்சித்திரனார் விளக்கிச் செல்கிறார். 

முன்னுரை,பால்விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகாரவிளக்கம்,குறள் விளக்கம் என வகுத்து இவர் உரை வரைந்துள்ளார்.மேலும் குறள்,பொருள்கோள் முறை,பொழிப்புரை,சில விளக்கக்குறிப்புகள் என்னும் அமைப்பில் உரைநூல் அமைப்பு உள்ளது. 

பெருஞ்சித்திரனார் திருக்குறள் ஆரியக்கருத்துகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எனப் பல சான்றுகளுடன் நிறுவுகிறார்.குறிப்பாக மனுநூலில் குறிப்பிடும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கி,இவற்றை எதிர்க்கவே வள்ளுவர் தம் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.குறிப்பாக உழவுத்தொழிலை இழிவான தொழிலாகக் குறிப்பிடும் மனுதரும கருத்துகளை எடுத்துக்காட்டி இவற்றுடன் வள்ளுவரின் கருத்துகள் எந்த அளவு உயர்வுடையனவாக விளங்குகின்றன என்பதை முறைப்படக் காட்டியுள்ளார். உயிர்க்கொலை பற்றி மனுவின் கருத்தும் வள்ளுவரின் கருத்தும் முரண்பட்டு நிற்கும் இடங்களையும் பெருஞ்சித்திரனார் விளக்கியுள்ளார்.மேலும் திருவள்ளுவரின் தமிழியல் பார்வையும் ஆரியவியல் எதிர்ப்பும் தவிர்ப்பும் என்னும் பகுதி(முதல்தொகுதி,பக்.123) பெருஞ்சித்திரனாரின் பன்னூல் பயிற்சிக்குக் கட்டியம் கூறி நிற்பன.(இவற்றின் சிறப்பை மூல நூலில் கண்டு மகிழ்க). 

விளக்கக் குறிப்புகளில் சொற்பொருள் வரைந்தும் சொல்நயம் சுட்டியும், பல பொருத்தமுடைய மேற்கோள்களை எடுத்துரைத்தும் இதுவரை யாரும் இதுபோல் உரை வரையவில்லை என முடிவுசெய்யும் பொறுப்பை நமக்கே வழங்கி விடுகின்றார். 

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் உரைவரையும் பொழுது பெரிதும் மாறுபட்டு நிற்கும் இடங்களில் பெருஞ்சித்திரனார் பொருத்தமான விளக்கம் தர முயன்று இவரும் கருத்து வேறுபாடுகளுக்கு இடந் தந்து நிற்கிறார்.ஒலி,எழுத்து,சொல்,தொடர்களில் எல்லாம் மெய்ப்பொருள் உணமைகள் பொதிந்துள்ளதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். 

'அகர எழுத்தே கூட,வரிவடிவில்,தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைக்கும் எத்தனையோ மாறுதல்கள் அடைந்துள்ளன.ஆனால்,ஒலிவடிவம் ஒன்றுதான்.அதுபோல் இறையுணர்வு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வடிவங்கள் மாறுதல் அடைந்து வந்துள்ளன.(தொகு.2,பக்.61). 

'பிறப்பு' - எனும் சொல்லில் ப்+இ -பி -மெய்களோடு உயிர் சேர்ந்திருப்பதையும்,'இறப்பு' என்பதில் 'இ' - மெய்நீங்கிய உயிர்மட்டும் இருப்பதையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளதையும்(பக்.62) நோக்கும் பொழுது பெருஞ்சித்திரனாரின் இறையுணர்வு வெளிப்பட்டு நிற்கிறது. 

பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் பல சொற்களுக்கு விளக்கம் வரைந்துள்ளார் அவற்றுள் இறைவன்(மூலமாய்,முதலாய் நிற்கும் முதற்பொருள்), கடவுள்(அம்மூலப்பொருள் உயிர்களுடன் கலந்துநிற்கும் நிலை),தெய்வம் (உயிர்களுள் மேம்பாடுற்றுச் சிறந்த மீமிசை மாந்த உயிர்கள்,உலகத்து வாழ்ந்து மறைந்து,மீண்டும் உடற்பிறவியற்று உயிரொளியாய் இயங்கும் நிலை) இவற்றிற்கு வரையும் உரை இவர்தம் உரையால் உண்மைபோல் காட்டப்படுகின்றது(2,பக்.25). 

இறை,மதம் சமயம்,அகமனம்,புறமனம்,ஓகம்,ஊழ்கம் என இவர் தரும் விளக்கம் சமயவாதிகளை விட இத்துறையில் இவருக்கு இருக்கும் பேரறிவைக்காட்டி நிற்கின்றன.இவையெல்லாம் திருவள்ளுவர் சொல்ல நினைத்த கருத்துகளா என நடுநிலையுடன் நின்று நோக்குவர் கேட்கத்தோன்றும்.தம் அறிவையும் தம் கொள்கையும் திருவள்ளுவருக்கு அல்லது திருக்குறளைச் சார்பாக்கிப் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிஞருலகம் விளங்கிக்கொள்ளும்.இவ்வவாறு பல மெய்ம்மவியல் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர்தம் சொற்பொருள் விளக்கம் பிறரால் தரமுடியாத ஒன்றாகும். 

பெருஞ்சித்திரனாரும் அதிகாரப்பெயர் மாற்றம், குறளை வகையுளி இல்லாமல் எழுத சிறு மாற்றங்களைக் குறித்துக் காட்டியுள்ளார்(குறள். 4). 

திருக்குறளின் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனப் பொதுப்பட குறிப்பிடுவதை உரையாசிரியர்கள் இறைநலம் (சி.இலக்குவனார்), இறைவாழ்த்து (அப்பாத்துரை), உலகின்தோற்றம்(பாவேந்தர்) முதற்பகவன் வழுத்து(பாவாணர்), வழிபாடு(கலைஞர்), இறைவணக்கம்(இரா.இளங்குமரனார்) எனக் குறிப்பிடுகின்றனர்.அதைப் போலப் பெருஞ்சித்திரனார் 'அறமுதல் உணர்தல்' என்று குறிப்பிட்டு உரை வரைந்துள்ளார். 

அறமுதல் உணர்தல் அதிகாரத்தில் உள்ள பத்துக்குறட்பாக்களுக்கும் மெய்ப்பொருள் நோக்கில் உரை வரையப்பட்டிருப்பினும் சில சொற்களுக்கு விளக்கம் வரையும்பொழுது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் போல் வரைந்துள்ளது அவர்தம் பழுத்த பேரறிவுக்குச் சான்றாகும். ' வேண்டுதல்',வேண்டாமை' எனும் இரு சொற்களுக்கு விளக்கம் தரும்பொழுது பற்றாலும் ஆசையாலும் பாசத்தாலும் ஒன்றை விரும்புதல் வேண்டுதல்(விரும்புதல்) எனவும்,வெறுப்பாலும்,பொருந்தாமையாலும் பகையாலும் ஒன்றை விரும்பாமை வேண்டாமை எனவும் விளக்கம் தருகின்றமை பொருத்தமாக உள்ளது. 

இருவினை என்பதற்கு மறவினை(அறத்திற்கு எதிரானது),தீவினை(நன்மைக்கு எதிரானது) எனும் விளக்கம் நாம் அறியாத ஒன்றாக இருக்கின்றது. 

அமிழ்தம் என்னும் சொல்லுக்குப் பாற்கடல் அளவில் நம் அறிஞர்கள் விளக்கம் தர,'அம்''அம்' என்பது குழந்தை தாய்முலையில் பாலருந்தும் ஓர் ஒலிக்குறிப்பு.அம்மம் - தாய்முலை.அம்மு - முலைப்பால் - அமுது -அமுதம் - அமிழ்தம் எனக்காட்டி அமிழ்தம் முதலில் தாய்ப்பாலைக்குறித்துப் பின் பிற அருந்தும் பாலைக்குறித்தது என்கிறார் பெருஞ்சித்திரனார்(தொகு.1,பக்.86,87). 

'துப்பு' என்பது நுகர்வுப்பொருள் அனைத்தையும் குறிக்கும்.ஆனால் உணவை மட்டும் குறிப்பதாகப் பரிமேலழகர் முதல்,பாவாணர் வரை குறித்திருப்பதைப் பெருஞ்சித்திரனார் குறையுரை என்கிறார் 

'விரிநீர்' என்னும் சொற்கு உணவு ஆக்கத்திற்குக் கடல் நீர் நேரிடையாகப் பயன்படாமை பற்றி உயர்வு நவிற்சியாகக் கூறியது(தொகு.2,பக். 90). 

'தம்பொருள்' எனத்தொடங்கும் குறளுக்கு இதுவரை வந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பெருஞ்சித்திரனாரின் உரை மயக்கமற்று,மிகத்தெளிவாக,முழுமையான பொருளைக்காட்டி நிற்கின்றது. 

'(இவ்வுலகில்) தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே.மற்று,அவரவரும்(உடைமை நிலையில்)தம்தம் பொருள் என்று கூறிக்கொள்வன,அவரவர் உழைப்பால் ஈட்டி வருவனவே -என்று (உரிமையையும்,உடைமையையும் பிரித்து)உணர்ந்தவர் கூறுவர். ....இது தாய் தந்தை இருவருக்குமே பொது என்பதால் 'தம்' என்றார்.(இது பற்றிய பிற சுவைப்பகுதிகளை மூல நூலில் காண்க.தொகு.2,231). 

இனியவை கூறல் அதிகாரத்தில் உரைவரையும்பொழுது கூறுதல் ,சொல்லுதல் பலவகைப்படும் என்பதைத் திருவள்ளுவர் வழியில் நின்று ,அன்பாகச் சொல்லுதல் முதல் வெல்லும்படி சொல்லுதல் வரையில் 109 தொடர்களைக் காட்டித் திருவள்ளுவத்தில் கூறும் முறைகளைப் பெருஞ்சித்திரனார் காட்டியுள்ள பாங்கினை நோக்கும்பொழுது அவர்தம் திருக்குறள் புலம் நமக்குப் புலப்படுகிறது. 

அனிச்சமலர் பற்றி விளக்கும் பொழுது சங்கநூல்களில் கலித்தொகையில் மட்டும் ஒரிடத்தில் இம்மலர் பற்றி வருகிறது எனவும், திருக்குறளில் வரும் இடங்களில் மென்மைபேசுவது என்று குறித்துள்ளது இவர்தம் துல்லியம் நாடும் போக்கைக்குறிப்பிடுவது.(குறள் 90 விளக்கம்).பெருஞ்சித்திரனாரின் மெய்ப்பொருள் உரையில் சில இடங்கள் மிகைபடக்கூறலாகத் தெரிந்தாலும் அவற்றுள்ளும் பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளதால் அதுவும் குற்றமில்லை என்க. 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

பொற்கோ உரை 

திருக்குறளுக்குப் பொற்கோ வரைந்துள்ள உரை நான்கு தொகுதிகளாக வந்துள்ளன.இவ்வுரை நூலில் பால் விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகார விளக்கம்,குறள்,உரைத்தொடர்,உரைத்தொடர் விளக்கம்,பொருள் விளக்கமும் குறிப்பும் என்னும் அமைப்பில் செய்திகள் உள்ளன.பொற்கோ பகுத்தறிவுக் கருத்து கொண்டவர் எனினும் திருக்குறள் ஆசிரியர் கருத்தைத் தழுவி உரை வரைய நினைத்துள்ளார். 

கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பிலேயே கடவுள் கொள்கையை மறுக்காமல் எழுதியுள்ளது அவர்தம் பற்றற்ற, உண்மைகாணும் உள்ளத்தைக் காட்டி நிற்கின்றது.தமக்கு உரை வரையத் தெளிவு கிடைக்காத இடங்களில்'இது இப்போது விளங்கவில்லை' எனவும் 'இக்குறளுக்குப் பொருத்தமான உரை கிடைத்தால் வரவேற்கலாம்' எனவும்(1:8), குறிப்பிடுகிறார்.பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடும்பொழுது பிறர் உரை பொருந்தாத் தன்மையைக் காட்டுகிறார்(1:6)பரிமேலழகரின் விளக்கம் சிறப்பாக உள்ள இடங்களைப் பாராட்டுகிறார்
(1:11). 

திருக்குறளுக்குத் தன் அனுபவ நிலையிலிருந்து பொற்கோ உரை வரைந்துள்ளாரேயன்றிப் பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை.அதுபோல் இலக்கணக்குறிப்பு வைத்தல், நயம்பாராட்டல் என்று இல்லாமல் முன்னுரையில் குறித்தாங்கு திருக்குறளை அனைவருக்கும் படிக்கும்படியான நூலாக வழங்கத் தம் உரையைப் பயன்படுத்தியுள்ளார். 

கலைஞர் உரை 

பகுத்தறிவுக்கொள்கையும்,கலையுள்ளமும் கொண்ட கலைஞர் குறளோவியம் கண்டவர்.திருக்குறளுக்கு உரையும் வரைந்துள்ளார்.திருவள்ளுவரின் கருத்துகளுக்கு ஒட்டியும் உறழ்ந்தும் கலைஞரின் உரை உள்ளது.அதிகாரத்தலைப்பு மாற்றம் கலைஞர் உரையில் உள்ளது.அதுபோல் வழக்கமான திராவிட இயக்க உணர்வாளர்கள் மாறுபடும் சில இடங்களில் புதிய முறையில் உரைகாண முயன்றுள்ளார்.கடவுள் வாழ்த்தை 'வழிபாடு' எனத் தலைப்பாக்குகிறார். 

வாலறிவன் என்பதற்கு அறிவில் மூத்த பெருந்தகையாளன் எனவும் 'மலர்மிசை ஏகினான்' மலர்போன்ற மனத்தில் நிறைந்தவன் இறைவன் எனவும்,அந்தணர் என்பதற்குச் 'சான்றோர்' எனவும்,தென்புலத்தார் என்பதற்கு வாழ்ந்துமறைந்தோர் எனவும்,புத்தேளிர் என்பதற்கு புதிய உலகம் எனவும்,எழுபிறப்பு என்பதற்கு ஏழேழு தலைமுறை எனவும் குறிப்பிடுகின்றார்.கலைஞர் உரை வரையும்பொழுது எமன்,தெய்வம் குறித்த நம்பிக்கைகளை மனத்தில்கொண்டே உரைவரைந்துள்ளார். 

'அறத்தாறு...' எனத்தொடங்கும் திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது 'அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதிகொள்ளாமல்,துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் என்கிறார்.காமத்துப்பாலுக்கு உரை வரையும்பொழுது கற்பனை ததும்பும் பல இடங்களைக் காணமுடிகின்றது. 

நிறைவுரை 

திருக்குறள் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருந்தாலும் ஒவ்வொருவரும் அதற்குத் தரும் விளக்கங்கள்,பொருள்கொள்ளும் முறைகள் சில இடங்களில் வேறுபாடு கொண்டு விளங்குகின்றன. சமயம் சார்ந்து தரும் விளக்கங்களும்,சமயமறுப்பாளர்கள் தரும் விளக்கங்களும் வேறாக உள்ளன. அவ்வாறு வரையப்பட்ட உரைகளில் அவ்வக்காலச் சமூகச்செல்வாக்கு தெரிகின்றது. 

தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்களின் விளக்கங்களை (உரைகளை) உற்றுநோக்கும் பொழுது திருக்குறளின் உண்மைப்பொருள் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை புலனாகின்றது.மேலும் கருத்து அடிப்படையிலும்,கொள்கை அடிப்படையிலும் சில இடங்களில் மட்டும் மாறுபாடுகொண்டு எழுதும் இவர்கள் பெரும்பான் மையான இடங்களில் ஒன்றிச்செல்கின்றனர்.திருக்குறள் ஆராய்ச்சிக்கும், திருக்குறள் பரவலுக்கும் இவர்களின் உரைகள் பெரிதும் துணைசெய்கின்றன. 

பின்னிணைப்பு - 1 

தமிழ்,திராவிட இயக்க திருக்குறள் உரை நூல்களுள் சில: 

1.புலவர் குழந்தை (1949) 

2..கா.அப்பாத்துரை (1950-54) 

3.பாவேந்தர் (1956) 

4.சி.இலக்குவனார் (1959) 

5.சுந்தரசண்முகனார் (1959) 

6.பாவாணர் (1969) 

7.கு.ச.ஆனந்தன் (1986) 

8.இரா.இளங்குமரனார் (1990) 

9.வி.பொ.பழனிவேலனார் (1990) 

10.வ.சுப.மாணிக்கம் (1991) 

11.இரா.நெடுஞ்செழியன் (1991) 

12.அரிமதி தென்னகன் (1995) 

13.கலைஞர் மு.கருணாநிதி (1996) 

14.பெருஞ்சித்திரனார் (1997) 

15.தமிழண்ணல் (1999) 

16.கல்லாடன் (2000) 

17.ஆ.வே.இராமசாமி (2001) 

18.ச.வே.சு (2001)
19.பொற்கோ (2004)
20.பா.வளன்அரசு (2005)
21.மா.அர்த்தநாரி (2005)
22.அருளி(இன்பத்துப்பால் மட்டும்) (2006)
23.தமிழமல்லன் (2006)
24.கடவூர் மணிமாறன் (2006)
25.க.ப.அறவாணன் (2007)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28.03.2008 இல் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும் தேசியக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி-605003.இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையப்பக்கம் : www.muelangovan.blogspot.com

http://muelangovan.blogspot.in/2008/04/blog-post_19.html

 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

  

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

 

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.


2007062250630301.jpg
பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு

திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில்காணலாம்)

thiruvalluvar.jpg
திருவள்ளுவ நாயனார், திருமயிலை

இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 

ஜடாயு said...

// அதற்காக அவரின் அணைத்து தமிழ் ஆராச்சியையும் பிழையென சொல்லல் அகாது. // 

அனானி, தேவநேயப் பாவாணரது தமிழ் "ஆராய்ச்சி" முழுவதுமே ஒரு சட்டகத்தை வைத்துக்கொண்டு அதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டுவதாகத் தானே இருந்தது. அதில் புலமை, நேர்மை, உண்மையறியும் ஆவல் எங்கே இருந்தது? 

லெமூரியா, குமரிக்கண்டம் முற்றிலும் எந்த ஆதாரமும் அற்றது என்றூ நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நீங்களே கூறுகிறீர்கள். ஆனால் அவர் எழுதிய எல்லா நூல்களிலும் இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்துத் தான் மற்ற எல்லாவற்றையுமே நிறூவ முயல்கிறார் - தமிழ் உலகின் முதல் மொழி, தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்கள், தமிழ் மன்னரை 2000 வருடம் முன்பு "அடிமை"ப் படுத்திய ஆரியர் இத்யாதி இத்யாதி. முதல் கோணல் முற்றும் கோணல்.

இன்றைக்கு நாம் தமிழிலக்கியம் என்று போற்றும் எதுவுமே லெமூரியர்களால் எழுதப் பட்டது கிடையாது, தொல்காப்பியம்,திருக்குறள், சங்க இலக்கியம் எதுவும். எல்லாமே ஆரியசதி.ஆனால் இந்த இலக்கியங்கள் தான் தமிழின் பெருமைக்குக் காரணம் !!! இதை self defeating logic என்று சொல்வார்கள். 

அவர் ஆங்கிலத்தில் எழுதிய The Primary Classical Language of the World என்ற நூலைப் படித்த எனது நண்பரான ஒரு மதிப்புக்குரிய பேராசிரியர் அதிர்ந்து போனார். இதையெல்லாம் கூட ஆராய்ச்சி என்று தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்களா என்று அதிசயித்தார். language clown என்று அவர் குறிப்பிட்டதைத் தான் "மொழிக்கோமாளி" என்று இங்கே எழுதியிருக்கிறேன். 

அந்த நூலின் முன்னுரையில் சில வரிகள் - 

There is no other language in the whole world as Tamil, that has suffered so much damage by natural and human agencies, and has been done so much injustice by malignant foreigners and native dupes....

(இது உண்மை என்றால் எப்படி இந்த 2000 வருடத்தில் உலகம் போற்றும் இலக்கியம் தமிழில் வளர்ந்தது?) 

Tamil is a highly developed classical language of Lemurian origin, and has been, and is being still, suppressed by a systematic and co-ordinated effort by the Sanskritists both in the public and private sectors, ever since the Vedic mendicants migrated to the South, and taking utmost advantage of their superior complexion and the primitive credulity of the ancient Tamil kings, posed themselves as earthly gods (Bhu-suras) and deluded the Tamilians into the belief, that their ancestral language or literary dialect was divine or celestial in origin.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 

திருக்குறளும் தமிழ் மறுமலர்ச்சியும் 

(பிரான்ஸ் திருவள்ளுவ​ர் கலைக்கூடத்தி​ல் ஆற்றிய சொற்பொழிவி​ன் எழுத்து வடிவம்)

ka panjangam

உலகின் பல்வேறு நாடுகட்குச் சென்றதன் பயனாகவும் பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயனாகவும் தமிழிலக்கியம், தமிழ்ப் பண்பு, தமிழ்க்கலை, தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டும் என்று ஒரு சிறிது உணர்ந்துள்ளேன்…கொன்பூசியஸ், செனக்கா முதலிய நீதிநூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ அங்ஙனமே திருவள்ளுவரையும் அறிந்து படிக்குமாறு நாம் செய்வித்தல் வேண்டும்.

  - நூற்றாண்டு விழாக் காணும் யாழ்ப்பாணம் தனிநாயக அடிகள் (1913-1980)

கலை, இலக்கிய அழகியலின் உச்சத்தைத் தொட்டிருந்த தமிழ் இலக்கிய மரபு, பிற்காலப் பாண்டிய அரசு, டில்லியை ஆண்ட சுல்தான்களால் வீழ்ச்சியடைந்த கி.பி. 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. பல்வகைப்பட்ட தமிழ் இலக்கியங்களும் கலைகளும் திட்டமிட்டே அழித்தொழிக்கப்பட்டன. உள்நாட்டு மொழியான தமிழ் சார்ந்த அனைத்தும் தமிழ்மொழி உட்பட இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. சுல்தான் ஆட்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர் ஆட்சிக் காலத்திலும் விஜயநகரப் பேரரசின் சார்பாகத் தமிழ் நிலத்தை ஆண்ட மதுரை நாயக்கர், தஞ்சாவூர் நாயக்கர், செஞ்சி நாயக்கர் காலத்திலும் தமிழ் நாகரிகமும் தமிழும் தன் பழைய பெருமையை அடையவே முடியவில்லை. பிறமொழியாளர்களான அவர்கள் அனைவருமே தமிழ் நிலத்தை, வளத்தை ஆக்கிரமித்தது மட்டும் அல்லாமல் தமிழ் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கில் சமஸ்கிருதத்தையும் தெலுங்கு மொழியையும் முதன்மை இடத்தில் நிறுத்தி வளர்த்தனர். வேற்றுமொழிக்காரர்களின் ஆதிக்கத்தினால் தமிழ்ப் புலவர்கள் தங்கள் பிழைப்பிற்காக மடாலயங்களையும் சிற்றரசர்களையும் ஜமீன்தார்களையும் புகழ்ந்து பாடிப் பிழைக்க வேண்டிய தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய தமிழ்ப் புலவர்களின் நிலையை மகாகவி பாரதியார் தன்னுடைய “சின்ன சங்கரன் கதை”யில் பதிவு செய்துள்ளார். குட்டி ஜமீன் தார்களுக்குக் கிளுகிளுப்பை ஊட்டுவதற்காகப் பாடல் கட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதைச் “சாற்றுவதும் காமக்கலை; சாதிப்பதும் போற்றுவதும் காமனடிப்போது” என எழுதினார். மேலும்,

                                புலவன் அலவன் வலவன்

                                பலகை அலகை உலகை

என்று எதுகை மோனைகளிலும் “யமகம், திரிபு, பசுமூத்தபந்தம், நாகபந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்ப்பந்தங்கள் கட்டி அவற்றை மூடர்களிடம் காட்டி அமர்த்தனென்று மனோராஜ்யம் கொண்டனர்” என்கிறார் பாரதி.

                தமிழின் இந்த இழிநிலை இக்காலத்தில் எந்த அளவிற்குப் போய்விட்டதென்றால், தமிழ் வடமொழியிலிருந்து பிறந்தது; சமஸ்கிருதத்தில் இல்லாமல் தமிழில் மட்டும் இருக்கும் எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து மட்டுமே தமிழ் எழுத்து; தமிழிலுள்ள மற்ற எழுத்துக்கள் எல்லாமே சமஸ்கிருதத்திற்கு உரியவை. எனவே “ஐந்து எழுத்தால் மட்டுமே ஆன ஒரு மொழியை மொழியென்று சொல்லவும் நாணுவர் அறிவுடையோர்” என்றும், தமிழில் நூற்கள் ஏராளம்; ஆனால் சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் ஒரு நூலேனும் உண்டா? என்றும் தமிழிலேயே ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியர் சுவாமிநாத தேசிகர் கேட்கும் அளவிற்குத் தமிழ்மொழி தரைமட்டமாக்கப்பட்டுக் கிடந்தது. அதனால்தான்,

 “கி.பி. 14 ஆம் நூற்றாண்டும் அதற்கடுத்த இரண்டொரு நூற்றாண்டுகளும் தமிழ்நாட்டின் இருண்டகாலமென்றே சொல்லலாம்”         (அ.மு. பரமசிவானந்தம், ப. 299)

என்று எழுதினார் அ.மு.ப. 1892 ஆகஸ்டு மாத “விவேக சிந்தாமணி” இதழில் “18 ஆம் நூற்றாண்டின் தமிழ் பாஷாபிவிர்த்தி” என்ற கட்டுரை எழுதிய வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்,

“தமிழானது ஆரியர், மகம்மதீயர்கள் மூலமாய்ப் பொறுக்க முடியாத துன்பமடைந்து தன்னுருமாறி நிற்கின்றது”

எனக் குறிப்பிட்டார். இத்தகையதொரு சூழலில்தான் ஐரோப்பியர் வருகையும் கிறித்துவப் பாதிரிமார்கள் வருகையும் நிகழ்ந்தன. இவர்கள் வருகையும் இவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புப் பணியும்தான் தமிழை மீட்டெடுத்து மீண்டும் தலைநிமிரச் செய்தன என்பது நவீனத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறாக நிற்கிறது. இனி அவற்றை விரிவாகக் காணலாம்.

II

                உலகத்தை மாற்றிய புத்தகங்கள் என்று ரூஸோவின்1 ‘சமுதாய ஒப்பந்தம்’, காரல் மார்க்சின்2  ‘மூலதனம்’ முதலிய நூல்களைச் சொல்லுவர். மார்க்சின் மூலதனம், “உலகத்தை முதலாளித்துவ நாடுகள், சோசலிச நாடுகள் என இரண்டாகப் பிளந்தே விட்டது” என்று வர்ணிப்பர். அப்படியொரு நிகழ்வு தமிழ் உலகிலும் நிகழ்ந்துள்ளது; அதுதான் வான்புகழ் வள்ளுவரின் திருக்குறள் வரவு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் அது அரங்கேறிய போது எத்தகைய பாதிப்புகளைத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதைத் திருக்குறளுக்குப் பிறகு சிலப்பதிகாரம், மணிமேகலை எனத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் வள்ளுவரின் குறளை, சிந்தனைகளைப் பயன்படுத்தியுள்ளன என்ற உண்மையைக் கொண்டு ஒருவாறு ஊகிக்க முடியும் என்றாலும் துல்லியமாக எதையும் சொல்வதற்கு ஆவணங்கள் இல்லை. ஆனால் ஐரோப்பியர் வருகையை ஒட்டி வீரமாமுனிவர் (1680-1747), எஃப்.டபிள்யூ. எல்லீஸ் ஆகியோர் முறையே இத்தாலி மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஏட்டில் கிடந்த திருக்குறளை மொழிபெயர்த்துப் பதிப்பித்து வெளிட்டதானது தமிழ் உலகில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. பின்காலனித்துவத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் விளைவான தமிழ் மறுமலர்ச்சிக்கான வேர் இவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்துதான் பரவியுள்ளது.

                இத்தாலியிருந்து சமயப்பணி ஆற்ற இந்தியா வந்த கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கி, தமிழ்படித்துத் தன் பெயரைத் தைரியநாதர் என்று முதலிலும் பிறகு அது தூயதமிழாக இல்லை என்று அறிந்து வீரமாமுனிவர் என்றும் மாற்றிக்கொண்டு ‘தேம்பாவணி’ உட்பட 23 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்ட நிலையிலேயே தமிழின் மறுமலர்ச்சிக்காலம் தொடங்கிவிட்டது. அவர் திருக்குறள் கருத்துக்களில் பைபிள் கருத்துக்களைக் கண்டு ஆர்வத்தோடு திருக்குறளை மொழிபெயர்க்கத் தொடங்கி (கி.பி.1730) அதன் பெருமையைத் தமிழ்நாட்டில் மீட்டெடுத்தது மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் அவருடைய இத்தாலிய மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் திருக்குறள் முதலில் பரவியது என்பது வரலாறு.

                கி.பி. 1810ஆம் ஆண்டில் கிண்டர்ஸி என்ற ஐரோப்பியர் திருக்குறளின் சில பகுதிகளை அச்சுக்குக் கொண்டுவந்தார். கி.பி. 1812இல் எஃப். டபிள்யூ. எல்லீஸ் திருக்குறளையும் நாலடியாரையும் அச்சேற்றியதோடு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். எல்லீஸ் அன்றைய சென்னை மாநிலத்தின் நிதி அதிகாரியாகவும் அக்க சாலைத் (Mint) தலைவராகவும் விளங்கியவர்; ‘சென்னைக் கல்விக்கழகம்’ என்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். திருக்குறளின் மேல் கொண்ட பற்றினால் வள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார்; அந்நாணயங்கள் சிலவற்றை அளக்குடி ஆறுமுக சீதாராமன், ஐராவதம் மகாதேவன் ஆகிய இருவரும் கண்டெடுத்துள்ளனர். 1796இல் சென்னை அரசுத் துறைக்குப் பணியாற்ற வந்த இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கந்தசாமி என்பார் தந்த ஏட்டின் மூலமாகத் திருக்குறளை அறிந்து பதிப்பித்துள்ளார். திருக்குறளின் மேல் அவர் எந்த அளவிற்குப் பற்றுக்கொண்டு பாழ்பட்டுக் கிடந்த தமிழ்ப்புலவர்கள் நடுவில் வளர்த்தெடுப்பதற்குப் பாடுபட்டுள்ளார் என்பதை அவர் குறித்த இரண்டு வரலாற்றுக் குறிப்புகள் புலப்படுத்துகின்றன.

                1818 இல் சென்னையில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டின் போது வெட்டிய கிணற்றின் கைப்பிடியில் இவர் திருவள்ளுவரையும் அவர் குறளையும் பதிவு செய்துள்ளார். (இக்கல்வெட்டும் கிணறும் சென்னை இராயப்பேட்டை, பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளன.)

                சாயங் கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்

ஆழியி லிழைத்த வழகுறு மாமணி

குணகடன் முதலாக குடகடலளவு

நெடுநிலந் தாழ்நிமிர்ந்திடு சென்னப்

பட்டணத் தெல்லீச னென்பவன் யானே

பண்டார காரியப் பாரஞ் சுமக்கையிற்

                புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்

                தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்

                திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய

                இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

                வல்லரணும் நாட்டிற் குறுப்பு

                என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து

இவ்வாறு திருக்குறள் காட்டும் நெறியில் ஓர் ஆங்கில அதிகாரி இயங்கியதாகப் பதிவு செய்திருப்பது எந்த அளவிற்குத் திருக்குறள் அவரைப் பாதித்திருக்கிறது என்பதை அறிய உதவி செய்கிறது. இது மட்டுமல்ல தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள எல்லீஸ் கல்லறை மீது எழுதியுள்ள கல்வெட்டு இப்படிச் சொல்லுகிறது:-

                எல்லீசன் என்னும் இயற்பெய ருடையோன்

                திருவள்ளுவப் பெயர் தெய்வஞ் செப்பி

                அருங் குறள் நூலுள் அறப்பா லினுக்குத்

                தங்குபல நூல் உதாரணக் கடலைப் பெய்(து)

                இங்கிலீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்

இவ்வாறு திருக்குறளை அக்காலக்கட்டத்தில் எல்லீசு மட்டுமல்ல பல்வேறு ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் ஜெர்மானியர்களும்3 மொழிபெயர்த்து ஐரோப்பா கண்டத்திற்குத் திருக்குறளை எடுத்துச் சென்றுள்ளார்.

                ஜார்ஜ் உக்ளோ போப் (G.U.Pope- 1820-1908) 1886ஆம் ஆண்டு “The Sacred Kural of Thiruvalluvar Nayanar with Introduction, Grammar, Translation Notes, Lexicon and Concordance” – என்ற தலைப்பில் விரிவான முன்னுரையுடன் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்தார் என்பதோடு அதை இலண்டனில் வெளியிட்டுத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார் என்பதும் பெரிதும் கவனத்திற்குரியதாகும். இங்கே ஒன்றைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த அளவிற்கு ஆங்கிலேயர்கள் பலரும் திருக்குறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவிற்குள் எடுத்துச் சென்றாலும் 19ஆம் நூற்றாண்டில் சிப்பாய்ப் போராட்டத்திற்குப் பிறகு 1858இல் நேரடியாக ஆங்கில அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்தியக் காலனித்துவ அரசு வரும்போது கல்கத்தாவையே தலைநகரமாகக் கொண்டு ஆண்டதாலும் முதலில் ஆங்கில வழிக் கல்வியைப் பெறுவதில் முந்திக்கொண்டு அரசாங்கப் பதவிகளையும் பிடித்துக்கொண்ட சமஸ்கிருதப் பார்ப்பன‌ர்களின் செல்வாக்குக் காரணமாகவும் திருக்குறள் ஆட்சியாளர்களின் பார்வைக்குப் போகாமல் ‘மனுஸ்மிருதி’ இந்தியத் தேசத்தின் மாபெரும் அற நூலாகக் கட்டமைக்கப்பட்டு முந்திக்கொண்டது. இதன் விளைவுதான் பின்னால் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘இந்துச் சட்டமென’ ஒன்று புகுந்தது. ஆங்கில மொழியில் இவ்வளவு மொழிபெயர்ப்புகள் நடந்தும் அதிகார அரசு நிர்வாக எல்லைக்குள் திருக்குறளை எடுத்துச் செல்ல முடியாமல் போனது பெரிய வியப்புக்குரிய ஒன்றல்ல; அப்படித்தான் நிகழும். ஏனென்றால் இந்தியாவின் ஆதிக்க அரசியல் என்பது உயர்சாதி, சமஸ்கிருத மேலாண்மை அரசியல்தானே!

III

திருக்குறள் மொழிபெயர்ப்புகள் நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில்தான் இராபர்ட் கால்டுவெல்லின் (1814-1891) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Language, 1856) என்ற தமிழர்களின் இன எழுச்சிக்கு ஆதாரமாக அமைந்த நூல் வெளிவந்தது. 53 ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றிய கால்டுவெல்லின் இந்தப் புத்தகம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஆற்றிய அளவிற்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.

             தமிழ், கிரேக்கம் இலத்தீன் மொழிகள் போல ஒரு செவ்வியல் மொழி.

             தமிழ்ச் சொற்கள் கிரேக்கம், இலத்தீன் மொழிகளில் இடம்பெற்றுள்ளன.

             தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. எனவே தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து வந்தது அல்ல.

             தமிழ், சமஸ்கிருத மொழிச் சொற்களின்றித் தனித்தியங்கும் ஆற்றல் உடையது.

             தமிழிலிருந்துதான் பிற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியன பிறந்தன.

             திராவிட மொழிகள் தெற்கில் மட்டுமல்ல, இந்தியாவின் நடுப்பகுதியிலும் இமயமலையை ஒட்டிய வடபகுதிகளிலும் பேசப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 இவ்வாறு திராவிடம், ஆரியம் என்று இனம், மொழி அடிப்படையில் இந்தியப் பெருங்கண்டத்தை அவர் தக்க சான்றுகளோடு பிரித்துப் போட்டார். இத்தகைய இவருடைய புதிய ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வேகப்படுத்தின. மேலும் அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் முதன் முதலாக விரிவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்து, திருக்குறளையும் விதந்தோதினார். ஏழு சுழல் வட்டமாகத் தமிழ் இலக்கியம் முழுவதையும் வகுத்துத் தந்தார்:-

1.            சைனமதச் சுழல் வட்டம் (கி.பி.8 - கி.பி.13)

2.            தமிழ் இராமாயணச் சுழல் வட்டம் (கி.பி. 13 நூற்.)

3.            சைவ மறுமலர்ச்சிச் சுழல் வட்டம் (கி.பி. 13 - 14)

4.            வைணவச் சுழல் வட்டம் (அதே ஆண்டுகள்)

5.            இலக்கிய மறுமலர்ச்சிச் சுழல் வட்டம் (கி.பி. 15 - கி.பி. 16)

6.            பார்ப்பன‌ எதிர்ப்புச் சுழல் வட்டம் (கி.பி. 17)

7.            தற்காலம் (கி.பி 18 முதல் 19 வரை)

இப்பகுப்பு முறை இன்றைய நோக்கில் குறையுடையதாகத் தோன்றினாலும் ஏறத்தாழ ‘வரலாற்று இருட்டில்’ கிடந்தது போலக் கிடந்த தமிழ் இலக்கியப் பரப்பில் அன்று இப்பகுப்பு முறை பெரும் வெளிச்சமாகத் தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

                இதே காலத்தை ஒட்டி 1862இல் “A Comprehensive Tamil and English Dictionary” என்னும் நூலை வெளியிட்ட ஐரோப்பிய அறிஞர் எம். வின்சுலோ முன்னுரையில் கால்டுவெல் போலவே இவ்வாறு எழுதினார்:-

 “சிலர் கருதுவது போல, இந்தியாவிலுள்ள தமிழ், சமஸ்கிருதத்தின் குழந்தையன்று… ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தால் பெருவளம் பெற்றிருக்கும் போது இத்தமிழ் மொழி மட்டும் தன் இனமான திராவிட மொழிகளிலிருந்தும் கூடக் கடன் பெற இணங்கவில்லை. … இலத்தீன்  உதவியின்றி ஆங்கிலம் இயங்குவதை விடச் சிறப்பாகச் சமஸ்கிருதத் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பது உறுதி….வட இந்திய மொழிகளை விடவும் பிற திராவிட மொழிகளை விடவும் சமஸ்கிருதச் சார்பின்றித் தமிழ் விளங்குவதற்குக் காரணம் அம்மொழிகளைப் போல இது சமஸ்கிருத பார்ப்பன‌ர்களால் மட்டுமே முதன்மையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான்” (M.Winslow Dictionary, 1983 (R. Print)

ஐரோப்பிய அறிஞர்களின் இத்தகைய சிந்தனை வரவு, சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீசபாஷை என்று கட்டமைத்திருந்த புனைவுகளை வீழ்த்தின. இதே காலக்கட்டத்தில்தான் 1835 இல் நடைமுறைக்கு வந்த மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் ஆங்கிலம் கற்ற உள்நாட்டுக் கல்வியாளர்களின் வருகையும் நிகழ்ந்தது4. கூடவே திருக்குறள் போலவே தொல்காப்பியம், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழம்பெரும் சிந்தனைக் களஞ்சியங்களாகவும் அழகியலின் அற்புத வடிவங்களாகவும் அமைந்த சூழலில் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் புதிய வேகத்தோடு கிளம்பியது. இந்த வேகமிகு மறுமலர்ச்சி இயக்கத்திற்குச் சிந்தனைத் தளத்தில் உரமாகவும் வலுவான ஆதாரமாகவும் நின்று நிலவியது திருவள்ளுவரின் திருக்குறளாகும். திருக்குறளைச் சமஸ்கிருதவாதிகள் கொண்டாடும் வேதத்திற்கு நேரான ஒன்றாக முன்னிறுத்திய மேற்கண்ட அறிஞர்கள் பலரும், வேதத்தை விட உயர்ந்தது திருக்குறள் என்றனர். வேதத்தில் மானுடப் பொதுமை இல்லை; திருக்குறளில் இருக்கிறது. வேதத்தில் பிறப்பு அடிப்படையில் உயர்வு/ தாழ்வு இருக்கிறது. திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது. வேதம், வைதீக மதம் சார்ந்தது; திருக்குறள் மதச் சார்பற்றது. வேதம் சடங்குகளை முதன்மைப்படுத்துகிறது. திருக்குறள் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனித ஒழுக்கத்தை, மனித நேயத்தை முன்னிறுத்துகிறது. இதுபோலவே சமஸ்கிருதத்திலுள்ள மனுஸ்மிருதிக்கு எதிராகவும் திருக்குறள் முன்னிறுத்தப்பட்டது; தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இப்படி எழுதினார்:-

                வள்ளுவர் செய் திருக்குறளை

                மறுவற நன்குணர்ந்தவர்கள்

                உள்ளுவரோ மனுவாதி

                ஒரு குலத்துக்கொரு நீதி

இவ்வாறு ஆதிக்கத்திலிருந்த சமஸ்கிருத சிந்தனை மரபிற்கு மாற்றான ஓர் உரத்த சிந்தனை மரபை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மேலெடுத்துச் செல்லத் திருக்குறள் அடிப்படையான பிரதியாக நின்று செயல்படத் தொடங்கியது.

IV

                தொடர்ந்து தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பல்வேறு கிளைகளாகப் பிரிந்தது. ஆனால் அவை அனைத்திலும் அடிப்படையாகச் செயல்பட்டது திருக்குறள் என்பது குறிப்பிடத் தக்கது. தாழ்த்தப்பட்டோரையும் பௌத்தத்தையும் முன்னெடுத்த அயோத்திதாசரின் (1845 – 1914) திராவிட மகாசன சங்கம் சார்ந்த செயல்பாடுகளிலும் திருக்குறளே ஆதாரமான பிரதியாகச் செயல்பட்டது. அயோத்திதாசர் புத்தரின் திரிபிடகம் மாதிரி திருக்குறளைத் ‘திரிக்குறள்’ என்றே வழங்கினார். தமிழ் மண்ணின் தூய்மையான விளைச்சல் திருக்குறள் என்று கொண்டாடினார்; மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்டோருக்கான பிரதி என விளக்கினார்.

இதுபோலவே காலனித்துவத்தைப் பயன்படுத்தி எழுந்த ‘சைவசமய மறுமலர்ச்சி இயக்கமும்’ திருக்குறளைத் தங்களுக்கான ஒன்றாக அடையாளப்படுத்தியது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்புகளில் வள்ளுவர் சைவ வேளாளர் மரபில் வளர்ந்தவர் என்ற புனைவுகள் கட்டமைக்கப்பட்டன.5

1916 இல் மறைமலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கமும் திருக்குறளை முன்னெடுத்துத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வேகமாக வளர்த்தெடுக்க முயன்றது. திருக்குறளிலுள்ள வடசொற்கள் எண்ணப்பட்டன. திருக்குறள் வழங்கும் சிந்தனைகள் தமிழர்கள் சிந்தனைகள் என முன்னிறுத்தப்பட்டன.

                1925இல் காங்கிரசில் இருந்து விலகிச் சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்றுக்கொண்ட ஒரே நூல் திருக்குறள் என்பது குறிப்பிடத் தக்கது. தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈரோடு வெங்கட்ட ராமசாமி (1879-1973) மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்டவர். எனவே இவற்றிற்கு எதிரான எதையும் சிறிதும் தயக்கமின்றித் தாக்கி வீழ்த்த முனைபவர். அந்த வகையில் தமிழிலுள்ள இலக்கியங்களையும் கடுமையாகச் சாடியவர். உங்கள் தமிழ் சாதியைக் கற்பிக்கும் தமிழ்; உங்கள் தமிழ் ஆரியத்தைச் சுமக்கும் தமிழ்; உங்கள் தமிழ் கடவுளையே பாடும் தமிழ்; உங்கள் தமிழ் புராணக் குப்பைகள் நிறைந்த தமிழ்; மூட நம்பிக்கை பொதிந்த தமிழ் என்றெல்லாம் பேசியவர்; இராமாயணத்தை எரித்தவர்.  கா. அப்பாதுரை, சாமி. சிதம்பரனார் போன்ற அவர் மதிக்கும் தமிழ் அறிஞர் பலராலும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையின் சின்னமாகப் போற்றப்பட்ட இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தையே ‘ஆரியக் கற்பனை’ என்றவர். அதையும் எரிக்க வேண்டும் என்று எழுதிய வாசுதேவ ஆச்சாரியார், சுப்பிரமணிய ஆச்சாரியார் ஆகியோர் கட்டுரைகளைத் தனது ‘விடுதலை’ இதழில் வெளியிட்டவர்; அத்தகைய பெரியார் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தூணாக விளங்கிய திருக்குறளைப் போற்றினார்:-

“நம் பண்டைத் திராவிடர் மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளியாகக் குறிப்பிட முடியும்." (பெரியாரும் திருக்குறளும் (தொ). ப. 5)

இவ்வாறு வள்ளுவத்தை ஏற்றுக்கொண்ட பெரியார், தனது கொள்கைக்கு ஏற்பத் தான் எதிர்க்கும் கீதைக்கு மாற்றாகத் திருக்குறளை முன் வைத்தார். வர்ணாசிரமத்திற்கு எதிராகத் திருக்குறளை முன்னிறுத்திப் போராடினார். எனவே இப்படிப் பேசினார்:-

“திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருதமுடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்." (மேலது, பக்கம். 5-6)

தன் கலகச் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு திருக்குறளையும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கலகப் பிரதியாகவே பெரியார் கண்டுரைத்த போது, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறளின் பங்களிப்பு பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது. பெண்களைக் குறித்த பார்வையில் சில குறைபாடுகள் இருந்தாலும் திருக்குறள் மானுட வாழ்வின் ஒழுக்கத்தை வலியுறுத்திய உன்னத நூல் என்றார். மேலும் மதச் சார்பற்ற நூல் என்பதை முன்னிறுத்தினார்.

“திருக்குறளைப் படித்தால் தர்மத்தின்படி நடக்க வேண்டும்; பித்தலாட்டம் செய்யமுடியாது; பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது”

என்றும்

 “திருக்குறளை முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கறி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?”

என்று எழுதினார். இவ்வாறு மாமிசம் என்பதை ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகப் பார்த்து வள்ளுவருக்கும் பதில் கூறியுள்ளார். இத்தகைய விவாதங்கள் தமிழ் மனப்பரப்பில் திருக்குறள் குறித்த உரையாடலை வேகமாக எடுத்துச் சென்றன.

தொடர்ந்து பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அறிஞர் அண்ணாதுரையும் தனது கொள்கைப் பரப்பிற்குத் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டார். “திருக்குறள் – ஓர் திருப்பணி” என்ற தலைப்பில் தனது கட்சிப் பத்திரிக்கையான ‘திராவிட நாடு’ இதழில் இவ்வாறு எழுதினார்:-

“குறள் ஏந்திச் செல்வோம்; நாடு நகரமெங்கும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பண்பாடு எது என்பதை மக்கள் அறியச் செய்வோம். அறம் பொருள் இன்பம் என்னும் அரிய பொருளை மக்கள் உணர மட்டுமல்ல நுகரவும் பணியாற்ற வேண்டும். புதிய பணி; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான். வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி!”

இவ்வாறு தி.மு.க.வின் தலைமை திருக்குறளை முன்னெடுத்த போது திருக்குறள் சாதாரண பொதுமக்கள் மத்தியில் எளிமையாய்ப் பரவத் தொடங்கியது. ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியச் சிந்தனையும் திருக்குறளை முன்னிறுத்தியது. ஊர்தோறும், நகரம்தோறும், திருக்குறள் மன்றங்கள் தோன்றின. பள்ளிகளில், கல்லூரிகளில் திருக்குறள் மனப்பாடப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், நாடகப் போட்டிகள் எனப் பொதுமக்கள் மொழியாகத் திருக்குறள் மாறியது.       மு. வரதராசனாரின் எளிய திருக்குறள் உரை, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், திருமண விழாவில் கட்சிக் கூட்டங்களில் பரிசாகக் கொடுக்கப்பட்டது. வ.உ.சி, திரு.வி.க, பாரதிதாசன் எனப் பலரும் திருக்குறளுக்கு உரைகண்டு கொண்டாடினர். ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் திருக்குறளுக்குத் தாங்களும் ஓர் உரை எழுதினால்தான் அவர் தமிழாசிரியர் என்று சொல்லப்படும் அளவிற்குப் பலரும் உரை எழுதிய வண்ணம் இருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தால் திருக்குறளும் திருக்குறளால் தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும் வளர்ந்ததன் விளைவுதான் திருவள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்க்கான சிலைகள், பேருந்தில் திருக்குறள், பாரீஸ் போன்ற உலக நகரங்களிலும் திருக்குறளுக்கான கலைக்கூடம் எல்லாம்.

நவீன உலகத்தின் அனைத்து நாகரிகங்களின் மையமாக விளங்கும் பாரீஸ் பெருநகரில் இவ்வாறு தொடர்ந்து தமிழர்கள் ஒன்றுகூடிப் பத்து ஆண்டுகளாக திருவள்ளுவர்க்கு விழா எடுத்து வருவதும் விழா மலர் வெளியிட்டு மகிழ்வதும் பெரிதும் பாராட்டுதற்குரியன. சாதி, மதம், குலம், வர்க்கம் முதலிய பேதங்களை எல்லாம் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் என்று ஒன்றிணைத்துக் கட்டிப் போடுவதற்கான வேறொரு நூல் திருக்குறளைப் போல எதுவும் இல்லை.

உலகம் முழுவதிலும் பரந்து கிடக்கும் தமிழ்த் தேசிய இனம் உள்நாட்டிலும் ஈழத்திலும் நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கும் நம் நிகழ்கால வாழ்வில், திருக்குறளை முன் வைத்து நாம் வலுவாக ஒன்றிணைய வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். அத்தகைய கடமையை உணர்ந்து செயல்படும் பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடத்து நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனம் கலந்த நன்றி! நன்றி!

அடிக்குறிப்பு

1.            Jean – Jacques Rousseau (1712-1776)

2.            Karl herinrich Marx (1818-1883) மூலதனத்தின் முதல்பகுதி. 1867இல் வெளிவந்தது.

3.            ஆங்கிலத்தில் 1840- W.H. Drew

            1871 – C.E. Gover (selection only)

            1873 - E.J. Robinson (240)

            1875 -  E.J. Robinson (I & II)

            1885 -  Rev. J. Lazarus

            1886 - G.U. Pope….. ( இன்னும் 45 பேருக்கு மேல்)

இலத்தீன் மொழியில் (3) (1730, 1856, 1865 – ஆண்டுகளில்)

பிரெஞ்சு மொழியில் (7) (1848, 1852, 1854, 1857, 1867, 1876, 1889)

ஜெர்மன் மொழியில் (4) (1803, 1847, 1854, 1865)

(இன்னும் பின்னிஷ், பொலிஷ், ரோமன், ருசியா, செக் என்று ஐரோப்பிய மொழிகள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

4.            ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை(1832-1900), வி. கனகசபைப் பிள்ளை (1855-1906), மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (1855 -1897), எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை (1866-1951), வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (1870-1903) முதலியோர்.

5.            “தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்து உலகஞ்ச் செய்த உயர் தவப் பயனாய்த் திருமயிலையில் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்து ஓர் சைவ வேளாளர் மரபில் வளர்ந்து கல்வி அறவொழுக்கங்களிற் தலைநின்று மார்க்க சகாயன் என்னும் சைவ வேளாளரது அருமைத் திருமகள் வாசுகி அம்மையை மணந்து நெய்தற்றொழிலை எத்தொழிலையும் விடக் குற்றமற்ற தொழிலெனக் கொண்டு கற்புக்கரசியாகிய அவ்வம்மையாருடன் தமது இல்வாழ்க்கையைச் சிறக்க நடத்தினர் என்பர்”

(திருக்குறள் மூலம் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1924)

- பேரா. க.பஞ்சாங்கம் (drpanju49@yahoo.co.in) 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 ' திருவள்ளுவரும் பிராமணியமும்' - மதிப்புரை

தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயும் திரவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயும், தமிழரே உலகெங்கும் ஒளி பரவுமாறு முதல் முதல் நாகரிகப் பண்பாட்டு விளக்கேற்றினவ ராயும், இருந்தும்; இற்றைக்கு 2500 ஆண்டுகட்குமுன் நாவலந்தேயத்திற் குள்ளும் 2000 ஆண்டுகட்கு முன் தென்னாட்டிற்குள்ளும் வந்து புகுந்த பிராமணர் என்னும் ஆரியப் பூசாரியர், தாமுந் தம் எச்சமரபும் பழங்குடி மக்களான தமிழரையும் திரவிடரையும் என்றும் அடிமைத் தனத்துள்ளும் அறியாமையுள்ளும் அமிழ்த்தி மேனத்தாக வாழுமாறு, தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் எடுப்பொலியையும் பயன்படுத்தித் தம்மை நிலத்தேவராகவும் தம் வழக்கற்ற முன்னோர் மொழியைத் தேவமொழியாகவும் காட்டி, தமிழ நாகரிகத்தின் தனிப் பெருஞ் சான்றாயிருந்த பல்லாயிரக்கணக்கான முதலிரு கழக நூல்கள் அத்தனையையும் அழித்துவிட்டனர். இன்று தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பைத் தாங்கி நிற்கும் இருபெருந் தூண்கள், இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடையிலெழுந்த தொல்காப்பியம என்னும் இலக்கண நூலும் திருக்குறள என்னும் இலக்கிய நூலுமே. இவ்விரண்ட னுள், பொதுமக்களும் புலமக்களுமான இருசாரார்க்கும் விளங்குவதும், மன்பதை முழுவதற்கும் உலகுள்ள வளவும் பயன்படுவதும், இன்றும் எம்மொழியிலும் இணையில்லாததும் திருக்குறளாகும். இவ்விரு நூல் களையும், தமிழ்நாட்டையே தாய்நாடாகவும் தமிழையே தாய்மொழி யாகவும் கொண்டு தமிழாலேயே பெரும்பாலும் வாழ்ந்து வரும் பிராமண ருட் சிலர், நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியரும் பதிப்பாசிரிய ரும் தாளாசிரியருமாயிருந்து ஆரிய வழியினவாகக் காட்டிக், கட்டுப்பாடா கவும் நன்றிகெட்ட தனமாகவும் தம் முன்னோர் ஏமாற்றை இன்றும் போற்றி வருகின்றனர். நூலாசிரியருட் சிறப்பாகக் குறிப்பிடற் குரியவர் வரலாற்றாசிரியர்.

முன்பு காளிக்கோட்டப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை வாசகராகவும், பின்பு சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுப் பழம்பொருட்கலைப் பேராசிரியராகவும், இருந்த (S) கிருட்டிணசாமி ஐயங்காரால் 1920-ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "இந்தியக் கலை நாகரிகத்திற்குத் தென்னிந்தியா உதவிய சில கூறுகள்" (Some Contributions of South India to Indian Culture) என்னும் நூல், 1942-ல் காளிக் கோட்டப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்றது. அதன் 6ஆம் அதிகாரம் "குறள் - ஒரு பண்பியல் தமிழ் இலங்கு நூல்" (The Kural - A Characteristically Tamil Classic")என்னுந் தலைப்பினது, அதில், திருக்குறளை ஓர் ஆரியவழி நூலாகவும் திருவள்ளுவரை ஓர் இழிகுல மகனாகவும், தம்மால் இயன்ற அளவு காட்டியுள்ளார்ர் அதன் ஆசிரியர். அதைப் பொறுக்க மாட்டாத உண்மைத் தமிழ்மகனாரும் மானியருமான(M.) சோமசுந்தரம் பிள்ளை என்னும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், 1946-லேயே அதைக் கண்ட துண்டமாக நறுக்கிச் சின்னபின்னமாகச் சிதைத்து வரலாற்றிற்கும் உண்மைக்கும் ஏற்ப வன்மையாகக் கண் டித்துத், "திருவள்ளுவரும் பிராமணியமும்" (Tiruvalluvar and Brahminism) என்னும் தலைப்பில் ஓர் ஆங்கிலச் சுவடியை இயற்றினார். அஃது இதுவரை புதையுண்டு கிடந்தது. இன்று தெள்ளிய தமிழறிஞரும், தேற்றிப் போற்றும் அருநூற் களஞ்சியரும், தமிழ்ப் பேராசிரியர்க்கெல் லாம் வழிகாட்டும் மொழித் தொண்டரும், கோடி பெறினுங் குன்றுவ செய்யாக் குடிப்பிறந்தாரும், உலகத் தமிழ்க் கழக நெறியீட்டுக் குழு வுறுப்பினரும், காஞ்சிப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலை வரும், ஆகிய பேரா. கோ. "இராமச்சந்திரன்" என்னும் நிலவழகனாரால் அது, சுந்தரம் பிள்ளை, பூரணலிங்கம் பிள்ளை, மறைமலையடிகள், கா.சுப்பிரமணியப் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், துடிசைக்கிழார் முதலிய தமிழச் சான்றோர் இல்லாக் காலத்தில், ஆரிய அடிமை நோய்க்கு அருமருந்தாக எளிய விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளின் பொருட்டமிழ்மையை எவரும் மறுக்கொணாச் சான்று காட்டி ஏரண முறைப்படி நிறுவும் இந் நூல் நெடுங்கால வுறக்கந் தெளியும் இற்றைத் தமிழனுக்கு மிகமிக வேண்டியதாம். இதை, ஆசிரியர்,

1. பர். (Dr.) எசு. (S.) கிருட்டிணசாமி ஐயங்கார் பொத்தகத்தி னின்று எடுத்த பகுதி (Extract from Dr. S. Krishnaswamy Iyengar"s Book.)

2. திருக்குறளும் பிராமண வாழ்க்கையின் நானிலையும் (The Kural and the Four Stages of the Brahminical Divisions of Life),

3. பரிமேலழகர் திருவள்ளுவரைப் பிறழவுணர்ந்தமைTiruvalluvar Misunderstood by Parimel-Alagar),

4. வரலாற்றாசிரியர் திருவள்ளுவரைத் தவறாகக் காட்டியுள்ளமை (Tiruvalluvar Misrepresented by the Historian),

5. திருக்குறளும் தென்னிந்திய இந்துக் குமுகாயமும் (Kural and the Hindu Society of South India),

6. அருத்தசாத்திரத்திற்குத் திருவள்ளுவர் கடப்பாடு (Tiruvalluvar"s Indebtedness to Artha Sastra),

7. திருவள்ளுவரும் அவர் குலமும் (Tiruvalluvar and His Caste).

என்னும் ஏழு பிரிவாக வகுத்துள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டுரை வடிவிலுள்ளது. முதற் கட்டுரைக் கூற்றுகளை மற்ற ஆறும் பகுதி பகுதியாக மறுக்கின்றன.

இரண்டாம் பிரிவில், திருவள்ளுவர் தமிழ முறைப்படி இல் வாழ்க்கை, துறவு என்னும் இருவகை அறவாழ்க்கை நிலைகளையே அறத்துப்பாலில் வகுத்துக் கூறியுள்ளாரென்றும்; ஆரிய அல்லது பிராமண வாழ்க்கையின் நால் நிலையுள் முதலதான பிரமசரியம் அடி யோடு விடப்பட்டுள்ளதென்றும், கிருகத்தன் இன்றியமையாது கடைப் பிடிக்க வேண்டிய வேதமோதுதலும் எரியோம்பலும் கூறப்படவேயில்லை யென்றும், இல்லறத்திற்கு இன்றியமையாத விருந்தோம்பலறம் பிராம ணர்க்கு நெறியிடப்பட வில்லை யென்றும், துறவுநிலை இல்வாழ்க்கையின் தொடர்ச்சியாகாது தனிப்பட்ட தென்றும்; மனைவியோடு காட்டில் வாழும் வானப்பிரத்தம் துறவு நெறியன்மையின் கொள்ளப்படவில்லை யென்றும், துறவுநிலை வானப் பிரத்தமும், சந்நியாசமும் என இரண் டாகாது ஒன்றேயென்றும், இருவகைத் தமிழ அறவாழ்க்கையும் எல்லார்க் கும் பொதுவாயிருக்க, நால்வகை ஆரிய நிலையும் பிராமணர்க்கே சிறப்பாக வுரியவென்றும்; திருக்குறள் அறத்துப்பால் இங்ஙனம் இம்மியும் ஆரியச் சார்பில்லதென்றும், விளக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பிரிவில், திருவள்ளுவர் ஆரியத்திற்கு மாறாகவே நூலியற்றி யிருக்கவும், பரிமேலழகர் அதற்குச் சார்பாக அதை இயற்றி யிருப்பதாகக் கூறியிருப்பது காட்டப்பட்டுள்ளது.

நாலாம் பிரிவில், 38ஆம் குறள் மனுதரும சாத்திரம் 5ஆம் அதிகாரத்திலுள்ள 155 அல்லது 156ஆம் சொலவத்தை யொத்த தென்றும், 166ஆம் குறட்கருத்து மகாபாரதப் பீடும பருவத்திலுள்ள தென்றும், 259 ஆம் குறள் மனுதரும சாத்திரம் 5ஆம் அதிகாரத்தி லுள்ள 53ஆம் சொலவத் தொடு ஒப்பு நோக்கத்தக்க தென்றும், வரலாற்றாசிரியர் கூறியுள்ளது மறுக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் பிரிவில், திருக்குறள் தமிழ்நாட்டுப் பிராமணரைப் போற்றுகின்ற தென்னுங் கூற்றுப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் பிரிவில், 501ஆம் குறள் சாணக்கியரின் அருத்த சாத்திரத்தைப் பின்பற்றியதென்னுங் கூற்றின் புரைமை காட்டப் பட்டுள்ளது.

ஏழாம் பிரிவில், இக்காலக் குலப்பிரிவு அக்காலத்திலில்லை யென்பதும், திருவள்ளுவர் குலம் இன்னும் அறியப்படவில்லை யென்பதும், தெரிவிக்கப்பட்டுள்ளன.

அழகிய நடையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ் வரிய நூல், பகுதி (Demy) யளவில் வழுவழுப்பான வெண்டாளில், முகவுரையுட்பட, 55 பக்கங் கொண்டுள்ளது. விலை 1 உருபா. பொத்தகம் வேண்டுவோர்,

பேரா. கோ. இராமச்சந்திரன், எம்.ஏ., தமிழ்த்துறைத் தலைவர், பச்சை யப்பன் கல்லூரி, காஞ்சிபுரம்-3, என்னும் முகவரிக் கெழுதிப் பெற்றுக் கொள்க. ஆங்கிலங் கற்ற தமிழர் அனைவரும் இதை வாங்குதல் தக்கதாம்.

ஆயிரக்கணக்காகச் சம்பளம் பெறும் பெரும் பதவித் தமிழ்ப் பேராசிரியர் "எங்கெழிலென் ஞாயி றெமக்கு"என்றிருப்பவும், தமிழைப் பழிக்கும் ஒரு நூலைக் கண்டித்துத் தமிழ்ப் பெருமையைக் காத்த தலைமையாசிரியரைத் தமிழ்நாட்டு அரசும் பல்கலைக்கழகங்களும் போற்றக் கடப்பாடுடையன. அவை அது செய்யாது போயினும், உலகத் தமிழ்க் கழகம் இவ்வாண்டிறுதியில் நடைபெறும் ஆட்டை விழாவில் அவரைப் பாராட்டி, "திருக்குறட் காவலர்" என்னும் பட்டமும் அளிக்கும் என உறுதி கூறுகின்றேன்.                      "செந்தமிழ்ச் செல்வி" மே 1970_________

 


__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

திராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Sep 15, 2013

 
 
 
 
 
 

இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம்.

காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே.

ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கீழ் கொண்டுவந்தபோது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதக் கலாச்சாரமே நிலவுவதாக நினைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. சமஸ் கிருதத்தை விடப் பல நூற்றாண்டுகள் பின்னர் தோன்றியவை ஐரோப்பிய மொழி கள். அவை தங்கள் கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்த முற்படும்போது தாம் அடிமைகளாக இருந்து அதை ஏற்றுக் கொள்வதா என்ற எதிர்ப்புமனநிலை தோன்றியது. இதனால் தேசியவாதிகள் சமஸ்கிருதத்தின் மேன்மை, இந்திய நாகரிகத் தின் பழமை, வேதங்களின் தொன்மை, உபநிடதங்களின் பெருமை போன்ற வற்றை வலியுறுத்தலாயினர். இந்தியா முழுவதும் ஒரு சமஸ்கிருத எழுச்சி ஏற்பட்டது. இதற்கு சமஸ்கிருத மொழியிலிருந்து நூல்களை மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்ததும் உதவியது.

இந்த சமஸ்கிருத எழுச்சியை தேசியவாதம், இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பாலகங்காதர திலகர், காந்தியடிகள், வினோபா பவே போன்ற தேசியவாதிகள் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதினர். மேலும் தேசிய இயக்கம், இந்தியா என்ற கற்பனையான ஒற்றைத் தேசத்தைக் கட்டி யெழுப்பி, அதற்கு ஒற்றைத் தேசியமொழியாக இந்தியை முன்வைத்தது.

இந்தியா முழுவதும் சமஸ்கிருதக்கலாச்சாரம் உண்மையில் என்றும் நிலவவில்லை, இன்றும் நிலவவில்லை. சமஸ்கிருதத்தை முற்றிலும் தவிர்த்தும் இயங்கக் கூடிய முக்கிய மொழியாகத் தமிழ் இருந்தது. சமஸ்கிருதத்தினாலேயே ஒதுக்கப்பட்ட,, ‘தேசி’ என்று சொல்லக்கூடிய நாட்டார் கலாச்சாரங்களும், பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரங்களும் இருந்தன. தெற்கில் திராவிடக் கலாச்சாரம் இருந்தது. மேலும் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பார்சி போன்ற பிறமதத்தினரும் இருந்தனர். இந்தியக் கலாச்சாரம் உண்மையில் பன்முகத்தன்மையுடையது. சமஸ்கிருதம் அல்லது இந்துமதம் என்ற ஒற்றைக் கலாச்சார அடையாளம் உடையதல்ல.

எனவே தேசியத்துடன் சமஸ்கிருதமும் இந்தியும் சேர்ந்துவந்தபோது அதை ஏற்றுக்கொள்ளத் தமிழகத்தில் மனத்தடை ஏற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கும் முற்பட்டதாகவோ உள்ளதோர் கலாச்சார அடையாளத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே தமிழர் தங்கள் அடையாளத்தை முன்வைக்க முற்பட்டனர். கலாச்சார அளவில் வடமொழியை எதிர்ப்பதாகவும், ஆதிக்கநிலையில் இந்தியை எதிர்ப்பதாகவும் இது அமைந்தது.

இன்னொரு வகையிலும் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1909இல் மிண்டோ மார்லி குழு இந்தியாவுக்கு வந்தபோது இந்தியச் சாதிகளை வகைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியது. சாதியடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை எழுந்தது. பார்ப்பனர்களே எல்லாப் பதவிகளிலும் அமர்ந்திருந்த நிலையில் அடுத்தநிலையில் படித்திருந்தவர்கள் தங்களுக்குப் பதவிகளில் தக்கவாறு இடஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டனர். தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதார் என்ற பார்வை உருவாக இதுவும் ஒரு காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிந்துவெளி அகழ்வாய்வு நடத்தப்பட்டது. சர் ஜான் மார்ஷல், இதனை நடத்தியவர். ஹீராஸ் பாதிரியார் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முற்பட் டவர். இவர்கள் இருவரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்தை வலுவாக முன்வைத்தனர்.

ஏற்கெனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ராபர்ட் கால்டு வெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளினின்றும் (சமஸ்கிருதம் இந்தோஐரோப்பிய மொழிகளில் ஒன்று) வேறுபட்டவை, தமிழ் அதன் மூலமொழி என்ற கருத்தை முன்வைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படலாயின. சங்கஇலக்கியங்கள் வாயிலாகத் தெரியவந்த கலாச்சாரம் முற்றிலும் வடநாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக, சிறந்ததாக இருந்தது.

இவை அனைத்தும் தமிழின் மேன்மையான இடத்தையும், திராவிட மொழிகளில் அதன் முதன்மையையும், சமஸ்கிருதத்தைவிட மூத்ததான அதன் கலாச்சாரத்தை யும் வலியுறுத்துவனவாக அமைந்தன.

எனவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்தே திராவிட நாகரிகம் பற்றிய சிந்தனையும் தமிழரின் தொன்மை பற்றிய சிந்தனையும் தமிழ்ப்பற்று மிக்க சிந் தனையாளர்களிடம் தோன்றியிருந்தன. இவ்விரண்டின் முதற்பிரதிநிதி பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை.

     ஆரியர் X திராவிடர், (ஆரியர்கள் = பார்ப்பனர், திராவிடர்கள் = தமிழர்)

     ஆரியரது மொழி சமஸ்கிருதம் X திராவிடரது மூலமொழி தமிழ்,

     ஆரியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவோர் பார்ப்பனர் X அதனை எதிர்ப்போர்      திராவிடர்

என்ற வகையில் இருமை எதிர்வுகள் முன்வைக்கப்பட்டன. (இன்றும்கூட பார்ப்பனர் கள் நடத்தும் உணவுவிடுதிகளுக்கும் ஆரியவிலாஸ் என்று பெயர்வைப்பதையும், பார்ப் பனர்கள் மட்டுமே ஆர்யா என்று பெயர்வைத்துக்கொள்வதையும் காணலாம். இது இன்றும் மேற்கொண்ட கொள்கைக்கு ஆதாரம் இருப்பதை நினைவூட்டுகிறது.)

இந்த எதிர்வுகளை உட்கொண்டு எழுந்ததுதான் திராவிட இயக்கம். எனவே திராவிடர் இயக்கம், பழமைவாத, மீட்புவாத இயக்கமாகக் காலத்தின் கட்டாயத்தினால் தோன் றிய ஒன்று.

ஆனால் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்குமான முரண் பழங்காலத்திலேயே தோன் றியிருந்ததை நம்மால் உணரமுடிகிறது. நக்கீரர் பற்றி வழங்கிவரும் கதை இதை உணர்த்தும். குயக்கொண்டான் என்பவன் சமஸ்கிருதம் உயர்ந்தது என்று வாதிட, நக்கீரர் தமிழே உயர்ந்தது என்று வாதிட்டும் இறந்தவனைப் பிழைக்க வைத்தும் நிரூ பித்ததாகக் கதை. இதனைத் தாழ்வு மனப்பான்மையினால் எழுந்த கதை என்றுதான் மதிப்பிட முடியும். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தமிழுக்கு இலக்கணம் எழுத முன்வந்தவர்களிடமும் காணலாம். இலக்கணக் கொத்து எழுதிய சாமிநாத தேசிகர் என்பவர், “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணுவரே அறிவுடை யோர்” என்று தமிழை இழித்துக் கூறியுள்ளார்.

’1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலினைப் படைத்த வி. கனக சபை, பழந்தமிழர் நாகரிகம் குறித்தும் திராவிடர் வரலாறு குறித்தும் முதன் முதலில் சிந்தித்தவர். திராவிட இயக்கத்தின் பிற முன்னோடிகள் எனப் பின்வருவோரைக் கூறஇயலும்: பரிதிமாற் கலைஞர், (பார்ப்பனராக இருந்தாலும் தனித்தமிழ் வளர்க்க முற்பட்டவர், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை முதன்முதல் வலியுறுத்தியவரும் ஆவார்), ஞானியாரடிகள் (சைவப்பற்று மிகுந்தவராயிருந்தாலும், திராவிட உணர்வி லும் தனித்தமிழ்ச் சிந்தனையிலும் ஈடுபட்டவர், இந்தித்திணிப்பை எதிர்த்தவர்), திரு.வி.க. (தூய தமிழும் காந்தியமும் சமுதாயச் சிந்தனைகளும் வளர உழைத்தவர்), இப்படிப் பலர் தமிழகத்தில் பழந்தமிழ்ச் சிறப்பையும் திராவிட இனப்பற்றையும் வளர்த்தனர். முற்றிலும் காந்தியவாதியாக இருந்த திரு.வி.க.வும், காங்கிரஸ் இயக்கத் தில் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கம் காரணமாகவே திராவிடச் சார்புக்கு மாற நேர்ந்தது.

‘திராவிட’ என்ற சொல்லை அமைப்பு ரீதியாக முதன்முதலாகப் பயன் படுத்தியவர் டாக்டர் சி. நடேசன். 1912இல் உருவாகிய சென்னை ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பிற்கு 1913இல் திராவிடர் சங்கம் என்ற பெயரை வைத்தவர். (திராவிடன் இல்லம் என்ற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசன் நடத்தினார்.) இந்தத் திராவிடர் சங்கமே நீதிக்கட்சியாக மாறியது என்று கூறுவர். 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து திராவிட இயக்கத்தைத் தொடங் கினார். (இதற்குப் பின்னணியில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய பாட சாலையில் உணவுப்பரிமாறலில் சாதிய நோக்கு கடைப்பிடிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இருந்தன.)

     பழங்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழை மட்டுமே குறிப்பதாக சமஸ்கிரு தத்தில் கையாளப்பட்டது. அது தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களைக் குறிக்கவில்லை. திருஞானசம்பந்தரை சங்கராச்சாரியார் திராவிட சிசு என்று குறித்தது நோக்கத்தக்கது. சமஸ்கிருதத்தின் வாயிலாக இந்த நோக்கு மலையாள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் பரவியிருந்ததால் அங்குள்ளவர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணவே இல்லை என்பது நோக்கவேண்டிய ஒன்று. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில ஆந்திரர்களும் மலையாளிகளும் நீதிக்கட்சியில் ஈடுபட்டிருந்தனர் (அவர்களும் திராவிட என்ற நோக்கினை ஏற்றவர்களா என்பது சந்தேகத்திற்குரியது.)

     1944 ஏப்ரல் 4இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்ற அண்ணாதுரை தீர்மானம் கொண்டுவந்தார். (சக்கரவர்த்தி இராஜ கோபாலாசாரியார் கொண்டுவந்த குலக்கல்வி முறையும் இந்தித்திணிப்பும் ஓரளவு இதற்குக் காரணங்கள். 1938இல் இதற்குமுன்பே முதல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றிவிட்டது.) அண்ணாவின் தீர்மானத்தை ஏற்ற பெரியார் ஈ.வெ.ரா., புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து திராவிடர் கழகம் உருவாகியது. சில ஆண்டுகள் பின்னர், பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்குப் பிறகு “கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டன.”

     இந்நிலையை    மாற்றப் பெரியார் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்

     யாமல் கழகத்தில் செயலாற்றிக் கொண்டிருப்பதால் இப்பொழுதிருக்கிற நாட்டு

     நிலையில் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று

     இக்கமிட்டி கருதுவதால் கழகக் கொள்கைகளும் இலட்சியமும் நசுக்கப்பட்டுப்

     போகும் என்று அஞ்சுவதால் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை

     ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவது

என்று தீர்மானம் கொண்டுவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா.

     சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை பெருகியது. 1930 முதல் 1965 வரை பேசியும் எழுதியும் பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துவந்தனர் திராவிட இயக் கத்தினர்.

     திராவிட இயக்கங்கள் செய்த பத்திரிகைப் பணி குறிப்பிடத்தக்கது. வடமொழி கலவாத தமிழை ஜனரஞ்சகப்படுத்தியதில் இப்பத்திரிகைகளுக்குப் பெரியபங்குண்டு. நாவல் சிறுகதை போன்ற துறைகளில் சாதனை படைக்கவில்லை என்றாலும், திரைப் படம், நாடகம், கவிதை, பத்திரிகைத் தமிழ் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது திராவிடஇயக்கம். பட்டிமன்றம் என்ற புதிய சமூகநிகழ்வினை அறிமுகப்படுத்தியதும் திராவிட இயக்கமே.

     பெரியார் 1925ஆம்ஆண்டு குடிஅரசு வார இதழைத் தொடங்கினார் பகுத்தறிவு  எழுத்தாளர்களுக்குக் குடிஅரசு இதழ் வாய்க்காலாக அமைந்தது. 1935ஆம் ஆண்டு விடுதலை நாளிதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது. 1942இல் திராவிட நாடு என்ற இதழை அண்ணா தொடங்கினார். 1949இல் மாலைமணி என்ற இதழைத் தொடங் கினார். 1953இல் நம்நாடு இதழ் தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியால் முரசொலி இதழ் 1942இல் தொடங்கப்பட்டது. 1963இல் அண்ணாவால் காஞ்சி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. தமிழ் உலகம், தனிஅரசு, தம்பி, தென்னகம், அறப் போர், தென்னரசு, அறிவுப்பாதை, போர்வாள் போன்ற வார ஏடுகளும், சமதர்மம், குயில், மன்றம், புதுவாழ்வு, குத்து£சி, பூமாலை போன்ற வார ஏடுகளும் நடத்தப் பட்டன.

     தமிழின் முதன்மையை வலியுறுத்தியவர்களில் இரு பிரிவினர் இருபதாம் நூற்றாண்டில் உருவாயினர். ஒருபிரிவினர், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, ஈ.வெ.ரா. பெரியாரின்பின் சென்றவர்கள். இன்னொரு பிரிவினர், சைவ சித்தாந்தக் கொள்கையே தமிழரின் தனிக்கொள்கை என்ற சிந்தனைகொண்டவர்கள். அநேகமாக இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பார்ப்பனரல் லாத புலமை/கல்வித்துறை ஆய்வாளர்கள் அனைவருக்கும் தமிழும், சைவமும் இரு கண்களாகவே இருந்தன. இவர்களை நாம் திராவிட இயக்கத்தினராக ஏற்க முடியாது என்றாலும் திராவிட இயக்கச் சார்பு கொண்டவர்கள் என நோக்கலாம். அல்லது சைவத்தமிழ் ஆய்வாளர்கள் என்று குறிக்கலாம். 1950வரை இந்த நிலை இருந்தது. அதற்குப் பின்னர், புதிய கல்வித்துறை ஆய்வாளர்கள் வந்த போது, அவர்கள் தமிழின் முதன்மையை ஏற்ற திராவிட இயக்கச் சார்பாளராக மாறினர். சைவம் பின்னுக்குச் சென்றது.

     திராவிட இயக்கச் சார்பான சைவசமயப் புலவர்கள், தமது நம்பிக்கைகளை உறுதியாக ஏற்றனர், அவர்கள் சில சமயங்களில் கம்பராமாயணத்தில் உள்ள ஆரியக் கற்பனைகளை மறுத்தும் எழுதினர். தாங்களே சமயத்தை நம்பும் இவர்கள், பிறர் நம்பிக்கைகளை மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஏன்? சைவசமயம் தமிழரின் முதற்சமயம் என்றால், அதில்மட்டும் புராணக்கதைகள் இல்லையா? இது போன்ற கேள்விகள் இவர்களிடம் ஏன் எழவில்லை என்பது நம் சிந்தனைக்குரியது. பார்ப்பன/ பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் இலக்கிய விமரிசனத்தில் ஈடுபட்டவர்களை திராவிட இயக்க இலக்கிய விமரிசகர்கள் எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

திராவிட இயக்க முன்னோடி, சைவத்தமிழ் ஆய்வாளர்-பெ. சுந்தரம் பிள்ளை

     திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி, மனோன்மணீயம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். மனோன்மணீய நாடகத்தில் தமிழ்த்தெய்வ வணக்கமாக இடம்பெற்ற செய்யுள்தான் இப்போது சிற்சில மாற்றங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ளது. இப்பாட்டில் ‘ஆரியம்போல் வழக் கொழிந்து போகாமல் இளமையாக உள்ளது தமிழ்’ எனக்குறிப்பிடுகின்றார். ‘கன்னட மும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்’ என்று தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய் என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டை திரவிடநாடு என்று குறிப்பிடுகிறார். இச்செய்யுளில் சில விமரிசனங்களும் உள்ளன.

     வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்

     உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி

என்பதில் வடமொழியின் மனுநூல் மீதான விமரிசனம் அடங்கியுள்ளது.

     பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

     எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

என்பதில் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களின் இயற்கையான கற்பனைநெறி வயப்பட்ட இலக்கியங்களைக் கற்றவர்கள் பொருளற்ற புராணக் கற்பனைகளை உடைய வடமொழிச் சார்பான நூல்களைப் படிப்பார்களோ என்ற விமரிசனத்தை முன்வைக்கிறார். புராணக்கதைகளையும் சாடுகின்றார். தமிழ், இயற்கையான கற்பனை நெறியில் அமைந்த இலக்கியங்களைக் கொண்டது, வடமொழி அவ்வாறல்ல என்பது உட்கிடை.

     வடமொழிப் புராணக் கதைகளில் சமஸ்கிருதத்தை உயர்த்த வேண்டுமென்று, கல்வித்தெய்வம் சரஸ்வதிக்கு வலது கண் வடமொழி எனவும், தமிழ் அவளுடைய இடது கண் எனவும் புனைந்துரைத்துள்ளனர். (வலப்புறம் உயர்வு, இடப்புறம் தாழ்வு என்ற கருத்து நிலை. இக்கருத்துநிலை பெண்ணை அடிமைப்படுத்துவதாக, சிவன்-பார்வதி அர்த்தநாரீஸ்வர உருவிலும் இருப்பதைக் காணலாம்). அதேசமயம், சரஸ்வதி கிழக்குநோக்கி அமர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தால், அவளது வலது கண் தெற்குப்புறத்திலும், இடக்கண் வடப் புறத்தி லும்தானே அமைந்திருக்க முடியும? எனவே தென்மொழியாகிய தமிழே வாணியின் வலக்கண் என்று புலனாகிறது என்று தர்க்கரீதியாக வாதிடுகிறார் சுந்தரம் பிள்ளை.

     முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை என்று கூறுவது பொருத்தமாகும். சென்னைக் கிறித்தவக் கல்லு£ரித் திங்கள் இதழிலே முதலில் கட்டுரைக¬ளாக வரையப்பெற்றுப் பிறகு நூல்வடிவம் பெற்ற இவரது ஆய்வுரைகள் குறிக்கத்தக்கன என்று கைலாசபதி கூறியுள்ளார். பத்துப்பாட்டு என்னும் பொருள் பற்றிப் பொது வாகவும் நெடுநல்வாடை பற்றிச் சிறப்பாகவும் சொல்லும் ஆய்வுரை The Ten Tamil Idylls  என்பது.

பெரியார் ஈ.வெ. ராமசாமி (1897-1973)

பெரியாரின் இலக்கிய விமரிசனம், அவருடைய பின்வரும் பணிகளோடு தொடர்புடையது.

1. பகுத்தறிவு-கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு.

2. சீர்திருத்தம்-எழுத்துச் சீர்திருத்தம், புராண இதிகாச எதிர்ப்பு, கலப்பு மணம், கைம் பெண் மணம், பெண்ணுரிமை.

3. ஆரிய எதிர்ப்பு-கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை, விழாக்கள் ஆகியவற்றை எதிர்த்தல்.

4. பொதுவுடைமைச் சார்பு-நிலவுடைமை சார்ந்த கருத்துகளை எதிர்த்தல், வர்க்கப் பிரிவு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை எதிர்த்தல்.

5. இலக்கியம்-புராணங்கள், இதிகாசங்கள் எதிர்ப்பு, மொழி பற்றிய கருத்துகள்.

     பெரியார் ஆராய்ச்சிநூல்கள் எழுதவில்லை. சொற்பொழிவாளராகவே இருந்தவர். மக்களை நேரடியாகச் சென்று அடையவேண்டும் என்பதே அவரது நோக்கம். அவருடைய சொற்பொழிவுத் தொகுதிகள் நூல்களாக வந்துள்ளன. வே. ஆனைமுத்து வின் பெரியார் சிந்தனைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு முக்கியமானது.

மொழி பற்றிப் பெரியார்

     பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர் வாழ்நாள் முழுதும் ஆங்கிலத்தைக் கொண்டாடுவதையும் தமிழை இழித்துப் பேசிவந்ததையும் காணலாம். குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் கருத்து களைப்பகிர்ந்து கொள்ளத் தாங்கள் உணர்வதிலிருந்து எழுந்ததே மொழி என்னும் அவருடைய கருத்து குறையுடையது. மொழி வெறும் பகிர்வுச்சாதனமாக மட்டும் அமைவதல்ல. அது பண்பாட்டையும் உருவமைக்கிறது என்ற விஷயத்தை அவர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை.

     தொல்பழங்காலத்திற்கு முன்னரே மக்களினம் எல்லாம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பின் ஒரே மொழி உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பது பெரியாரின் கருத்து. (விடுதலை 15-10-1962 தலையங்கம்). இது கத்தோலிக்கக் கிறித்துவச் சிந்தனை.

     எவ்வாறு மதமானது புகுத்தப்படுகிறதோ அவ்வாறே தாய்மொழியும் புகுத்தப்

     படுவதுதான். மொழிமீது வீணான பற்றுக் கொள்ளக்கூடாது. ஒன்றன் பயனறியாமல்

     தொடர்போ மதிப்போ பற்றோ வைக்கக் கூடாது. ஒருமொழியின் தேவை

     முக்கியத்துவம் எல்லாம் அது பயன்படுகிற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது

     எவ்வளவு பெரிய காவிய, இலக்கியங்களை உடைய மொழியாக இருந்தாலும் சரி.

     மொழி அன்றாட வாழ்வில் அறிவை வளர்ப்பதாக எப்படி உதவுகிறதோ அதைக்

     கொண்டே மொழியை அளக்க வேண்டும்.

என்று விடுதலைஇதழ்க் கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

     பயனற்ற ஒன்றை முயன்று கற்பது அறிவற்ற செயல், அதனால் ஆங்கிலத்தைக் கற்கவேண்டுமே தவிர தமிழைக் கற்பதில் பயனில்லை என்றார். சாதிநோக்கிற்காக வடமொழியை இகழ்ந்த பெரியார், சாதியை வெறுத்து சமதர்மத்தை மலரச்செய்ய உதவுவது ஆங்கிலமே என்றார். ஆனால் இப்படிப்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் எப்படி மனமுவந்து ஈடுபட்டார் என்பது நம் மனத்தில் எழும் கேள்வி.

     சமூகத்தில் மொழிபற்றி வழங்கிவரும் இருவிதக் கருத்துகளைக் காணலாம். ஒருவிதநோக்கு, மொழி கருத்துணர்த்துவதற்கும் வாழ்க்கையில் பலவிதமான பயன் பாடுகளுக்குமான கருவியே என்பதாகும். இதனைக் கருவிநோக்கு (Instrumental outlook)எனலாம். இப்படிப்பட்டவர்கள் நமக்கு ஆங்கிலம் பயன்படுமானால் அதனையே தாய் மொழியாக வைத்துக்கொள்ளலாமே என்று சொல்பவர்கள். ஆங்கிலப் பள்ளிகளையும் ஆங்கிலக் கல்வியையும் வலியுறுத்துபவர்கள். நம்நாட்டில் பெரும்பாலான பார்ப்பனர் களிடமும் மேட்டுக்குடி மக்களிடமும் இத்தகைய நோக்கே உள்ளது. பெரியாரின் நோக்கு இதிலிருந்து வேறுபட்டதன்று. மொழிபற்றிய வெற்றுக் கூச்சல்கள் கூடாது, அதனால் மொழி வளராது என்ற அளவில் பெரியாரது கருத்துகளை நாம் உடன்படலாம்.

     இன்னொருவித நோக்கு கலாச்சார நோக்கு (Cultural outlook). மொழி வெறும் கருவியல்ல. நமது கலாச்சாரத்தை நமக்குள் உருவாக்குகின்ற ஒன்று. மொழியின்றிக் கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இல்லை. எனவே நமது பண்பாட்டை நாம் அறிந்து போற்றவும் அதனைக் கடைப்பிடிக்கவும் மொழி என்பது மிக முக்கியமானது. கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது மொழி என்பதால் நமது வாழ்க்கையோடும் இரண்டறக்கலந்த தொடர்புடையது. இம்மாதிரி நோக்குதான் பெரியாரைத் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தவர்களுக்கு இருந்தது. எனவே தமிழுக்காக உயிரும் கொடுப் போம் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்தி எதிர்ப்பில் ஈடுபட் டார்கள். பாவாணர் முதல் பெருஞ் சித்திரனார், குணா வரை இத்தகைய நோக்கில் ஊறியவர்கள்.

     இந்தப் பார்வையின் கிளைத்தேற்றங்கள் பின்வருமாறு அமையும்:

1. மொழி நமது கலாச்சாரத்திற்கு ஆதாரமானது. எனவே அதைப் பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அழிந்துவிடும்.

     (அதனால்தான் மொழிக்காவலர், முத்தமிழ்க்காவலர் போன்ற காவல்காரச் சொற்களை விரும்பிப்பட்டங்களாக ஏற்றார்கள் திராவிட இயக்கத்தினர்)

2. மொழி அழிவதிலிருந்து காப்பாற்றவேண்டுமென்றால் புதிதுபுதிதாகச் சொற்களை உருவாக்க வேண்டும். அவை தனித்தமிழ்ச் சொற்களாக அமையவேண்டும்.

     (இதன் விளைவாகத் தமிழுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. குறிப்பாக முப்பதுகளின் இறுதியில் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் கலைச்சொல்லாக்கத்தில் ஆற்றிய பணி சிறப்பானது).

     மூன்றாவதான ஒரு சிந்தனைப் போக்கும் உள்ளது. அதுதான் மிகவும் முக்கியமானது. மொழியின்றிச் சிந்தனை இல்லை. ஒருவன் குழந்தைப் பருவத்தில் சிந்திக்கத் தொடங்குவதே மொழியின் வாயிலாகத்தான். மொழியற்ற விலங்குகளுக்கோ, அல்லது ஓநாய்மனிதன் (நாகரிகமின்றி விலங்குகளுக்கு மத்தியில் காட்டில் வளர்ந்த மனிதன்) போன்றவர்களுக்கோ சிந்தனை என்பது கிடையாது. அடிப்படை உள்ளுணர்வுகள் (basic instincts) மட்டுமே உண்டு. பசி, பாலியல் நாட்டம், எதிரிகளிடம் பயம் போன் றவை அடிப்படை உணர்வுகள். எனவே மனிதன் மனிதனாக இருப்பதில் சிந்தனை-பகுத்தறிவு மிக முக்கியமானது. பகுத்தறிவை உண்டாக்குவது மொழி. ஃப்ராய்டுக்குப் பின்வந்த லக்கான் போன்ற பின்னமைப்புவாதிகள், மனிதன் சமூகத்திற்குள் புகுவதே மொழியின் வாயிலாகத்தான் என்று கூறியுள்ளனர். எனவே மொழியில்லையேல், சிந்த னையில்லை, சமூகம் என்பது இல்லை, பண்பாடு இல்லை, சுருங்கச் சொன்னால் எதுவுமே இல்லை.

எழுத்துச் சீர்திருத்தம்

     மொழியும் எழுத்தும் ஒன்றே எனப் பலர் நினைக்கின்றனர். அது தவறு. ஒரு மொழியைப் பலர் பலவிதமான எழுத்துமுறைகளால் எழுதலாம். அதனால் மொழி மாறுபடுவதில்லை. எந்த எழுத்து வகையில்-லிபியில் எழுதினாலும் மொழி தனது தனித்தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை. சமஸ்கிருதம், கிரந்தம், நாகரி, ரோமன் முதலிய எழுத்து வடிவங்களில் இன்று எழுதப்படுகிறது. ரோமன் லிபியில் படிக்கும் ஒருவன் தான் சமஸ்கிருதம் படிப்பதாக உணர்கிறானே ஒழிய ஆங்கிலமோ, ஜெர்மனோ படிப்பதாக நினைப்பதில்லை. இதற்குக் காரணம் மொழி என்பது லிபி யில் (எழுத்துவடிவத்தில்) இல்லை,

     (இன்று தமிழ்வாக்கியங்களையும் ரோமன் எழுத்துவடிவில் எஸ்எம்எஸ் அல்லது மின்னணுஅஞ்சல் போன்றவற்றில் அனுப்பும் வழக்கம் வந்துவிட்டதால் இந்தக் கருத்து இக்கால இளைஞர்களுக்கு எளிதில் புரியும்.)

     மேலும் லிபி அல்லது எழுத்துமுறை அல்லது வரிவடிவம் என்பது காலத் திற்குக் காலம் மாறி வருவது. தமிழின் எழுத்துமுறை எப்படியெல்லாம் மாறிவந்திருக் கிறது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்ற எழுத்து வல்லுநர்கள் பல நூல் களில் விளக்கியுள்ளார்கள். பெரியார் எழுத்தைப்பொறுத்தவரையில் மிகவும் முன் னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அதனால் எழுத்தமைப்பில் சில சீர்திருத் தங்களைச் செய்தார். அவை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கிய விமரிசனம்

     தமிழிலக்கியம் எல்லாமே பார்ப்பனரின் வருகைக்குப் பின்னர் இயற்றப் பட்டதே. தமிழனுக்கு என்று தனித்த இலக்கியம் ஒன்று கூட இல்லை என்பது பெரியார் கருத்து. சங்க இலக்கியத்திற்குப் பிறகு தமிழரின் நாகரிகம் பண்பாடு கலை போன்றவற்றைக் காண்பது அரிது. நமக்கு இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் கடவுள் தன்மையைப் புகுத்தக்கூடியதாக, மடமையை வளர்க்கக் கூடியதாக, அறிவைப் பாழாக்கக்கூடியதாக, நம்மை மானமற்றவராக்கி இழிவு படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. நமது இலக்கியங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்கிறார். சில சமயங்களில் பெரியாரின் வாதங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும்:

     பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ்படித்துச் சாமி

     யானவர்கள். தமிழ் படித்தவனெல்லாம் சாமியானானே தவிர எவனும் பகுத்தறிவு

     வாதியாகவில்லை.

     சங்கஇலக்கியம் பற்றிப் பெரியார் அதிகம் பேசவில்லை. அவர் அதிகமாகக் குறைகூறாத ஒரே இலக்கியம் திருக்குறள்தான்.

திருக்குறள் பற்றிப் பெரியார்

     வள்ளுவர் யார், எந்தக் குலதைச் சார்ந்தவர் என்று நிச்சயமாகக் கூறமுடி

     யாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர்;

     அவைகளை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது…குறளாசிரியர்

     கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. குறளில் அறம்

     பொருள் இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர, வீடு-மோட்சம்

     பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை…திருக்குறளின் முதல் அத்தியாயத்தில்

     கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக்

     கொள்கைகள் இடம்பெறவில்லை. கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப்

     பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் கையாள

     வில்லை…வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு

     நற்குணத்தை வைத்து அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதாகவே பத்துப்

     பாட்டிலும் பத்துவிதமான குணங்களைக் கூறினார்

என்பவை பெரியாரின் கருத்துகள்.

     குறள் முக்காலத்திற்கும் முழுவதும் பொருந்துமென்பது தவறு. இக்காலத்திற்கு ஒவ்வாதனவும் சில அதில் உண்டு; குறளில் காணப்படும் அனுபவ உண்மைகளும், அறிவுப் பண்புகளும், இழிவுநீக்க முயற்சிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் பெரும் ஆதரவு தரக்கூடியனவாய் உள்ளன. திருக்குறளில் ஆபாசத்திற்கு இடமில்லை. பாவம் என்பதற்காக பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இடமில்லை. அதனால் தான் அதைக்காட்டிப் பிழைக்கமுடியாது எனக் கருதினர் ஆசாரியர். அதனால் திருக்குறள் அதிக செல்வாக்குப் பெறமுடியாது போயிற்று. திருக்குறள் பெருமையை அடையாததற்குக் காரணம், அது ஒரு திராவிட நூல் என்பதால்தான். குறளிலும் ஆரி யத்திலுள்ளது போலச் சில காட்டுமிராண்டிப் பண்புகள் உள்ளன. மூடநம்பிக்கையும் நிறைந்துள்ளது என்றும் பெரியார் கூறுகிறார்.

சிலப்பதிகாரம் பற்றி

     சேரன் செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனின் சூழ்ச்சிவலை

     யில்சிக்கி ஆரியத்திற்கும் ஆரியமடமைக்கும் மண்டியிட்டவன் ஆனான். ஆரியப்

     படையை வென்ற சேரனால் ஆரியப் பஞ்சாங்கத்தை வெல்லமுடியவில்லை.

     சிலப்பதிகாரத்தால் தமிழகம்பெற்ற பயன் யாது? ஆரியத்தை வென்ற வீரமா?

     ஆரியத்தின் முன் வீழ்ந்த வீழ்ச்சியா?

     கண்ணகி சாபமிட்டு மதுரையை எரிக்கும்போது ஆரியர்களைத் தீ எரிக்கக்

     கூடாது என்று கட்டளையிடுகிறாள்.  இது எப்படிப்பட்ட சூழ்ச்சி?

     சிலப்பதிகாரமானது போன ஜன்மத்தையும் வருகிற ஜன்மத்தையும் கூறி

     தலைவிதியைக் காட்டி மனிதனை இழிவுக்கு அழைத்துச் செல்கிறது. முட்டாள்

     தனமான கற்பையும் பெண்ணடிமைத் தனத்தையும் வலியுறுத்தும்

     சிலப்பதிகாரம் நமக்குத் தேவையா?

     பாண்டியன் விசாரணை செய்து தண்டனை கொடுத்தான் ஆனால் கண்ணகி

     விசாரணை எதுவும் புரியாமல் அப்பாவி மக்களைக் கொல்கிறாள். அவள்

     எப்படிக் கற்புக்கரசியாவாள்? வணங்குவதற்கு உரியவள் ஆவாள்? தெய்வம்

     ஆவாள்? பாண்டியன் குற்றவாளி என்பதுதானே சிலப்பதிகாரக் கதையாக

     உள்ளது? தமிழனைக் குற்றவாளியாக்கிக் காட்டுவதுதான் தமிழர் பண்புகூறும்

     இலக்கியமா?

இப்படியெல்லாம் வினவும் பெரியார் தமக்கே உரிய முறையில் சுருக்கிச்சொல்லி விடுகிறார்: “சிலப்பதிகாரம் விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்”.

     கம்பராமாயணத்துக்கும் சிலம்புக்கும் இந்த நாட்டில் மதிப்பு இருக்கிறது என்றால் இந்த

     நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லை, மானமும் இல்லை, இன உணர்ச்சியும் இல்லை

     என்றுதானே பொருள்…இவைகளின் தன்மையே இப்படி இருந்தால், இவைகளைத்

     தாங்கி நிற்கும் தேவாரம், திருவாசகம், திருமறை, பிரபந்தம், பெரியபுராணம் முதலிய

     குப்பை கூளங்களின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இராமாயணம் பற்றி

     பெரியாருடைய இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் 1930இல் வெளி வந்தது. இராமாயணப் பாத்திரப் படைப்பின் ஆபாசத்தைச் சுட்டிக்காட்டுவதாக அந்நூல் உள்ளது.

     புத்தநெறி, ஓரளவிற்கு அறிவூட்டுவதாக அமைந்ததால் அதை அழிததுத் தம் நெறியைப் புகுத்தவே இராமாயணக் கதை உருவாக்கபட்டது. புத்தருக்குப் பின்னரே இராமன் கிருஷ்ணன் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டன.

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனை சிற்றின்ப சாக ரம். ஒருவிதத்தில் இது ஒரு காமத்துப்பால். அதன் நடப்பு காட்டுமிராண்டித் தனத்தின் உருவம்.

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ அல்ல.

2. காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியைக் கொண்டது. ஆரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

3. கோர்வையற்றது. முன்னுக்குப் பின் முரணாக உள்ளது, மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல.

4. உண்மையான வீரமும் யுத்த முறையும் இல்லாது கற்பனைவீரமாக உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 அண்ணாதுரை (1909-1969)

     தி.மு.க. என்னும் கட்சியைத் தொடங்கி 1967இல் ஆட்சியைப் பிடிக்க வைத்தவர் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா. தமிழ் மொழி, இலக்கியம், இனம், நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் உணர்வூட்டினார். சிறந்த பேச்சாளராகவும் ஓரளவு நல்ல எழுத் தாளராகவும் திகழ்ந்தார். பத்திரிகைக் கட்டுரைகள், நாடகம், திரைக்கதை, அரசியல் தமிழ், கடித இலக்கியம் என அவரது உரைநடைப் பணி பரந்துபட்டது. எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார். அதனால் அறிஞர் அண்ணா என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

     உரைநடையில் புதிய இலக்கிய வடிவங்கள் பலவற்றை அண்ணா அறி முகம் செய்தார். ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம், கார்ட்டூனாயணம் என்பவை அவற்றுள் சில. மாலைப்பொழுதில், திண்ணையிலும் குளத்தடியிலும் மரத் தடியிலும் ஆண்கள் ஊர்வம்பு அளப்பதுண்டு. இதனை ஊரார் உரையாடல் என அண்ணா வெளியிட்டார். அரசியல், சமுதாயநிலை பற்றி இவற்றில் விளக்கமாகப் பேசுவார். பெண்கள் ஓய்வுநேரங்களில் ஒன்றுகூடி ஊர் வம்பு அளப்பர். இதனை அந்திக் கலம்பகம் என்ற பகுதியாக ஆக்கினார். இவற்றில் மக்கட்பண்புகளையும் அரசியல் போக்குகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அறிவியல் செய்திகளையும் எழுதி னார். அரசியல் கார்ட்டூன்களை வைத்து நகைச்சுவையாகக் கார்ட்டூனாயணம் என்ற பெயரில் எழுதினார்.

     அண்ணாவின் கட்டுரைகள் இலக்கிய மணம் உடையவை. அவரால் தமிழகத் தில் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை பெருகியது. அண்ணாவின் எழுத்தினால் இதழ்ச் செய்திகள் இலக்கிய வடிவமாயின. தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல், கடிதம், என்னும் வடிவங்களில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனை களை அளித்தார். நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தார். நீதிதேவன் மயக்கம், கண்ணீர்த் துளி, இரக்கம் எங்கே, கல்சுமந்த கசடர் என 46 நாடகங்கள் எழுதினார்.

     சில நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அண்ணாவின் மொத்தப்படைப்புகளாக சுமார் 1235க்குமேல் உள்ளன. இவை பதிப் பிக்கப்பட்டவை மட்டுமே. இன்னும் பல அவருடைய குறிப்பேடுகளில் உள்ளன. இதழ்களில் ஆசிரியர் என்ற முறையில் அவர் தீட்டிய இதழுரைகள் இரண்டாயிரத் திற்கும் மேல் என்பர். மேடைப்பொழிவுகள் கிடைப்பவை 200 இருக்கலாம். சட்ட மன்றச் சொற்பொழிவுகள் 1760 என பி. இரத்தினசபாபதி குறிப்பிடுகிறார்.

     ஆரியமாயை, நாடும் ஏடும், ஏ தாழ்ந்த தமிழகமே, நிலையும் நினைப்பும், தீ பரவட்டும், கம்பரசம், போன்ற நூல்களிலும், திராவிட நாடு, காஞ்சி, போன்ற இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் இலக்கியவிமரிசனங்கள் உண்டு.

     அண்ணாவின் காலத்திற்குமுன் இதழ்களில் மணிப்பிரவாளமும் கொச்சை மொழியும் ஆங்கிலக்கலப்பும் ஆட்சிசெய்தன. விடுதலை, குடிஅரசு, திராவிடநாடு இதழ்களில் தொடர்ந்து எழுதி இந்நிலையை மாற்றினார் அண்ணா. இதழ்களில் செய்திகள், இலக்கியவடிவம் பெறத் தொடங்கின. இதழியல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நெறிமுறை உருவானது. இதனால் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை அதிகமானது.

     தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், கற்பனை உரையாடல், கடிதம், இசைப்பாடல், கருத்துரை, திறனாய்வு, குறிப்புகள், கார்ட்டூன் போன்ற பகுதிகளில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனைகளை வழங்கியுள்ளார். சௌமியன், வீரன், குறும்பன், பரதன், துரை, சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, காலன், சம்மட்டி, பேகன், வழிப்போக்கன், வேலன், சிறைபுகுந்தோன், பாரதி, கொழு, நக்கீரன், கிராணிகன், சாவடி, பித்தன் போன்ற  புனை பெயர்களில் எழுதியுள்ளார். ஒரு முழு நேர அரசியல்வாதி என்னும் நிலையில் அவர் செய்த இந்தப் பணிகள் மிகப் பெரியவைதான்.

மொழி எளிமை அவர் வற்புறுத்திய ஒன்று.

     இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பைமேட்டுக்கு வரத் தயாராக

     இருக்கவேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்

     காரனும் ஏழையும் படித்துணரும்பாங்கிலே எளிய நடையிலே இயற்கைக்

     கருத்துகள் கவின்பெற எடுத்துரைத்தும், ஏடுகள் எழுதப்படவேண்டும்.

என்று கூறும் அண்ணா நம்நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் இதற்கு நேர்மாறாகச் செய்து விட்டனர் என்கிறார். பகுத்தறிவற்ற தன்மையுடனே நம் இலக்கியங்களைப் பண்டிதர்கள் உருவாக்கினர். இதனால் சிற்றறிவுடையோர் நூல்களைப் படித்துச் சிந்திக்க முடியாவண்ணம் ஆகிவிட்டது என்று அவர் கூறினாலும், இது முழுவதும் ஏற்கக்கூடிய கொள்கை அல்ல. ஓர் அரசியல்வாதி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவில் இது சரி.

     இலக்கியங்களுக்கு உரைஎழுதும்போது அவ்வுரை எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால் நம் இலக்கிய உரைகள் மூலநூலைவிடப் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன என அண்ணா கூறுகிறார்.

     நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை

     கலையட்டும். நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்

     மக்கள், மக்கள் வாழ்க்கை, நாகரிகம், இன்னபிறவும் தெள்ளிதின் விளங்

     குதல் வேண்டும்.

என்பதில் இலக்கியத்தின் சமகாலத்தன்மையை வலியுறுத்துகிறார்.

     ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தில் நிலைக்கும் கருத்திற்கும்

     பொருந்தாவெனின் அவை மாற்றப்பட வேண்டும். அந்தந்த காலத்திற்

     கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். மக்கள் உள்

     ளத்தில் உண்மையை உள்ளவாறு ஊட்டும் ஏடுகள்தான் தேவை. மடமை

     யை மடியவைக்க வழிகோலும் வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்

     கள், கதைகள்தான் தேவை. அங்ஙனமில்லாத ஏடுகள் நமக்கு வேண்டாம்.

புதிதாக உருவாக்கும் ஏடுகளை நம் விருப்பத்திற்கு ஆகலாம். பழைய ஏடுகளை மாற்றுவது எப்படி?

     நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலுபக்கமும் வேலிகள் அமைத்து அங்கே எட்டாத அளவிற்கு எழுப்புச் சுவரை எழுப்பி “உள்ளே ஆடுது காளி, வேடிக்கை பார்க்க வாடி” என்பதுபோலத் “தொல்காப்பியத்தைப் பாரீர்! அதன் தொன்மையைக் காணீர்!” என்று கூறினால் அதனிடம் யார்தான் போவார்கள் என்று சங்க இலக்கியத்தைப் பண்டிதர்கள் ஒளித்துவைத்து விட்டதாகக் கூறுகிறார் அண்ணா.

     தொல்காப்பியத்தைச் சிறுசிறு நூல்களாக வெளியிடவேண்டும். சங்க இலக்கியங்களைச் சிறுசிறுபகுதிகளாக வெளியிடவேண்டும். எல்லோர் வீடுகளிலும் இந்நூல் கள் இருக்க வகைசெய்யவேண்டும் என்பது 1947ஆம் ஆண்டிலேயே அண்ணா சிந்தித்த ஒன்று.

     சங்க இலக்கியப் பாடல்களின் செய்திகளைப் புராணக் கதைக¬ளாக மாற்றி யிருக்கிறார்கள். சான்றாக, மேடையில் நடிக்கப்படும் வள்ளி திருமணத்தைக் கூறலாம். வேட்டைக்குச்செல்லும் தலைவைனைப் பெண்ணொருத்தி கண்டு காதல்கொள்கிறாள். யானையன்று பிளிற அவள் அவன் தோள்களில் சாய்கிறாள் என்பது குறிஞ்சிப் பாட்டின் செய்தி. இச்செய்தியே மதச்சாயம் பூசப்பட்டு வள்ளி திருமணம் ஆகியுள்ளது என்று மானிடவியல்நோக்கில் விமரிசனம் செய்கிறார்.

     ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அகம் புறம் என்னும் அமைப்புகள் இரண் டினை அறிந்து அவை மக்கட்குத் தேவை என்பதால் புலவர் இயற்றினர். கட்டற்ற களியாட்டத்திற்கு அல்ல. இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை ஒரு கலை. அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்பதற்காகவே சங்கப்பாடல்கள் இயற்றப்பட்டன என்ற கருத்தையே பின்னர் வ.சுப.மாணிக்கம் உளவியலின் துணையோடு தமது தமிழ்க்காதல் நூலில் நிரூபித்துள்ளார்.

     புராணங்களை அண்ணா பலநிலைகளில்நோக்கித் தம் விமரிசனக் கருத்து களை இதழ்களில் எழுதியுள்ளார். குறிப்பாகக் கம்பராமாயணம் திராவிட இயக் கத்தினரால் வன்மையாகச் சாடப்பட்டுள்ளது. இதற்கு அண்ணாவும்விலக்கல்ல. நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராத ராமாயணத்தைச் சாடுவதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

     கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் எனப்பழி

     கூறுகின்றனர். கம்பரின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராண

     மும் கலை என்று கருதும் அன்பர்கள் ஒரு பெரியாரின் பெயரால்,

     அண்ணாவின் பெயரால் அக்கலை அழிந்துபடும் என்று கூறுவரானால்,

     அத்தகைய கலை கலை ஆகாது. அத்தகைய கலை இருந்தாலும் பயன்

     இல்லை. எமது கலையிலே புரட்சியை  உண்டாக்க விழைகின்றோம்.

என்று தீ பரவட்டும் நூற்கட்டுரையில் சொல்கிறார். ஆனால் புரட்சி உண்டாக்க அண்ணாதுரையிடம் இருந்த திட்டம் அல்லது கொள்கை என்ன?

     இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவதனால் நமது இலக் கியம் அழிந்து விடாது. கம்பர் எழுதியுள்ள முறை தமிழர் ஆரியத்தை ஏற்றுக் கொள் ளத் து£ண்டுகோலாகவும் தமிழினம் ஆரிய இனத் தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்வதாகவும் இருப்பதனால் அந்நூலைப்படிக்கும் தமிழினம் அழிந்து விடும் என்கிறார். இலக்கியத்தை வெறும் கருத்துநிலையை மட்டும் வைத்து மதிப்பிட்டது அண்ணாதுரை செய்த தவறு.

     தேவபாடையில் இதனை மூவர் செய்தனர் மூவருள் முதல்வரான வால்மீகியது நூலை நான் மூலமாகக் கொண்டேன் எனக் கம்பர் கூறுகிறார். இங்கே வடமொழி யைக் கம்பர் எப்படி தேவபாடை எனலாம்? ஆரியரால் தேவபாடை எனக் கூறப் படும் வடமொழி எனக் கூறாது கம்பரே ஏற்றுக்கொண்டு கூறுவது தமிழரைத் தாழ்த்துவதல்லவா? பண்டிதர்கள் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ அதே திறமையே தமிழர் கெட வழிசெய்தது.

     கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும் செயலையும்விளக்

     குவதிலே கம்பர் மிக சமர்த்தர் என்றுரைப்பர் அறிஞர்கள். அந்தச்

     சமர்த்துதான் குற்றம்குறைகொண்ட ஆரியரைத் தலைவராக்கி வணக்கத்

     துக்குரியவராக மாற்றியது.

வான்மீகி இராமாயணத்தில் குற்றம்குறை கொண்ட பாத்திரங்களைக் கம்பர் ஆரியத் தலைவராக்கி நல்லவர்களாகக் காட்டுகிறார். இது நாம் ஆரிய இனத்தவரை வணங்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது போலல்லவா உள்ளது?

     இராமன் கடவுளாக்கப்பட்டும் சீதை கற்புக்கணியாக்கப்பட்டும் இராவணன் இரக்கமில்லா அரக்கனாக்கப்பட்டும் அனுமன் ஆண்டவனாக்கப்பட்டும் வாலி கொடியவனாகக் கொல்லப்பட்டும் கூறப்படுவதில் கம்பர் ஒரு ஆழ்வாராகவே மாறி விட்டார் என்றல்லவா தோன்றுகிறது?

     இராவணன் சீதையைக் கவர்ந்தது காமத்தினாலன்று, போர்மரபு முறையி னாலே என்கிறார். அக்காலப் போர்களிலே ஆநிரைகளைக் கவர்தல், மாதரை எடுத் தல், கோட்டையைத் தாக்குதல் என்பன முறைகள். தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர் இராமனைப் போருக்கிழுக்க இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமே ஆகையால் சீதையை எடுத்துச் சென்றான்.

     இராவணன் சீதையை பர்ணசாலையுடன் து£க்கிச் சென்றதைச் சுட்டிக்காட்டி இராவணன் பெருந்தன்மையுடன் நடந்துள்ளான் என்கிறார். இராம இலக்குவர்கள் சூர்ப்பணகையை மானபங்கப்படுத்த, இராவணன் சீதையைத் தொடாது து£க்கிச் சென் றதே அவனது உயர்வைக் காட்டுகிறது.

     இராமனைவிடப் பண்பில் உயர்ந்தவன் பரதனே. அதனால் தான் இராமனின் பாத அணிகளைத் து£க்கிச்சென்றான். கற்புக்கு உதாரணமாக அகலிகை சொல்லப்படு கிறாள். ஆனால் அவள் சிறந்த கற்புடையவள் அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. இப்படிப்பட்ட பெண் முன்னால் இராமன் விழுந்துவணங்கியதை எடுத்துக் காட்டி அவன் பண்பினை மதிப்பிடுகிறார். அகலிகையின் மனத்தில் தவறில்லை, அதனால் அவள் கற்புடையவள் என்று இராமன் நினைத்திருக்கலாம். அவ்வாறாயின் அதே அளவுகோலை ஏன் தன்மனைவி சீதைக்குப் பயன்படுத்தவில்லை?

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்; நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவம் என்கிறார். தமிழர் தம்மை இகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கம்பர் சீதையைக் கற்புப் பெண் ணாகப் படைக்கிறார். சங்கப் புலவர்களையும் தமிழ் மன்னர்களையும் கடவுளாக்கிப் பார்க்காத பொழுது வடஇந்திய இராமனைக் கடவுள் ஆக்குவது தவறு.

     இராமாயணத்திலுள்ள வீரம் காதல் நட்பைவிட நல்ல சான்றுகள் தமிழி லக்கியத்தில் உள்ளன. கம்பராமாயணம் முழுக்க்வும் ஆபாசமாகவே உள்ளது. பெரிய புராணம் அதிகமான பக்தியை ஊட்டி மக்களை ஏமாற்றுகிறது. தொழில் ஜாதிப் பாகு பாட்டை வலியுறுத்துகிறது. சீர்திருத்தக் கருத்துகள் சிறிதுமில்லை.

     கம்பராமாயணத்தில் ஆபாசச் செய்திகளை அண்ணா தொகுத்துக் கம்பரசம் என்னும் நூலாகப் படைத்தார். எந்தெந்த இடங்களில் ஆபாசச் செய்திகள் மிகுந்துள்ளன என்பதைத் தொகுத்தார்.

 பத்துப்பாடல்களுக்கு ஒரு முறையாவது கம்பர் பெண்களைப் பற்றி வருணிக்கிறார். அயோத்தியிலுள்ள மக்களெல்லாம் அயோக்கியர்களாகவும் காட்டுமிராண்டிக ளாகவும் உள்ளனர். அயோத்தி வீரர்கள் ஓடத்தில் செல்லும் போது பெண்களின் மறைவிடங்களைக் கண்டு மகிழ்கின்றனராம். (குகப்படலம், பாடல் 56). நடிப்புக்கலை யில் சிறந்த நடனப் பெண்கள் தங்கள் உடலை அலங்கரித்து பஞ்சணையில் ஆடவரை அழைக்கின்றனர்.

 அனுமனிடம் இராமன் தன் மனைவி எப்படியிருப்பாள் என்று கூறும் போது சீதையின் முழு உடலமைப்பையும் வருணிக்கிறான். சீதையின் வெளி உடலமைப்பை மட்டும் வருணிக்காது மறைவிடங்களையும் வருணிக்கிறான்.

     வாராழி கலசக்கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தன்

     தாராழிக் கலைசார் அல்குல் தங்கடற்கு உவமை தக்கோய்

என்பதுபோன்ற வருணனைகள் கம்பனில் ஏராளம்.

     உலகிலுள்ள எந்தப் பித்தனும் வெறியனும்கூட தன் மனைவியின் மறைவிடத்தை

     வேறொருவனிடம் வருணிக்கமாட்டான். அங்ஙனம் வருணிக்கும் கதாநாயகனை

     எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக்கவியும் சித்திரிக்கவில்லை.

     சீதையும் இராமனும் காட்டுவளம் காணச் செல்கிறபோது இயற்கைக் காட் சிகளை வருணிக்காது இராமன் சீதையின் உடலழகை வருணிக்கிறான். இராமன் சீதையை நோக்கும்போது அவளது கண்ணை மட்டும் நோக்காது உடலுறுப்புக்களைப் பார்த்து ரசிக்கிறான். கடவுளின் அவதாரமும் அயோத்தியின் மன்னனாகப் போகின்ற வனுமாகிய இராமனுடைய மனமே இவ்வாறு உள்ளது!

     இராமன் பட்டாபிஷேகத்திற்கு அரண்மனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள இயற்கைக்காட்சிகளைக் கம்பர் பெண் உறுப்புகளோடு உவமைப்படுத்துகிறார். செவிலித்தாயரின் கால்களில் கன்னியர் படுத்திருக்கின்றனர். தெங்கின் குரும்பை போன்று செவிலித்தாயரின் மார்பமைப்பும் தாமரைமலர் போன்று கன்னியரின் மார் பமைப்பும் உள்ளது.

     இராமன் வில்லொடிக்கும்போது சீதையின் மேகலை கீழேவிழுவதைக் கம்பர் வருணிக்கிறார். இராமன் கானகம் செல்லும்போது அயோத்திப் பெண்களெல்லாம் அழுகின்றனர். அவர்களது கண்ணீர் அருவிகள். மலைகளைத் தாண்டி கடலைச் சேர்வது போலப் பெண்களின் உடல்மேல் ஓடுகிறதாம்.

     அதர்மத்தை வீழ்த்தி தர்மத்தைத் தழைக்கச் செய்ய அவதரித்த ஆண்டவன்

     வரலாற்றில் இந்த வர்ணனையா? கடவுள் கதையில் தேவாரம் இருக்கலாம்,

     பக்தி ரசம் சொட்டலாம், தேவரகசியங்கள் வெளியிடலாம். இதையெல்லாம்

     விட்டு காமரசத்தைக் கொட்டுவது முறையா?

என அண்ணா கூறுகிறார். வள்ளுவரும் தம் அனுபவத்தால் உலகம் வியக்கும் இலக் கியம் படைத்தார். ஆனால் கம்பரோ சொந்த நாட்டின் வரலாறும் சொந்தக் கற்பனை யும் மொழி பெயர்ப்பும் அல்லாத ஒன்றைப் படைத்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

பெரியபுராணம் பற்றியும் இறையடியார்களின் பத்தித்திறம் பற்றியும் அண்ணா பின்வருமாறு கூறுகிறார். பெரிய புராணக் கதைகளைப்படிப்பதனால் மக்களின்அறிவு பாழ்படுகிறது. பெரியபுராண அடியவர்களின் கதைகளிலுள்ள கடவுள் கருத்துகள் அறிவீனமாக உள்ளன. பெரியபுராணம் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கிறது. பகுத்தறிவைப் பாழ்செய்வதாகவே இக்கதைகள் உள்ளன. ஜாதியையும் தொழிற்பாகு பாட்டையும் வலியுறுத்துகிறது.

     சமரசம் போதிக்கிறது பெரியபுராணம் என்கின்றனர். புலையனேனும்

     சிவனடியாராக இருந்தால் மோட்சம் பெறுவர் எனக்கூறுகிறது. புலை

     யனேனும் – இதிலுள்ள உம் எதைக் குறிக்கிறது? ஜாதியிலே ஏற்றத்

     தாழ்வு இருக்கிறது, எனவேதான் தாழ்ந்தோரும் பக்தி செய்தால் முக்தி

     பெறலாம் என்கிறது.

     பெரியபுராணக் காலத்துக்குப் பின் நாட்டில் செல்வம் குறைந்துபோயிற்று. பாடுபடுவோர் பட்டினி கிடக்கின்றனர். பாடுபடாத பார்ப்பனர்கள் செழுமையில் வாழ்கின்றனர். மக்கள் கிடைக்கின்ற பொருள்களையெல்லாம் பக்திக்காகச் செல விடுகின்றனர்.

     செல்வம் கொடுத்த தமிழகத்திலே பட்டினிக் குரல். தங்கச் சிலைகள் கோயி

     லிலே. வைரமுடிகள் அவைதம் சிரங்களிலே. சிங்கத் தமிழன் செத்து வீழ்ந்தான்

     பாதையிலே. பஞ்சத்தால். பக்தியையும் சிவத்தையும் உண்டாக்கிய ஏடன்றோ

     என்று கொண்டாடுகிறார்கள் பெரிய     புராணத்தை. ஆனால் அதை நாட்டிலே

     பரப்பி மக்களையும் மன்னரையும் நீறுபூசிகளாக்கிய பிறகு நாடு செழித்ததோ?

     வளம் வளர்ந்ததோ? இல்லை. கிடைத்ததை எல்லாம் ஆலயத்திருப்பணிக்கும்

     அம்மையப்பன் திருவிழாவிற்கும் செலவிட்டு மக்கள் ஓய்ந்தனர்.

     அன்பை போதிக்கும் பெரியபுராணத்தில் சிவபெருமானுக்குப் பிடித்தது மனித உயிர்களே. இறைவனை நேசித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பக்தியை வலியு றுத்தும் பக்தனிடம் சீர்திருத்தத்திற்கு ஏது வேலை?

     சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வடிந்தது என்பதை ஏற்கஇயலாது. கருவில்

     உருவான உடலில்தான் இரத்தம் வடியும். கல்லில் கட்டையில் செம்பில் இரத்

     தம் உருவாகும் என்பது கற்பனையே.

     கடல்நீரை எங்கு மொண்டாலும் உப்புநீராக இருக்கும். பெரியபுராணத்

     தில் சமணர்களைப் பற்றி எங்கு பேசப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் அவர்

     களை இழித்தும் பழித்தும் திட்டியும் அன்றோ பேசப்பட்டிருக்கிறது? மறந்

     தேனும் ஒரு சொல்கூட அவர்கள் செய்த நன்மைக்காக அவர்களைப் பாராட்

     டும் குறிப்பு இல்லையே? இப்படிப்பட்ட ஒரு நூலுக்குப் பெரிய புராணம்

     என்ற பெயரைக்காட்டிலும் சமணர் வசைப்புராணம் அல்லது குண்டர்

     புராணம் என்று வைத்திருக்கலாமே?

என்று திராவிடநாடு இதழின் கட்டுரைகளில் எழுதியுள்ளார்.

     அண்ணாவின் விமரிசனக்கருத்துகளின் சாராம்சம் இதுதான்: தமிழறிஞர் களிடம் பற்றின்மையே தமிழ்வளராமைக்குக் காரணம். வாழ்க்கையை உயர்த்த மொழி உதவுகிறது. தமிழரைப்போல் தமிழ்ப்பற்றற்றவர்களை வேறெங்கும் காண இயலாது. இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும். நமது இலக்கியங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாதவையாக உள்ளன. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன.

பெரியார் இலக்கியத்தில் புலமைக்கல்வி பெறாதவர், எனவே அவரது நோக்கு வெறும் கதைகள் சார்ந்ததாக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அண்ணா நன்கு படித்தவர். தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் ஓர் இலக்கிய மாணவன்போல் அறிந்திருக்க மாட்டார் என்றாலும் சங்க இலக்கியத்தின் முக்கியமான பகுதிகள், சிலப் பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் போன்ற முதன்மையான தமிழிலக்கியப் பகுதிகளை அவர் நன்கு படித்திருப்பார் என நாம் நினைக்கமுடியும். அண்ணாவின் ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ பாரதிதாசன் கவிதைகளின் இலக்கியச் சிறப்பு பற்றிய சொற்பொழிவு.

     கலை வாழ்க்கைக்குப் பயன்படுவதாக அமையவேண்டும் என்ற அடிப்படையி லேயே இலக்கியத்தை மதிப்பிடுகிறார். ஆரியர்களின் கொள்கைகள், தமிழருக்கும் அவர்களது பண்பாட்டிற்கும் ஏற்புடையவை அல்ல என்பதனால் எதிர்மறையாக மதிப் பிடுகிறார். மக்களைச் சிந்திக்க வைத்தல், பகுத்தறிவைப் பயன்படுத்தத் து£ண்டுதல் என்ற அளவில் அண்ணாவின் கருத்துகள் ஏற்புடையனவே ஆகும்.

     ஆனால் அவரது இலக்கிய விமரிசன நோக்கு ஏற்புடையதன்று. தமிழிலக்கியத் தைப்போல (அல்லது வடமொழி இலக்கியத்தைப்போலவே) ஏராளமான புராணக் கதைகள் கிரேக்க-ரோமானிய மொழிகளில் உள்ளன. இங்குள்ளவற்றை விட ஆபாச மான வருணனைகளும் அவற்றில் உள்ளன.

     ஆண்களின் நோக்கிலிருந்து பெண்களை வருணித்தல் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் வருணனைப் பொது இயல்பு. இதற்குக் காரணம், உலக முழுவதுமே ஆணாதிக்கம் நிலைபேறு கொண்டிருப்பதுதான்.

     அறிவியல் பார்வை தோன்றாத நாட்களில், தெய்வங்களையும் தேவர்களையும் பேய்களையும் மக்கள் நம்பிய அந்நாட்களில், இம்மாதிரிப் புராணக் கதைகள் தோன்று வதில் ஆச்சரியமில்லை. அமைப்பிய அறிஞரான லெவிஸ்டிராஸ், இம்மாதிரிப் புரா ணக் கதைகளை ஆதிஅறிவியல் என்ற மதிப்புத் தந்து நோக்குகிறார்.

     பழங்கால மனிதன் மனத்தில் எழுந்த அறியவேண்டும் என்ற ஆசையைத்தான் புராணக்கதைகள் காட்டுகின்றன. இருத்தல் சார்ந்த வினாக்களுக்கு ஏதோ ஒருவகை யில் அக்கால அறிவுக்கேற்றவாறு அளிக்கப்பட்ட விடை என்றுதான் புராணக்கதை களைக் கொள்ள வேண்டுமே தவிர, இக்கால நோக்கில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என விமரிசனம் செய்வதில் பொருளில்லை.

     கலையில் எது ஆபாசம்-எது அழகு என்ற முடிவற்ற கேள்வி ஒன்று உண்டு. கலைத்திரைப்படங்களிலும் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றைவைத்து அத்திரைப்படங்களை ஆபாசமானவை என எவரும் முடிவுகட்டுவதில்லை. அதுபோல உலகத்திலுள்ள அனைத்துமொழிக் காப்பியங்களிலும் உடல் சார்ந்த வருணனைகள் உண்டு. அவற்றை வைத்து அவை ஆபாசமானவை, மனத்தைக் கெடுப்பவை அல்லது பண்பாட்டைக் கெடுப்பவை என்று சொல்லி விடமுடியாது.

     இந்தக் கேள்வி ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோவின் மனத்தில் எழுந்து, கவிஞர்களை நாடுகடத்தவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சாக்ரடீஸ், இங்கர்சால் போன்றோரின் அறிவு மரபின் கூறுகளை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கத்தினரும் இதே கேள்விகளுக்கு இதே விடைகளை மொழிந்ததில் ஆச்சரியமில்லை.

     பத்தாயிரம் பன்னிரண்டாயிரம் பாடல்கள் வாயிலாகப் பெரிய கதை ஒன்றைக் காவியகர்த்தா படைக்கும்போது அதன் பாவிகம், மொத்தச் செய்தி என்பனவற்றைக் காணவேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது. மேலும் மிகச் சிறந்த புலமையாளர்கள் தவிர வேறு எவரும் எளிதில் கம்பரை அணுகிவிட முடியாது. கம்பரை முழுதும் கற்கும் திறன்படைத்த திறமை யாளர்கள் இத்தகைய வருணனைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம். மாறாக, அனைத்துப் பொதுமக்களும், கற்றவரும் கல்லாதவரும்-மன முதிர்ச்சியற்றவர்கள் உட்பட இன்றைய திரைப்படங்கள் (இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட) போன்ற ஊடகங்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் ஆபாசப்போக்கின்றிப் பார்த்துக்கொள்வதே முக்கியமானது.

     அண்ணாவின் இலக்கிய விமரிசனப் பார்வையை நாம் குறைகூற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனினும் இலக்கியத்தில் பகுத்தறிவுநோக்கும் தேவையான ஒன்றேயாகும். இன்றைய இலக்கியம் படிப்பவர்களுக்கு அது இன்னும் மிகுதியாகத் தேவை.

     இன்றும் இதேபோலப் புராணக்கதைகளைக் கருத்துமாற்றமின்றி எடுத்தாண்டு கொண்டிருக்கும் சாதியக்கட்சிகளால் உள்ளன. (இன்றும் இராமன்கட்டிய பாலம் பாக் ஜலசந்தியில் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் பகுத்தறிவுநோக்கு இன்று மிகுதியாகவே தேவைப்படுகிறது). அறிவியல் நோக்கு என் பது வாழ்க்கையில் முக்கியமானது. இவ்விதத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு முதன்மையானது. திராவிட இயக்கம் கொண்டிருந்தவை போன்ற நோக்குகளை இப்போது நாட்டார்வழக்காற்றிலும் மானிடவியலிலும் பயன்படுத்துவதைக் காணலாம்.

     அண்ணாவின் கம்பரசம் நூலுக்கு அக்காலத்திலேயே பல எதிர்நூல்கள் உருவாயின. சான்றாக, கு. பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் எழுதிய கம்பரச மறுப்பு (1951) என்னும் நூலைக் கூறலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பிறர்

     1947-60 காலப்பகுதியில் திராவிடப்பார்வையிலான திறனாய்வு தீவிரமடைந் தது. பெரியாரைப் பின்பற்றிப் புராண இதிகாச காவியங்களில் காணப்படும் கடவுட் கொள்கை, ஆபாசவருணனைகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் ஆய்வுநூல்கள்பெருகின. பெரியாரையும் அண்ணாதுரையையும் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தினரின் பார்வைகள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், பாரதிதாசன் படைப்புகள் ஆகிய இலக்கியங்களில் மட்டுமே குவிந்திருந்தன. சில சமயங்களில் சங்க இலக்கியத்தைச் சேர்த்துக்கொண்டனர், பிற இலக்கியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படவும் விமரிசனம் செய்யவும் இல்லை.

     ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவர் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை. அவர் தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதியுள்ளார். திராவிட இயக்கக் கருத்துகளை ஏற்று, இராவணப் பெரியார் என்னும் நூலை வரைந்துள்ளார். பா.வே. மாணிக்கநாயக்கர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

     இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (1896-1975), பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க வர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுக் குடிஅரசு இதழில் சந்திரசேக ரப் பாவலர் என்னும் புனைபெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ்த்தாய் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றையும் நடத்தினார். சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாகத் துணைநின்றவர். தமிழ்க்கலைச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர். தமிழ்மொழியின்மீது இவர் வைத்த பற்று அளவற்றது. தமிழ் மொழி உலக மொழி, தமிழரே உலகின் முதல் மக்கள், சைவசமயமே தமிழரின் முதல் சமயம் என்று நம்பினார். இராமாயணத்தில் ஆபாசம் இவரது முக்கியமான நூல் (1929). வடமொழிப் புராணங்கள் இராமன் பிறக்கக்காரணமாகக் கூறும் கதைகள் திருமாலின் தகாத வாழ்வைச் சித்திரிப்பவை. இராமனின் பிறப்பு புனிதமற்ற ஒன்றே யாகும். ஆனால் இராமனை நாம் புனிதனாக வழிபடுகிறோம். தசரதன் யாகம் புரிவதில் யாகத்தின்போது முனிவர்களுக்குத் தன் மனைவிகைளக் கொடுக்கிறான். அதனாலேயே இராமன் சகோதரர்கள் பிறக்கிறார்கள். இராமாயண பாரதக் கதைகள் தமிழர்களுடைய தன்மான வாழ்வைக் கெடுப்பன..

     கைவல்ய சாமியார்,          பெரியாரின் குடிஅரசு இதழில் கடவுள் புராணம் வேதம் சாத்திரம் மூடநம்பிக்கை போன்றவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். மதங் களைக் ‘கட்டுடைத்’துள்ளார். சைவ வைணவ இலக்கியங்களெல்லாம் உயர்ந்த நோக்க மின்றி எழுதப்பட்டவை என்கிறார். பௌத்த சமண சமயங்கள் நமதுநாட்டில் தழைத்த பொழுது அச்சமயங்களை அழிக்க நமது மக்கள் உள்ளத்தில் மோக உணர்வை எழுப்பக்கூடிய நூல்களை எழுதினர். பாமர மக்கள் எதைச் சொன்னால் நம்புவர் என்பதை அறிந்து அதற்கேற்ப இலக்கியங்களைப் படைத்தனர்.

     பெண்களைச் சிறையெடுக்காத தெய்வங்கள் உண்டா? ஒழுக்கத்துடன்

     நடந்த     ரிஷிகள் உண்டா? இப்பொழுது பக்தியோடு அவைகளைப் படிக்

     கிறார்கள். இலக்கிய இலக்கணத்துடன் பிரசங்கமும் செய்கிறார்கள். இவை

     யெல்லாம் பௌத்த சமண மதங்களைத் தொலைக்க ஏற்பட்டனவே.

என்று திராவிட நாடு இதழில் எழுதினார். குடிஅரசு இதழில் எழுதியது இது:

     புராணங்களிலுள்ள கதைகளில் தெய்வாம்சம் இருக்கிறது என்றும் நீதி

     இருக்கிறது என்றும் ஜனங்களிடையே பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்.

     இராமன் பூமியில் பிறப்பதற்கான காரணங்களைப் புராணங்கள்

     சொல்வதை அவர்கள் படித்துப்பார்க்கவேண்டும். அந்நியப்பெண்ணை

     (துளசி என்பவளை) அனுபவித்ததற்காக விஷ்ணுவுக்குக்கிடைத்த தண்ட

     னையே இராமாவதாரம். இது பிராமணரின் ஆதிக்கம் எங்கும் தடை

     யில்லாமல் நிலைநிறுத்திக் கொள்ள எழுதப்பட்டதாகும்.

தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை அவர் முற்றாக நிராகரித்தார்.

     இராமாயணக் கதைள், பாரதக்கதைகள், சைவவைணவ புராணங்கள் எல்லா வற்றிலும் காணப்படும் கதைகளை விமரிசிக்கிறார்.

     இராமாயணம் காட்டும் வீரத்தினால் நாம் கற்றுக்கொண்டவை யாவை?

     இராம பஜனை, நாமசங்கீர்த்தனம், துளசிமாலை, உண்டியல், பெருமாள்

     பிரசாதம் இவைகளெல்லாம் சேர்ந்த மோட்சம். மேலும் அந்நியரால் அடியும்

     உதையும் குத்தும்பட்டு அங்குமிங்கும் ஓடி ராமா அரங்கா எனக்கூப்பாடு

     போட்டுக் கட்டியழுவதற்கு வீரத்தன்மை வந்ததே யல்லாமல் மனிதனுக்கு

     மனிதன் சமமாக நிற்கும் வீரம் வரவில்லை.

     இன்று நாட்டார் வழக்காற்று விமரிசனம் எழுதுபவர்களுடைய அடிப்படைக் கூறுகள் இவரிடம் உள்ளன.

     அகத்தியர் தெய்வத்திடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டு அதை உருவாக்கி

     னார் என்ற கதை ஏற்புடை யதன்று. ஒரு மொழி என்பது சமூகத்தின்

     வெளிப்பாடு. தனிமனிதர் ஒருவர் ஒருமொழியை எக்காலத்திலும் உருவாக்க

     இயலாது.

என்று அறிவியல்பூர்வமாக வாதிடுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 இந்துமதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியவர் ஈழத்தடிகள். திராவிட நாடு, குடி அரசு இதழ்களில் கட்டுரைகள் வரைந் துள்ளார். திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்துகளே இவரிடமும் எஞ்சியுள்ளன.

     வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சிலப்பதிகாரமும் ஆரியக்கற்பனையும் என்ற நூலை 1951இல் எழுதினார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஐயர் ஒருவர் புகழ, அவரைப் பின்பற்றிய போலித்தமிழரும் புகழ்வாராயினர். ஆரியப் பண்பாட்டினைப் பரப்பும் நூலை அவர்கள் புகழாது வேறு யார்தான் புகழ்வது?” என்று கேட்கிறார் அவர்.

     இப்படிப்பட்டஆராய்ச்சிகளைப் பெரியாரே தோலுரித்துக்காட்டியிருக்கிறார்.

     இது சாதிக்கேற்ற ஆய்வு. சுப்பிரமணிய ஆச்சாரியார் பொற்கொல்லர் வகுப்பைச்

     சேர்ந்தவர் என்பதால் சிலப்பதிகாரத்தை வெறுக்கிறார், ஆர்.கே. சண்முகம் செட்டி

     யார் வணிக வகுப்பைச் சேர்ந்தவர் ஆதலின் சிலப்பதிகாரத்தைப் பாராட்டுகிறார் என்கிறார் பெரியார்.

     பாரதிதாசன்(1891-1964) கட்டுரைகள் ‘மானுடம் போற்று’ என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளன. ‘பாரதிதாசன் பேசுகிறார்’ என்ற நூலிலும் அவரது கட்டுரைகள் உள்ளன. தாம் நடத்திய குயில் இதழுக்காகவும் பல கட்டுரைகள் எழுதி வெளி யிட்டார். திருக்குறளின் ஒரு பகுதிக்கு திராவிட இயக்கநோக்கில் உரை எழுதினார். பலவேறு திராவிட இயக்க இதழ்களிலும் எழுதிவந்தார். குயில் போன்ற பத்திரிகை களை நடத்தினார். வழக்கமான திராவிட நோக்கு எழுத்துதான் இவருடையது. தமிழ்ப் புலவர்கள் புதிதாக இலக்கியம் படைப்பதில்லை. எதையாவது மொழிபெயர்ப்பது, பிற நூல்களைக் குறைசொல்வதுமட்டுமே தம்வேலையாகக் கொண்டுள்ளனர். கம்பராமாய ணத்தையும் பெரிய புராணத்தையும் விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றுமில்லை என்று கடிந்து கொள்கிறார்.

     தமிழ் இலக்கியத்தில் ஜாதியும் மதமும் ஆரியரால் புகுத்தப்பட்டவை.

     இதனால் தமிழ்மொழியும் இலக்கியமும் அழிந்து கொண்டிருக்கின்றன.

     சமயச்சார்புடைய கதைகளும் இலக்கியங்களும் கலை அல்ல. இழிவான

     கதைகளை எங்ஙனம் கலை என்று கூற இயலும்? தென்னகத்தவரை

     அரக்கராக, குரங்கினமாகக் குறித்த இராமாயணம் நம்மை இழிவு

     படுத்துகிறது.

     திருக்குறளில் அந்தணர் என வரும் சொல்லிற்குத் துறவறத்தார் எனப்பொருள் தருகிறார். அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்ல. ஆதி பகவன் என்ற தொடரில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முப்பண்புகளின் ஒன்றுபட்ட நிலைதான் ஆதி எனப் படுவது. பகவன் என்பது பகல் எனப் பொருள்படும். இதற்கு மதச்சாயம் பூசுவது தவறாகும்.

     பகுத்தறிவு நோக்கிற்கேற்ப, காலத்திற்கேற்ப, பழைய இலக்கியங்களை பாரதி தாசன் மாற்றி வாசித்து நாடகங்கள் இயற்றியுள்ளார். திறனாய்வு என்ற முறையில் அவர் அதிகமாகப் பணிசெய்யவில்லை. இம்மாதிரி மாற்றி வாசிக்கும் இலக்கியப் படிப்பு இன்று பின்னமைப்பியர்கள், பெண்ணியவாதிகள் போன்றோரால் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வெறுமனே புராணக்கதைகளைக் கண்டிக்கும் நோக்கினைவிட இது மேம்பட்ட நோக்காகும்.

     திராவிடச் சார்பாளர்கள் அனைவரும் கம்பராமாயணத்தை எதிர்த்தனர். பாரதி தாசனும் அவ்வாறே என்றாலும் தமிழ்க்கவிஞன் என்ற முறையில் அவர் மனநிலை வேறாக இருக்கிறது. டி.கே.சி.யின் கம்பராமாயணப் பதிப்பைப் பற்றி அவர் கவலைப் படுவதைப் பாருங்கள்.

     கோவையிட்ட கம்பனது  செய்யுளிலே முக்காலும்  கோணல் என்றே

     கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும்  கழித்துப்போட்டு

     நம்பினால் நம்புங்கள்  இவைதான்கம்பன் செய்யுள்என அச்சிட்டு

     வெம்புமா றளிக்கையிலும்  மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்

     கொம்பன்யார் எனக்கேட்க ஆளிலையா புலவர்கூட்டந் தன்னில்

எனக் கேட்கிறார் பாரதிதாசன்.

     பாரதிதாசனைப் பாராட்டி எழுந்த நூல்களில் கா. கோவிந்தனின் இலக்கிய வளர்ச்சி (1955), சாமி.பழநியப்பனின் குழந்தை இன்பம் (1956) ஆகியவை குறிக்கத் தக்கவை. இவற்றுக்குப் பின்னர்தான் சாலை இளந்திரையனின் திறனாய்வு நூலான ‘புரட்சிக்கவிஞர் கவிதைவளம்’ வெளிவந்தது.

     குத்து£சி குருசாமி, குடிஅரசு, ரிவோல்ட், இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகத்திலேயே மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பவை சமயஇலக்கியங்களே. முன்னேற்றத்தின் முதற்படியில் காலெடுத்து வைக்கும்போதே சமய இலக்கியம் எனும் பேய் காலைத் தள்ளிவிடுகிறது. மத இலக்கியங்களால் ஒழுக்கமோ ஒழுங்குமுறையோ அன்போ அறிவோ வளர்வ தில்லை. பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் சமத்துவஅறிவையும் அடிப்படை யாகக் கொண்டு அடைய வேண்டிய ஒன்றை மூடநம்பிக்கையாலும் தன்னம்பிக் கையில்லாத் தன்மையாலும் பெற இயலாது. வடமொழிக்கதைகளையும் புராணங் களையும் நமது சமய இலக்கியத்திலிருந்து தள்ளிவிட்டால் அதில் மிஞ்சுவது எதுவுமில்லை என்று 1929 அளவிலேயே குடிஅரசு இதழில் கருத்து வெளியிட்டவர்.

அ. பொன்னம்பலனார், 1928ஆம் ஆண்டுமுதல் திராவிட இயக்கத்தில் பங்கேற்றவர்.

     நமது இலக்கியங்கள் ஜாதியத்தையும் மதத்தையும் மதவெறியையும் து£ண்டி

     யுள்ளன. எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற மதம் உண்மையான மத

     மில்லை. அதன் இலக்கியம் நல்ல இலக்கியமாக இருக்கமுடியாது. கல்வி

     யறிவு, ஆராய்ச்சியறிவு ஊட்டுவ தற்கு பதிலாக மூடநம்பிக்கையையும் வீண்

     பக்தியையும் வளர்க்கிறது. சமண பௌத்த மதக்கொள்கைளை அழிக்கவே

     சைவ வைணவ இலக்கியங்கள் தோன்றின. சமணர்கள் பாரதமக்களே.

     வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. பாரதத்தில் அஹிம்சையை நிலை

     நாட்ட ஆரியரோடு போராடியவர்கள். ஆரிய வேதங்களையும் வேள்வியையும்

     உயிர்க் கொலையையும் எதிர்த்து நின்றவர்கள்.

     சேக்கிழார் பல உண்மைகளை மறைத்து பொய்யைப் பரப்பியுள்ளார். சிவன்

     ஒரு சமூகத்தின் தலைவனாக நின்று மற்றொரு சமூகத்தை அழிக்கநினைப்பது

     கடவுள் தன்மையாக இல்லை. அநபாய மன்னன் சமண சாதுக்களை ஆதரித்த

     தால் சேக்கிழார் தாம் இயற்றியதை சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்

     தார் என்று பொய்க்கதை கூறி மன்னனை மயக்குகிறார்.

     திருநாவுக்கரசர் சமணத்திற்கு எதிராகச் சூழ்ச்சி செய்தவர் என்கிறார். மதுரை மன்னனுக்கு நோய் ஏற்படும்படி செய்ததும் சிவபெருமானால் நோய் நீங்கியது என்பதும் சம்பந்தர் மங்கையர்க்கரசி செய்த சூழ்ச்சியாகும்.

     எல்லா இன மக்களையும் சைவத்திற்கு இழுக்க சம்பந்தர் சிறு தெய்வ வழி பாட்டை ஆதரிக்கிறார். கோயில்களில் பலியிடல், வழிபாடுகள் நடக்கின்றன. நாவுக் கரசர் இதனை எதிர்க்கிறார். ‘தில்லைக்கோயிலில் பலியிடுதல் நடக்க ஏற்பாடு நடந்தது. நாவுக்கரசர் எம்பெருமானுக்கு பலியிட்டு வழிபாடா? நான் சென்று தடுப்பேன்Õ என்று தில்லை செல்கிறார். கோயிலினுள் அவரைக் கொலை செய்கிறார் ஞானசம்பந்தர். மக்களிடம் இவர் உயிரோடு மேலுலகம் எய்தினார் எனக் கதைகட்டிவிடுகின்றனர். இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றார்கள். சம்பந்தர் மணக்கோலத்தில் இருக்கின்ற போது சமண முனிவர்கள் அவர் வீட்டைச்சுற்றி நெருப்பு வைக்கின்றனர். அதனால் சம்பந்தர் மணக்கோலத்தில் மேலுலகம் சென்றார் எனக் கூறப்படுகிறது.

இவைபோன்று பெரிய புராண நிகழ்ச்சிகளுக்குத் தம் மனம்போனபோக்கில் பொன் னம்பலனார் விளக்கம்கூறியுள்ளார்.

     பொதுவாகப் பழங்காலத்தில் ஒவ்வொரு மொழியையும், இனத்தையும் சார்ந்தே தேசியத்தன்மை (அப்பெயரால் அப்போது அறியப்படாவிட்டாலும்) சார்ந்த சிந்தனை இருந்தது. விவிலியத்திலும் எகிப்தியர்களை வென்று, அவர்களிடமிருந்து இஸ்ரேலியர் கள் தப்பிவந்தனர் என்ற கதையையும், அவர்களுக்குக் கடவுள் உதவி செய்தார் என்ற கற்பனையையும் காணலாம். இங்கும் சமணர்கள் என்ற வேற்றினத்தாரை அழிக்கக் கடவுள் உதவிபுரிந்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

     புலவர் குழந்தை (1906-72), இராவண காவியம் படைத்தவர். தொல்காப்பியக் காலத் தமிழர், யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் செய்தது போன்ற ஒரு மறுவாசிப்பையே புலவர் குழந்தையும் இராமா யணக் கதையில் செய்துள்ளார் என்ற அளவில் இது பாராட்டத்தக்கது. ஆனால் இராவணன் திராவிடர் தலைவன் என்பதற்கோ, தாடகை தமிழ்ப்பெண் என்பதற்கோ தக்க ஆதாரங்கள் இல்லை.

     திராவிடர்களை வெற்றிகொண்ட ஆரியர்கள் தஸ்யூக்கள் என்று அவர்களை அழைத்தனர். இராவணன் சூர்ப்பநகை முதலிய புராணப் பாத்திரங்களுக்கு இக்கருத் தைப் பொருத்திப் பார்த்தல் இயலாது. ஓர் இனம் இன்னொரு இனத்தை வெற்றி கொள்ளும்போது அவர்கள் சார்பாகக் கதைகள் படைக்கப்படுகின்றன என்ற பொது நோக்கில் மட்டுமே இவற்றைப் பார்க்கவேண்டும். தனித்த மனிதர்களைச் சார்த்தி நோக்குவதற்கு வரலாற்று ஆதாரங்கள் தேவை. ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்ற நூலில் வர்ணாசிரமக் கொள்கைகளுக்குத் திருக்குறள் உடன்பாடானதல்ல என்பதை விளக்கியுள்ளார்.

     கா. அப்பாத்துரை (1907-89), தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, உலக இலக்கியங்கள், மொழி உரிமை போன்ற நூல்களைப் படைத்துள் ளார். கலை, இனம், நாகரிகம், வரலாறு, சமயம், தத்துவம் முதலியவை குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அப்பாத்துரையின் தென்மொழி, உலக இலக்கியங்கள் ஆகிய நூல்களில் சில மதிப்பீடுகள் உண்டு.

     உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே ஆவர். உலக வரலாற்றில் வேறுஎந்த மொழிக்குமில்லாத இளமை, தமிழுக்கு உண்டு. மனித இலக்கியமாகவும் உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் பொது இலக்கியமாகவும் திகழ்கிறது தமிழ் இலக்கியம். சங்க இலக்கியம் கண்ட தமிழகம் இன்றைய தமிழகத்திலிருந்து மிக உயர்ந்திருந்தது. யாருக்கும் அடிபணியா இலக்கியமாக விளங்கியது சங்க இலக்கியம்.

     அன்றைய தமிழர்கள் வெறும் உழவர்களாகவும் நாட்டுப்புறத்தவராகவும் இல்லாமல் சிறந்த செல்வந்தர்களாக விளங்கினர். சங்கத்தமிழருடைய இசைக் கருவிகள் இன்று நாம் காணும் இசைக்கருவிகளைவிட உயர்ந்தவை. அவர்களுடைய ஆடைஅணிகளும் உயர்ந்தவைகளே. இடைக்காலத்தில் இருந்ததுபோல் அன்று அடிமை     யாக இருக்கவில்லை. கடற்கோளினால் நம் பழம் இலக்கியங்கள் பல அழிந்துவிட சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திருப்பது நாம் பெற்ற பேறு. தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளில் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் இவைகளை விட சிலப்பதிகாரத்தில் மறுமலர்ச்சிக் கருத்துகள் மிகுந்துள்ளன. புதுமலர்ச்சிக்கு உரிய பல விதைகள், து£ண்டுதல்கள் சிலப்பதி காரத்தில் உள்ளன. கம்பராமாயணமும் பெரிய புராணமும் நமக்கு அமிழ்தமாகவோ மருந்தாகவோ அமையவில்லை. இரண்டும் இருவேறு வகையில் நமக்கு ஊறு செய்பவையாகும்.

     சங்ககாலம் பற்றிய பொற்காலப் பார்வையை இவ்வாறு பிறரைவிட காத்திரமாக அப்பாத்துரை முன்வைப்பதைக் காணலாம். அதேபோலச் சிலப்பதி காரத்தைப் பற்றிய இவரது கருத்தும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

     கம்பரிடம் சொற்சுவை பொருட்சுவையைக் காணலாம். அவை பாமர மக்களி டமிருந்து கவிதையைப் பிரிக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரம் அப்படியன்று. குடிமக் களைக் காப்பியத்தோடு இணைக்கிறது. சிலப்பதிகாரம் நாகரிகத்தின் ஊன்று கோலாக வும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. கம்பராமாயணத்திற்கு முற்பட்ட இலக்கியப் பெருமையை மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இராமாயணம் புகுத்தப்பட்டது. சிந்தாமணி, கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைப் பிணிக்கக்கூடியது.

     10ஆம் நூற்றாண்டில் சிந்தாமணிக்கு இருந்த புகழைக்கண்டு கம்பராமா யணத்தையும் பெரியபுராணத்தையும் படைத்தனர். சிந்தாமணி மக்களிடையே பரவாத தாலேயே இவ்விரண்டும் தனிப்பெரும் நூல்களாகத் திகழ்ந்தன.

     பெரியபுராணம், கம்பராமாயணத்தைப்போல ஆரியமாயைக்கு இடம்தர வில்லை. தமிழுக்குச் சிறுமையை அளிக்கவில்லை என்று கூறும்போது பிற திராவிட இயக்கத் திறனாய்வாளர்களுக்கு முரண்படுகிறார்.

     இராவணன் இராமனின் எதிரி மட்டுமல்ல, ஆரிய முனிவர்களின் எதிரியும்

     கூட. காரணம், வேள்விகளுக்கு இராவணன் எதிர்ப்புத் தெரிவித்தான்.

     சி. இலக்குவனார், 1910ஆம் ஆண்டு பிறந்து 67 ஆண்டுகள் வாழ்ந்தவர். பள்ளிகளிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர். குறள் நெறி என்ற தனித்தமிழ் இதழை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ்மொழி, போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

     தமிழரின் வாழ்க்கை மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்காகவே தொல்காப்பியம் படைக்கப்பட்டது. ஆரியரின் ஆதிக்கம் தொல்காப்பியத்தில் தெரிகி றது. சிவனை முதற்கடவுளாகக் கொண்ட வழக்கம் தொல்காப்பியர்காலத்தில் இல்லை. தொல்காப்பியரின் காலத்தை இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இடைக் காலத் தில் இலக்கியங்கள் புராணங்களாக மாறிவிட்டன. கடவுட்பாடல்களே இலக்கிய மாயின. இதனால் மக்கள் பக்தர்களாக மாறினர். தொல்காப்பியரின் அறிவியல் சிந்த னை மறைந்து மூடநம்பிக்கைகளும் வீண்பக்தியும் தோன்றின.

     ஓதலும் து£தும் உயர்ந்தோர் மேன என்ற நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் சிலர் முதலிரு வருணத்தாரே என்று கூறுவர். வேளாளர் ஒழிந்தோர் என நச்சினார்க் கினியர் கூறுவர். காரணம் உரையாசிரியர்கள் காலத்தில் நால்வகை வருணம் செல் வாக்குப் பெற்றது. தொல்காப்பியர் காலத்தில் இல்லை. எனவே தொல்காப்பியர் வேளாளரைத் தாழ்ந்த குலத்தவர் என்று ஒதுக்கியிருக்க இயலாது முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்று கூறக்காரணம் பெண்ணை அடிமைப்படுத்துவதன்று. ஆண்கள் பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டால் சொந்த நாட்டிற்குத் திரும்பிவர மாட்டார்கள். பெண்கள் வீட்டிலிருந்தால்தான் சொந்தநாட்டிற்கு வருவர். அதற்கா கவே தொல்காப்பியர் இவ்வாறு கூறியுள்ளார். .

     தொல்காப்பியர்காலச் சிந்தனையெல்லாம் மறைந்து மூடப்பழக்கவழக்கம் மலர, இடைக்கால பக்தி இலக்கியங்கள் காரணமாயின என்று சி. இலக்குவனார் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 ஞா. தேவநேயப்பாவாணர் (1902-81) மொழிஞாயிறு எனச் சிறப்பிக்கப்படுப வர். இவரும் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கமளித்தவர். தமிழ்மொழி இலக்கணம், சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டு எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர். .

     தமிழரின் கொடைமடத்தைப் பாவாணர் இகழ்கிறார். கொடைமடப்பண்பினால் தான் தமிழர்கள் ஆரியர்க்கு அடிமையாயினர். ஆரியர்கள் தமிழரின் பண்பைப் பயன் படுத்திக் கோயில்களில் இடம்பெற்றுவிட்டனர். பல காணி நிலங்களைத் தானமாகப் பெற்றனர்.

     சிலப்பதிகாரத்தில் ஆரியத் தாக்கம் உள்ளது. பார்ப்பனியத்தைப் பரப்புவதற் கென்றே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டது என்கிறார். மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடக் கண்ணகி கோவலன் திருமணம் நடந்தது. கண்ணகியின் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணாவாள். மாதவியிடம் கௌசிகன் வசந்தமாலை என் னும் பார்ப்பனர் பணிபுரிந்தனர். மாடல மறையோன் செல்வாக்கு சிலம்பு முழுவதும் உள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் திருட்டுத்தொழில் புரிந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறையிலிட, பூசாரி கோயிலைப் பூட்டினான். பார்ப்பனர் போராடி னர். இறுதியில் பாண்டியன் வார்த்திகனை விடுதலைசெய்தான். அவன்காலில் விழுந் தான். எனினும் பார்ப்பனர் கோபம் தணியவில்லை. இச்சம்பவத்தினால் பார்ப் பனரின் செல்வாக்கு புரிகிறது. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது தவறு. பார்ப்பனரே மன்னன்மீது உள்ள கோபத்தில் மதுரையை எரித்தனர் எனப் பாவாணர் கூறுகிறார்.

     மு. அண்ணாமலை திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் குறிப் பிடத்தக்கவர்.    பேராசிரியராகப் பணியாற்றியவர். 1928ஆம் ஆண்டு செட்டிநாடு கொத்தமங்கலத்தில் பிறந்தவர். அலை, இமயவரம்பன் என்னும் புனைபெயர்களில் எழுதியவர். நல்ல கவிஞர். மலரும் புனலும், தாமரைக் குமரி, அதிசயக் காதலி போன்ற கவிதைத் தொகுதிகளாக அவர் கவிதைகள் வெளிவந்தன. பொன்னி இதழ் வழி எழுதத் தொடங்கிய இவருடைய சிறிய, ஆனால் சிறந்த நூல், நச்சினார்க்கினியர் என்பதாகும். இதுவே உரையாசிரியர்கள் பற்றித் தமிழில் எழுந்த முதல் திறனாய்வு. குற்றம்-நிறை இரண்டையும் சீர்து£க்கிப் பார்க்கும் நூல். மறைமலையடிகளும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் நச்சினார்க்கினியரை அவர்தம் வடமொழிச் சார்புடைய கருத்துகளுக்காகக் கண்டித்துவந்துள்ளனர்.

     நச்சினார்க்கினியரை முழுக்க முழுக்கத் தள்ளிவிட வேண்டும்

     என்று தொடங்குவது அறிவுலகிற்கு ஒவ்வாத செயலாகும்.

     காணும் எல்லாவற்றையும் Ôநன்று நன்றுÕ என அப்படியே வாங்

     கிக் கொள்ளும் சிந்தனையற்ற வறட்டுக்கும்பலையும் நான் சேர்ந்

     தவனல்லன். அவர்கருத்துகள் அத்தனையையும் அப்படியே நான்

     ஏற்றுக்கொள்ள நான் என்ன மொத்த வியாபாரியா? அதற்காக

     Ôநச்சினார்க்கினியர் தமிழைக் கெடுத்துவிட்டார்Õ என்ற பல்லவி

     யைத் திருப்பித் திருப்பிப் பாடும் உதவாக்கரைக்கூட்டத்தைச்

     சேர்ந்தவனும் நானல்லன்.

     இந்த மேற்கோள் இவரது நடுநிலைப்பாங்கான விமரிசனத் தன்மையைக் காட்டக்கூடியது. நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புகளை விளக்குகின்ற அதே நேரத் தில், ÔÔஒரு விமரிசகர் உரையாசிரியர் வடிவில் வெளிப்படுமபோது எப்படித் தடுமாற் றம் நிகழ்கிறது என்பதைக் காட்டியுள்ளேன்ÕÕ என்கிறார். Ôவள்ளுவர் தனித்தன்மைÕ என்ற நூலையும் ‘கம்பன் கெடுத்த காவியம்’ என்னும் நூலினையும் எழுதியுள்ளார். அநுமன் து£தன் எனக் கூறப்படுது பொருந்துவதாக இல்லை. து£தனுக்குரிய வேலை களைச் செய்யாது சீதையைத் திருட்டுத்தனமாகச் சந்தித்தல், இராவணனைச் சந்திக்காமை, இலங்கையை அழித்தல் இவையெல்லாம் து£தனுக்குரிய செயல் அல்ல. இராவணன் அம்புபட்டு இறந்துகிடக்கிறான். உடல் முழுக்க காயம். சீதைமேல் கொண்ட காதல் அவனுடலில் எங்கும் தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே இக் காயங்கள். இவ்வுவமை பொருத்தமானது. ஆனால் இவ்வுவமையைக் கூறுவது இராவ ணன் மனைவி. அவள் தன் கணவன் இறந்திருக்கும் நேரத்திலும் சீதையின் அழகை வருணிக்கிறாள். இராமனை ஒரு வார்த்தைகூட இகழவில்லை. இந்நிகழ்ச்சிகள் யாவும் பொருத்தமுடையவையாகத் தோன்றவில்லை.

     கைகேயியை அனுதாபத்துக்குரியவளாக முதலில் படைத்த கம்பர் இறுதியில் அவளை வெறுப்பதுபோல் அமைக்கிறார். இது கம்பரின் நடுநிலையற்ற தன்மையைக் காட்டுகிறது. கம்பர் சில பாத்திரங்களை உயர்த்தியும், சில பாத்திரங்களைத் தாழ்த்தி யும் காட்டுகிறார். அளவுக்கதிகமான கற்பனைப் பாடல்களால் வாசகரைச் சலிப்படை யச் செய்கிறார். தேவையான இடங்களில் கற்பனை வளத்தைக் கூட்டுவதை விட்டு விட்டு எல்லா இடங்களிலும் புனைவது அழகாக இல்லை. கம்பரின் யாப்பு வன்மை விருததப்பாக்களை அமைத்த முறை, புதுமையிலும் புதுமையாக உள்ளது. கம்பர் ஒருசில குறையுடையவராயிருப்பினும், கவித்திறத்தால் உயர்ந்து நிற்கிறார்.

     1940களின் இறுதியில் வெளியான கலையும் வாழ்வும் (க. அன்பழகன்), புதிய பாதை (இரா. நெடுஞ்செழியன்), விருந்து (மு. அண்ணாமலை), புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் (முல்லை முத்தையா), கவிஞரின் கதை (மணி) போன்ற நூல்களில் பாரதிதாசன் கவிதைகள் பற்றிய நலம் பாராட்டல்கள் இடம்பெற்றன. திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களான, பொன்னி, திராவிடநாடு, உண்மை போன்ற இதழ் களிலும் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.

     திராவிடஇயக்கப்பார்வை பன்முகப்பட்டது என்பதற்கு அப்பாத்துரை, மு. அண்ணாமலை போன்றோரின் பார்வைகள் சான்றுதரும். பெரியார் சிலப்பதிகாரத் தையும், பெரியபுராணத்தையும் ஏற்கவில்லை. அப்பாத்துரை, இவையிரண்டையும் நல்லிலக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறார். அண்ணாதுரை முதற்கொண்டு திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை எதிர்த்தபோது அண்ணாமலை அதைப் பாராட்டி யிருக்கிறார்.

     ப. கண்ணன், பகுத்தறிவு என்ற மாதஇதழை நடத்தினார். வீரவாலி என்னும் நூலை எழுதியுள்ளார். வாலியை வீரமிக்கவனாகவும் இராமனைக் கோழையாகவும் காட்டி எழுதப்பட்டநூல் இது. இராமன் ஒளிந்துநின்று வாலியைக் கொன்றது சரியா என்ற கேள்வி உண்டு, வாலியை எதிர்ப்படுபவர்கள் தங்கள் பலத்தில் பாதியை இழந்துவிடுவர் என்ற புராணக்கதை உள்ளது. அதனால் இராமன் மறைந்து நின்று அம்பெய்தான். இதில் இராமனின் இயலாமை வெளிப்படுவதை உணரலாம். சுக்கிரீ வனுக்காக வாலியைக் கொலைசெய்த இராம அவதாரத்தை மனிதர்களை மீட்க வந்தவன் என்று கூற முடியுமா? இராமாயணம் என்பது ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்கள் நம் நாட்டில் நுழைந்தபொழுது திராவிடர்களுக்கும் அவர்களுக்கும் நடந்த போராட்டச் சித்திரிப்பே ஆகும். திருவாரூர் தங்கராசுவும் ஏறத்தாழ இதே போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் தொடக்ககாலத்திலேயே அதிக ஈடுபாடு கொண்டு பெரியார் அண்ணா இவர்களோடு நெருங்கிப்பழகி, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று வாழ்பவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திரைக் கதை என்று படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டவர். சங்கத்தமிழ் தொல்காப்பியப் பூங்கா முத்துக் குவியல் குறளோவியம் எனப்பல நூல்களைப் படைத்துள்ள போதிலும் திறனாய்வு நோக்கு இவற்றில் இல்லை. இவரும் சில மறு வாசிப்புகளை வைத்துள்ளார். குறளோவியத்தில் தாழ்ந்தமக்களைத் தலைவர்களாகக் கொள்ளுகிறார். சிலப்பதிகாரக் கதையையும் பகுத்தறிவு முறையில் மாற்றி அமைத்துள் ளார். சான்றாக, மதுரையை எரித்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு சரிந்து விழுந்து குடிசை பற்றிக் கொள்வதாக அமைப்பதைக் காட்டலாம்.

     முடியரசன் (1920-1998), பாரதிதாசன் பரம்பரையில்வந்த கவிஞர். 1940இல் திராவிட இயக்கத்தில் இணைந்தவர். போர்வாள், கதிரவன், குயில் முதலிய இதழ் களில் எழுதினார். வீர காவியம், பூங்கொடி, காவியப் பாவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகுநோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பத ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லும் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைட்பபது மற்றொரு வகை. இதைச் சொல்நயம் என்பர். ஒரு சொல் பல பொருளை உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். முதல் இரண்டு வகையாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதக்கு மிகச் சிறந்தன என்று கவிதை இன்பம்-சொல்லழகு என்னும் கட்டுரையில் கூறுகின்றார்.

     இடைக்காலப் புலவர்கள் இயற்றியவையெல்லாம் சமயக்காப்பியங்களே. அவை களால் எப்பயனும் இல்லை. மணிமேகலை தமிழ் உணர்வை வளர்க்கிறது. அறிவையும் நீதியையும் தர்மத்தையும் வலியுறுத்துகிறது. தொல்காப்பிய அமைப்பு முறை வேறு எந்த மொழி நூலிலும் இல்லாத அளவு சிறப்பானது.

     வீண் தமிழ்ப்பற்று கொண்டு முழங்குபவரைத் தமிழ் வாணிகர் எனக் குறிப்பிடு கிறார். இலக்கண வரையறைகளுக்கு உட்படாத புதுக்கவிதைகளை அடியோடு வெறுக் கிறார். பழமையைப் பாராட்டுபவர், இடைக்கால இலக்கியங்களை வெறுப்பவர். நவீன இலக்கியங்களில் கனவுத்தன்மை சார்ந்த-ரொமாண்டிக் படைப்புகளை மட்டுமே இவர் போற்றுகிறார்.

     இரா. நெடுஞ்செழியன் (1920-2000), திராவிட இயக்கக் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். உரிமைப்போர், மதமும் மூடநம்பிக்கையும், திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளில் உவமைநயம், பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி போன்ற இலக்கியக் கட்டுரைகளை மன்றம், திராவிட நாடு, உண்மை, இதழ்களில் எழுதினார். மொழிப்பற்றும் இலக்கியப் பற்றும் கொண்டவர்.

     நாகரிகத்தின் தோற்றமாக வளர்ந்த மொழி தமிழ். வேகமாக முன்னேறிய

     தமிழனின்அறிவு இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் நின்றுவிடக் காரணமாக

     அமைந்தது மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியுமே. அவற்றைப் போதித்தவைகள்

     பக்தி இலக்கியங்களும் புராணங்களும். போர், காதல், என்ற வாழ்க்கை முறை

     மாறி தவம், வரம், என்ற நிலை உருவாகி யாகத்திலும் யோகத்திலும் தன்

     சிந்தனையைச் செலுத்தத் து£ண்டியது புராணங்களே.

     சங்க இலக்கியங்கள் மனிதநலச் சிந்தனையின் முழு வளர்ச்சியாய் உள்ளன.

     ஐம்பூதங்களின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது

     சங்க இலக்கியம், உயிரும் ஆன்மாவும் அழிவற்றது என்ற மதவாதிகளின் கூற்றை

     சங்க இலக்கியம் மறுக்கிறது. மூடப் பழக்கவழக்கத்திற்கு எதிரானது சங்க

     இலக்கியம், தொல்காப்பியம் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்பதை

     ஏற்பதில்லை. திருக்குறளும் இதே கருத்துகளையே வலியுறுத்துகிறது. பதினெண்

     கீழ்க்கணக்கு நூல்களுள் சிற்சில இடங்களில் ஆன்மிகம் தலைது£க்கினாலும்

     பகுத்தறிவையே வளர்க்கின்றன. சித்தர்களின் பாடல்கள் பொதுஅறிவையும்

     பகுத்தறிவையும் ஊட்டி ஜாதி, மதம், கடவுளை கண்டிக்கின்றன.

     பெரியபுராண அடியார்களில் அதிகத்துன்பத்திற்குள்ளான அடியார்கள் பிரா மணர் அல்லாதாரே. பிராமணர் மேம்போக்காகவே சோதிக்கப்பட்டு பரமபதம் அடைந்துள்ளனர். தாழ்ந்த சாதியினர் கடுந்துன்பப் பட்டுள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் தாயைப் புணர்ந்து அதுகண்டு சகியாத தந்தையைக் கொன்ற பார்ப் பனனின் பாவம் தீர்ந்துவிடுகிறதாம். மனிதத்தன்மையற்ற செயலையும் பார்ப்பனன் செய்தால் அவனுக்கு மன்னிப்பு உண்டு என்பதைத்தான் புராணங்கள் வலியுறுத்து கின்றன என்பது அன்பழகனின் நோக்கு. புராணக்கதைகளைப் பற்றி அன்பழகன் எழுப்பும் வினாக்கள் சுவையாக உள்ளன. இவற்றில் வெளிப்படும் பகுத்தறிவு நோக்கினை நாம் இரசிக்கலாம். மேலும் இன்றைய தலித்திய விமரிசன நோக்கிற்கு ஆதாரமான சில பார்வைகள் அவரிடம் உள்ளன.

     புலவர் ந. இராமநாதனின் கவிஞரும் காதலும் என்ற நூல் பாரதிதாசன் பற்றிய திறனாய்வு நூல். பாரதிதாசன் கவிதைகளில் மரபும் புதுமையும் என்னும் நெல்லை ந. சொக்கலிங்கத்தின் நூலும் நன்கு அமைந்தது. மு. அண்ணாமலையின் இலக்கிய மேடையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடு உண்டு.

     பகுத்தறிவியக்கம் சார்ந்த பிற திறனாய்வாளர்களில் பெருஞ்சித்திரனார் போன் றோர் தென்மொழி இதழில் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. வெ. வரத ராசனின், தமிழும் தேனும், வ. சுப்பிரமணியனின் வாழ்வியற் கவிஞர்கள் ஆகிய வையும் பாரதிதாசன் பற்றியவை. புலவர் குழந்தையின் தொல்காப்பியர் காலத் தமிழர் என்ற நூலில் பகுத்தறிவாளர் கொள்கைச் சார்புத் திறனாய்வைக் காணலாம். தென்மொழி, குயில், உண்மை, தென்னகம், மன்றம், பகுத்தறிவு போன்ற இதழ்களில் பாரதிதாசன் பற்றிய இரசனைக் கட்டுரைகளைச் சிலர் வரைந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 வே. ஆனைமுத்து (1925), 1976இல் மார்க்சியபெரியாரிய-பொதுவுடைமைக் கட்சியையும் 1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்தார். சிந்தனையாளன் என்னும் இதழையும் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் ஆங்கில இதழை யும் நடத்தினார். பெரியார் களஞ்சியம் என்னும் பெருநூலைத் தொகுத்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்த வழக்கமான திராவிடப் பார்வையையே இவர் வலியுறுத் துகிறார்.

     சிலப்பதிகாரத்திலேதான் முதல்முதல் சமயக்கருத்துகள் புகுந்தன. மணிமேகலை யில் அது வளர்ந்தது. பெரும், சிறு காப்பியங்களில் மதக்கருத்துகள், தாராளமாகப் புகுந்தன. கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவை புண்ணிய நூல்களாகக் கருதப்படும் அளவுக்கு சமயவெறி நாட்டில் வளர்ந்துவிட்டது. இங்ஙனம் சமயம் கலந்த இலக்கியமாகத் தமிழிலக்கியம் மாறியதால் இலக்கியத்தின் உண்மைக் கருத்துகளை அறிஞர்கள் ஆய்ந்துகூறத் தயங்கினர். இதுபோன்ற நூல்களில் குறை காண்பது தம்குறை என ஏற்றுக்கொண்டனர். தழுவல் இயல்புகொண்ட உயிரினங்களே இன்றும் வாழ்கின்றன. இலக்கியமும் அவ்வாறே. திருக்குறளில் தழுவல் தன்மை சமயம், மொழி, நாடு கடந்து நிற்பதால், அழியா இலக்கியமாய் உள்ளது. சிலப்பதிகாரம் தொடங்கி எல்லா இலக்கியங்களும் மதப்பிடியில் சிக்கியுள்ளன என்பது போன்ற கருத்துகள் இவரிடம் வெளிப்படுகின்றன.

     கொண்டல் சு. மகாதேவன் 1925இல் கொண்டல்வட்டம் திடல் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் செயலாளராக விளங் கினார். 1948இலேயே எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசியவர். கண்ணகியின் மணம் காதல் மணமாகும், குலமகளிர் கோவலனைப் பாராட்டும் முறை குலமரபு என்றே கொள்ள வேண்டும். கோவலன் ஒரு சமூக அடிமையாகக் காட்டப்பட்டுள்ளான்.

     கானல்வரிப் பாட்டு காதல் போட்டியல்ல, கலைப்போட்டியே ஆகும். கலையின் மீது ஆர்வம் கொண்ட கோவலனால் கலையை மதிப்பிடத் தெரியவில்லை. கலைவழி மாதவியின் கண்கள் அசைய, அவ்வசைவைக் காதல்வலையாகப் புரிந்து கொண்டான். இறுதியில் காதலால் அவள்அழும்போது இது கலையினால் வரும் உணர்ச்சியற்ற கண் ணீர் என நினைக்கிறான். செங்குட்டுவன் இமயம் நோக்கிப் படையெடுத்தது, கண்ண கிக்காக அல்ல, கனகவிசயர்மீது கொண்ட பகைமைநோக்கியே என்பன போன்ற கருத்

துகளை வழங்கியுள்ளவர் இவர்.

     ஏ.பி. ஜனார்த்தனம்    அண்ணாதுரை படைப்புகள் பற்றிய ஆய்வினை முதன் முதலில் தொடங்கி வைத்தவர். அண்ணாவின் நாடகங்கள் பற்றிய ஆய்வு இவரது முனைவர்பட்ட ஆய்வாக அமைந்தது. அண்ணாவின் நடை பற்றி விரிவாக எழுதி யுள்ளார்.

     ந. சஞ்சீவி, சிலம்புத்தேன், சிலப்பதிகாரப் பெண்டிர், ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற பல நூல்களை எழுதியவர். மருதிருவர் பற்றிய நூலும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வரங்குகள் நடத்தி, பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் போன்ற பல நூல்களையும் வெளியிட்டவர். இலக்கிய இயல் அ-ஆ என்பது இவரது கோட்பாட்டு நூல். மா.கி. தசரதன், வேதங்களும் புராணங்களும் மக்களைப் பிரித் தாளுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழுணர்வை ஊட்டுகின்றன. சங்க இலக்கியம் ஒரு சில மேட்டுக்குடியினர் கையில் உள்ளது. பழம்பாடல்களைப் பாராட் டினால் மட்டும் தமிழ் வளராது. சிவன் படைத்த மொழி எனப் பேசிக்கொண் டிருப்பதாலும் குமரிக்கண்டம், சிந்து சமவெளி நாகரிகச் சிறப்பு, மன்னர்களின் வெற்றி போன்றவைகளைப் பேசினால் தமிழ் வளராது என்கிறார்.

     சங்க இலக்கியம் முழுதுமே மனித வாழ்வுக்குத் தேவையான உயர்ந்தகொள்கை களை உடையதாக உள்ளது. சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத் தப்பட்டனர். ஆண்களின் அறிவை மயக்கி, தீயவழி செலுத்தும் இயல்புடையவர்கள் பெண்கள்-மாயப்பிசாசு என்றெல்லாம் இடைக்காலத்திலேதான் பெண்கள் இகழப் பட்டனர். தமிழ்மண்ணில் வேற்றுநாட்டு மொழியோ பண்போ பரவாமல் தமிழ்ப் பண்பு தன் தனித்தன்மையுடன் விளங்கிய நாட்களில் ஆணுக்கு இருந்த உரிமையும் உயர்வும் பெண்ணுக்கும் சமுதாயத்தில் இருந்துவந்தது. ஆனால் வடவருடைய கூட் டுறவு ஏற்பட்ட பின்னர்தான் பெண்ணடிமைத்தனம் என்ற புன்மை ஏற்பட்டது. பரிமேலழகர் ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற குறளுக்குப் பொருள் எழுதும்போது-தன் மகனைச் சான்றோன் எனப் பிறர்கூறக்கேட்ட தாய் என்று எழுதுகிறார். காரணம் பெண் இயல்பாய்த் தானாக உணரும் ஆற்றல் அற்றவள் என்ற சிந்தனை பரவியிருந்த காலம் அது. இடைக் காலத்தில் எழுந்த புராணங்கள் எல்லாம் பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் அடிமையாகவுமே படைத்துள்ளன.

திராவிட இயக்கச் சார்பும் பிற சார்புகளும் கொண்ட சில அறிஞர்கள்

சாமி. சிதம்பரனார் (1900-1961)

     மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 1923ஆம் ஆண்டு பண்டிதர் பட்டம் பெற்றவர். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஓராண்டுக்காலம் பணியாற்றினார். பெரியாரின் குடிஅரசு இதழைப் படித்துப் பகுத்தறிவுக் கொள்கையில் பெரும் ஈடுபாடுகொண்டார். சுயமரி யாதை இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1928 முதல் குடிஅரசு இதழில் கடவுள் மதம் ஜாதி புராணம் சாத்திரம் மூட நம்பிக்கை போன்றவற்றைக் கண்டித்துஎழுதினார். தொல்காப்பியத் தமிழர், ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

     சாமி. சிதம்பரனார், சரஸ்வதியிலும், இன்னும பல ஏடுகளிலும் எழுதிவந்த பகுத்தறிவியக்கம் சார்ந்த முற்போக்குத் தமிழ் அறிஞர். இவர் பிற திராவிட இயக்கத்தி னர் செய்ததுபோல கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்களைக் கண்மூடித் தனமாகச் சாடவில்லை. வடிவ அடிப்படையிலான இலக்கியப் பார்வையுடன் எழுதி னார். வள்ளுவர் காட்டிய வைதீகம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் சமுதாய நிலை, என்றாற்போல சமூகப் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். ஆழ்வார்கள் அருள்மொழி, சங்கப்புலவர் சன்மார்க்கம், இலக்கியம் என்றால் என்ன, சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் போன்ற இவரது நூல்கள் சிறப்பானவை. இவர் தம் இரசனைச் சிறப்புக்கு இவரது கம்பராமாயணப் பதிப்பு எடுத்துக்காட்டு. பிற நூல்களை சமூகப்பார்வைகள் என்று சொல்லலாம்.

     மொழி என்பது ஒருநாட்டின் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் நாகரிகமடை வதற்கும் முதன்மையான காரணமாக இருப்பது. தமிழ்மொழியை மட்டும் படித்த ஒருவர் குறுகியஅறிவுகொண்டு மதவேற்றுமை வகுப்பு வேற்றுமை பாராட்டுகின்றார்.

     தொல்காப்பியத்தில் சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கவில்லை. தண்ணீரில் வாழும் உயிரினங்களைத்தான் குறிக்கிறது. பிற்காலத்தில்தான் இச்சொல் மனிதப் பிரிவுகளைக் குறித்தது. தொல்காப்பியர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம், விலைமாதருடன் கூடி வாழலாம் என்பது சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆண்பெண் வேறுபாட்டைப் பழம் இலக்கியங்கள் போற்றியதையே இது எடுத்துக்காட்டுகிறது.

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பயனற்ற செய்திகள் பல உள்ளன. திருக்குறள் நாலடியார் தவிர மற்ற அறநூல்களினால் எந்தப் பயனும் இல்லை. சோம்பேறி வேதாந்தங்களையே அவை போதிக்கின்றன. ஐம்பெரும் காப்பியங் கள் சமண புத்த மதத்தை போதிக்கும் கதைகளே. தமிழ்மொழியிலுள்ள இலக்கி யங்கள் புராணங் களாகவும் சமயநூல்களாகவும் நீதிநூல்களுமாகவே உள்ளன. ஒருநூல் அந்நாட்டு மக்களுக்குப்பயன்படும் விதத்தில் நாட்டு மொழியில் வெளி வந்தாலொழிய அந்நூலினால் எந்தப் பயனுமில்லை. இம்மாதிரி திராவிட இயக்கத்தின் கருத்துகளை அப்படியே எடுத்துரைத்தாலும், கண்மூடித்து£ற்றுவதையோ போற்றுவதையோ இவரது நூல்களில் காணமுடியாது. மேலும் இவரது இலக்கியப் பார்வையும் நடையும் திராவிட இயக்கத்தின் பார்வை, நடையைவிட மார்க்சிய இலக்கிய நோக்கிற்கு அணுக்கமானது.

சாலை. இளந்திரையன்

     புரட்சிக் கவிஞர் கவிதைவளம் (1964) என்ற நூல் அக்கால எல்லை வரை வெளிவந்த பாரதிதாசன் திறனாய்வுகளில் முக்கியமானது. புதுமையானது. பகுப்பு முறைத் திறனாய்வும் பதிவுநவிற்சித் தன்மையும் கலந்தே காணப்படுவது. நிறைகளை யும் குறைகளையும் ஒரு விரிந்த பார்வையில் இயம்பி மதிப்பீடு செய்வது. இந்நூல் சாலை. இளந்திரையனை ஒரு முக்கியமான திறனாய்வாளராக நிறுவியது.

     அடுத்து இரு ஆண்டுகளில், இவருடைய தமிழில் சிறுகதை, சிறுகதைச் செல்வம் ஆகிய இரண்டும் வெளிவந்தன. முன்னது சிறுகதை பற்றிய அறிமுக நூல். இலக்கிய உலகில் நுழைய விரும்பும் இரசிகனுக்கு ஒரு தக்க வழிகாட்டி. பின்னது, இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்யும் பாராட்டு நூல். இந்நூல் முன்னுரையில் சாலை. இளந்திரையன் கூறுகிறார்:

     சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் நமது வாசகர்களில் பெரும்பாலோர்க்கு இன்னும் சரிவரப் பிடிபடாததால், எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு அவர் களால் சரியானபதில் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இந்தநிலை நீடித்தால், அவசர கால வாழ்வின் து£துவனாகிய திருவாளர் பத்திரிகை, எதையெதையோ சிறுகதைகள் என்று மக்களிடம் கூறி நிலைநாட்டி விடுவார். அப்படி அவர் செய்து விட்டால், அதன்பிறகு நமது மக்களை நல்ல இலக்கிய ரசிகர்களாக்குவது முடியாத காரிய மாகவே போய்விடக்கூடும்.

     இந்நூலின் தோரணவாயில்என்ற முன்னுரை, 1966 வரை தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வின் வரலாற்றையும் அளிக்கிறது. இந்நூல் முதல் வரிசைத்தரம் உள்ள இருபது சிறு கதைகளின் அறிமுக விமர்சனக் குறிப்புகள் என்கிறார் சாலை. மேற்குறிப்பிட்ட மூன்று நூல்களின் பின்னணியில் பார்க்கும்போது தர நிர்ணயம் செய்யும் நல்ல மதிப்பீட்டாளராகச் சாலை மலர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர் ஒரு புலமையாளராக இருப்பினும் நல்ல திறனாய்வாளராகியிருக்கிறார்.

      புதுத்தமிழ் முதல்வர்கள், புதுத்தமிழ் முன்னோடிகள் என எழுதிய இரு நூல்க ளும் தற்கால இலக்கிய வரலாற்றுப் பாங்கானவை என்றாலும் அவற்றில் திறனாய்வுக் குறிப்புகள் மிகுதியாக உண்டு.

ம.பொ. சிவஞானம்

     ம.பொ.சி. 1945 அளவில் எழுதத்தொடங்கியவர். இவருடைய முதல் இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் தமிழரும் 1947இல் வெளிவந்தது. இதன்பின் ஏறத்தாழ இலக்கியம் பற்றிய நாற்பது நூல்களை ம.பொ.சி. வெளியிட்டுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் பாராட்டுமுறைத் திறனாய்வு. இளங்கோவின் சிலம்பு, உலக மகாகவி பாரதி. இவ்வளவு நூல்கள் எழுதினாலும் அவரை ஒரு ஆழமான திறனாய்வாளராக எண்ணமுடியவில்லை. காரணங்கள் இரண்டு. ம.பொ.சி யின் நூல்களில் சொற்கள் வீணாக்கப்படுகின்றன. ஒரு தொடரில் சொல்லவேண்டிய கருத்தினை, ஒரு அத்தியாயம் எழுதிச் சொல்வார். இரண்டாவது, இவருடைய ஆய்வு, மரபுவழிவந்த பாராட்டுத் திறனாய்வு குணம் காணல் மட்டுமே. பெரும்பாலும் நவீன விளக்கவுரை எழுதிப் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவது இவரது இயல்பு. கம்ப ராமா யண ரசனைக்கு ஒரு டி.கே.சி. என்பதுபோல, சிலப்பதிகார ரசனைக்கு ஒரு ம.பொ.சி. என்று பேசப்படும் நிலை சாதாரணப் படிப்பறிவு உடையோர்இடையே சிலப்பதிகார ரசனை வளர்வதற்கு ம.பொ.சி. எவ்வளவு உதவிசெய்தார் என்பதை விளக்குகிறது.

     1945ஆம் ஆண்டிலிருந்து ம.பொ.சி. பல இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். 1950களில் மட்டும், கண்ணகி வழிபாடு, வள்ளுவர் வகுத்தவழி, இலக்கியச் செல்வம், இளங்கோவின் சிலம்பு ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. 1960களில் பாரதியும் ஆங்கிலமும், எங்கள் கவி பாரதி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, வள்ளலாரும் பாரதியும், உலகமகாகவி பாரதி போன்றவை வெளிவந்தன. 1970களில் இலக்கியங் களில் இனஉணர்ச்சி, கலிங்கத்துப்பரணி திறனாய்வு, திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன், சிலப்பதிகார யாத்திரை, சிலப்பதிகாரத் திறனாய்வாளர், சிலப்பதிகார ஆய்வுரை, சிலப்பதிகார உரையா சிரியர்கள் சிறப்பு, திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும் போன்ற நூல்களை எழுதி யுள்ளார். விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர் போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார்.

     தொல்காப்பியப்பொருளதிகாரம் வறட்டு இலக்கணமாக இல்லாமல் தமிழினத் தவரின் வாழ்க்கைநெறியை இலக்கியமாக்கிக் காட்டுகிறது. தொல்காப்பியம் தொகுப்பு நூலே அன்றிப் படைப்புநூல் அல்ல. புதிதாக எதுவும் எழுதப்படவில்லை. முன்னி ருந்த வகைகளைத் தொகுத்துள்ளார். தொல்காப்பியக் களவியல் வெறும் நாடகவழக் கேயன்றி நாட்டு நடப்பல்ல. தொல்காப்பியர் வடபுலத்திலிருந்து வந்தவரா அல்லது தமிழராஎன்ற வினாவுக்குத் தொல்குடியைச்சேர்ந்த தமிழர் என்று சொல்கிறார். வீடு பேறு பற்றிய சிந்தனை வடக்கிலிருந்து வந்ததே. சங்க இலக்கியத்தில் இச்சிந்தனை இல்லை.

     சிலப்பதிகாரம் முதன்மையாக ஒரு பிரச்சார இலக்கியம் எனலாம். அதுவும் அரசியல் பிரச்சாரமாகும். அந்தஅரசியல், தமிழினவழிப்பட்டது. மணிமேகலை மக்கள் இலக்கியமாக இல்லாது மதஇலக்கியமாக உள்ளது. மணிமேகலை சிலப்பதிகாரத்திற்கு இணை நூலன்று, தனி நூல். களப்பிரன் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டை போதிக்க இனஒருமைப்பாட்டை வளர்க்க சமயவேற்றுமை கடந்த சமுதாய உறவை வலியுறுத்தத் தோன்றிய நூல் முத்தொள்ளாயிரம். நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மனை ஓட்டிய வர லாற்றுச் செய்திகள் முலாம் பூசப்பட்டுள்ளன. அது வரலாற்று இலக்கியமன்று. அது கட்டுக் கதையே.

     நந்திக்கலம்பகம் பண்ணோசையும் பொருள் செறிவும் உடைய சிறந்த

     இலக்கியமாகும். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒருசிறிதும் அது உதவி

     புரியவில்லை. என்றாலும், தமிழ்மொழி வளர்ச்சியற்றுக்கிடந்த பல்லவர்

     ஆட்சிக்காலத்தில் பிறந்த ஒரேஒரு சமூகஇலக்கியம் என்ற வகையில் அதற்கு

     வரலாற்றில் தனி இடம் உண்டு.

என்பது நந்திக்கலம்பகம் பற்றி இவரது கருத்தாகும். கலிங்கத்துப் பரணி சிலப்பதி காரத்துக்குப் பின் தோன்றிய வரலாறு தழுவிய இலக்கியமாகும். தமிழர் என்ற இனக் கண் கொண்டு பார்த்தால் தமிழினத்திற்குத் தேவையற்ற இலக்கியமாகும்.

     கலிங்கத்துப்பரணியில் கடைதிறப்பு காமரசம் நிறைந்தததாக உள்ளது. கடவுள் வாழ்த்தை அடுத்துக் காமத்தை ஊட்டும் கடைதிறப்பு தேவையற்றது. இதனை சுடு காட்டுப் புராணம் என்றும் செயங்கொண்டாரை காமரசம்வழங்கிய முதற்புலவர் என்றும் கூறலாம். பக்தி இலக்கியமான திருப்புகழிலும் நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டுள்ள பிரபந்தங்கள் சிலவற்றிலும் காம உணர்வூட்டும் செய்திகளே இடம் பெறுகின்றன.

     ம.பொ.சி.யின் திறனாய்வில் மிக நீண்ட விளக்கங்கள், செறிவின்மை, மரபுவழி வந்த பாராட்டுமுறை போன்ற குறைபாடுகள் உள்ளன. இவை தன்மை ரீதியானவை. சமயக்கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் இலக்கியத்தில் பொருத்திப்பார்த்தல், ஆகியவை உள்ளடக்க ரீதியானவை. அவருடைய இலக்கியக் கண்ணோட்டம், இன வுணர்வு, தமிழ்ப்பற்று, சமுதாய விழிப்புணர்ச்சி ஆகிய தளங்களின்மீது அமைந்தது. வெறும் இலக்கிய அழகுக்காக மட்டுமன்றி, சமுதாயத்தை உயர்த்தும் கருத்தாக்கம் இருந்தால் மட்டுமே அவர் ஒரு நூலைப் பாராட்டுகிறார்.

     பல்வேறு வகையான இலக்கியங்களையும் திறனாய்வு செய்ததில் இவர் திராவிட மரபில் தனித்தன்மைபெற்றவராக உள்ளார். பாரதியார் நூல்கள், சிலப்பதி காரம், வள்ளலார் பாக்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்தவர்களில் முக்கியமானவ ராக இருக்கின்றார். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதால் சிலம்புச் செல்வர் என்ற சிறப்பு இவருக்கு வாய்த்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 மயிலை. சீனி. வேங்கடசாமி

     1925முதல் திராவிடன் இதழாசிரியராகப் பணியாற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். குடிஅரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில் இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சங்ககால அரசியல், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கியம், தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், இறையனார் களவியல் ஆராய்ச்சி, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்றவை அவரது சில முக்கிய நூல்கள். சிறந்த வரலாற்றாசிரியராகவும் வரலாற்று நெறிப்பட்ட திறனாய் வாளராகவும் திகழ்ந்துள்ளார்.

     முச்சங்கங்கள் வெறும் கற்பனையே என்று ஸ்ரீனிவாசய்யங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறுவதை இவர் மறுக்கிறார். பொய் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் இவை பற்றிக் கூறப் படும் ஆண்டுக்கணக்குகளே. இவற்றில் கூறப்படும் மன்னர்கள் எண்ணிக்கை, அவர் களது ஆட்சிக்காலம் முதலியனவும் நம்பக்கூடியனவாக இல்லை. மன்னராட்சிக் காலத்தை வைத்துச் சங்கத்தைப் பொய் என்பது சரியன்று என்பது இவர் கருத்து.

     முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்னும் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்ட உரைகள் தருகின்றனர். இளம்பூரணர் கடல்வழி என்று கூற, நச்சினார்க்கினியர் மூன்று தன்மையில்-அதாவது ஓதல், தூது, பொருள் காரண மாகப் பிரியும்போது பெண்ணுடன் செல்வதில்லை என்று பொருளுரைக்கிறார். நச்சினார்க்கினியர் உரை தவறெனக்கூறுகிறார் வேங்கடசாமி.

     பத்தினிச்செய்யுள் என்று ஒரு பழங்கதைச் செய்யுள் உள்ளது. சிலப்பதிகாரத் திற்கு இதுவே மூலம் என மு.இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறினர். இதை மறுத்து இரண்டிற்கும் தொடர்பில்லை எனக் காட்டியுள்ளார். பத்தினிச்செய்யுள், வீரன் ஒருவன் கையில் மணிக்கடகத்துடனும் கட்டாரியுடனும் இறந்துகிடப்பதைக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் கோவலன் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. மதம்கொண்டயானையை அடக்கியபோதும் கோவலன் கையில் ஆயுதம் இல்லை. நகர் என்றால் அரண்மனை என்றபொருளும் உண்டு. மதுரை நகரம் எரிந்தது எனச் சிலம்பில் கூறுவது முழுநகரத்தைக் குறிக்கவில்லை, அரண்மனை எரிந்தது என்பதையே இது குறிக்கிறது.

     செங்குட்டுவன் தன் தாயை கங்கைக்கு நீராட்டச்சென்ற செய்தி பொய் என நீலகண்ட சாஸ்திரி கூறுவதை வேங்கடசாமி மறுத்துள்ளார். தன் தாயின் உருவச் சிலையை அல்லது எலும்பைக் கையில்கொண்டு நீராட்டச் சென்றான் என்று பொருள் கொள்ளலாம். முழுதும் இச்செய்தி பொய்எனக் கூறவியலாது.

     சங்கப்பாக்களில் ஒரு முலை இழந்த பெண் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. வேறெங்கும் இத்தொடர் பயன்படுத்தப்படவில்லை. கண்ணகி தன் மார்பைச் சிதைத் தாள் என்ற கதை பொருத்தமாக இல்லை. இது ஒரு வழக்கிறந்த நிகழ்வாகலாம்.

     நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் காதல் கைகூடாதபோது தன் கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என வருகிறது. இதன்பொருள் கணவனோடு அனுபவிக் கும் இன்பவாழ்வு அழிந்துவிட்டது என்பதே. எனவே முலை குறைத்தல் வழக்கு கணவன் இல்லாமையையும் இன்பவாழ்வு போனது என்பதையும் குறிப்பிடும் வழக்கே என்கிறார்.

     திராவிடஇயக்கம் சார்ந்த நோக்கில் ஆய்வுகளைச் செய்துவந்தவர், பிறகு கருத்தியல் நிலையில் மாற்றம் எய்தியிருக்கிறார் என்பதை வேங்கடசாமியின் எழுத்துகள் வாயிலாக நன்கு காணமுடிகிறது.

     திராவிட இயக்கப் பார்வைகள் எதிர்மறையாக இருந்த காரணத்தினால் அப் பார்வைகள் மதிப்புப் பெறாமல் போயின. அதனால் அவ்வியக்கத்தின் பங்களிப்பும் பாராட்டப்படாமல் போயிற்று. இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் பங்களிப்பு பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இன்னும் மதம் நமது மனங்களில் ஆட்சிசெய்கிறது என்று காணலாம். மறைந்த சி.சு. செல்லப்பா, இன்று திறனாய்வுகள் எழுதும் ஜெயமோகன் போன்றோர் ஒரு கையசைப்பில் திராவிட இயக்கச் சார்பாளர்களைப் புறந்தள்ளிவிடும் அளவில் ஆழமற்ற எழுத்து களைக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

     திராவிட இயக்கக் கருத்துகள் பல எதிர்வினைகளை உருவாக்கின. சான்றாக, இராமாயணத்தில் வருணிக்கப்படும் அரக்கர்கள் தமிழரே என்ற கருத்து பரவலாயிற்று. இதை மறுத்து, அரக்கர் தமிழரா என்ற நூலை இரா.பி. சேதுப்பிள்ளை எழுதினார். இராவணன் பிரமனுடைய மரபில் வந்த பார்ப்பனன் என்றும், இராமன் அரச குலத்தவன் ஆனதால் சத்திரியன் என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கு சூர்ப்பநகை இராமனுடன் செய்யும் விவாதம் சான்றாக அமைகிறது என்கிறார். கம்பராமாயணம் பற்றிய விரிவான விவாதம் உருவாக திராவிட இயக்கம் காரணமாக அமைந்தது.

     திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தில் மேற்கொண்ட அணுகுமுறை மிக எளிமையானது. குறுக்கல்வாதம், எளிமைப்படுத்தல் ஆகியவை திராவிட இயக்க எழுத்துகளின் குறைகள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பாராட்டுதல், காப்பியங்கள்-புராணங்களிலுள்ள கட்டுக்கதைகளின் ஒவ்வாமையையும், தீங்குகளை யும் எடுத்துரைத்தல், பாரதிதாசன், புலவர் குழந்தை, போன்ற திராவிட இயக்கக் கவிஞர்களைப் பாராட்டுதல் என்பவற்றில் அது அடங்கிவிடும். இவற்றை மீறிச் செயல் பட்டவர்கள் மிகவும் குறைவு.

     சமூகத்தில் சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். சாதிமுறைக்கு அடிப்படை சமயமே என்பதனால், சமயம், கடவுள் போன்ற கருத்தாக்கங்களையும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்ற முறையில் பார்ப்பனியத்தையும் எதிர்த்தனர். மூடநம்பிக்கைகளும் பார்ப்பனியக் கருத்துகளும் எந்த இலக்கியத்தில் இடம்பெற் றிருந்தாலும், எதிர்த்தனர். செல்வாக்குப் பெற்ற நூல் என்ற வகையில் கம்ப ராமாயணம் மிகுதியான தாக்குதலுக்கு உள்ளாயிற்று. பாரதியாரையும் ஒரு பார்ப்பனக் கவிஞன், வைதிகக் கவிஞன் என்று நோக்கியதால், அவரையும் புறக்கணித்தனர்.

     மதமும் மூடநம்பிக்கைகளும் ஆட்சிசெய்யும் ஒருசமூகத்தில் மதத்தைத் தோலுரித் துக்காட்டினர் என்பது முதன்மையாக திராவிட இயக்கம் செய்த நன்மை. பலசமயங்களில் சமூகவியல், மானிடவியல் நோக்குகளில் மதத்தையும் மதம்சார்பான நூல்க ளையும் நோக்கியுள்ளனர். இவை ஆரம்ப நிலையின என்றாலும், பின்னால் பெண்ணிய, தலித்திய, வரலாற்றியத் திறனாய்வுகள் வளர்வதற்குப் பயனுள்ளவையாக இருந்தன.

     இலக்கியக்கட்டுரைகள் என்னும் கட்டுரைவகையினை மிகுதியாகக் கையாண்டவர்கள் இவர்கள். உரைநடை வளர்ச்சியிலும், பத்திரிகைத் தமிழ் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தினரால், பெரும்பாலும் வடமொழிகலவாத எளிய து£ய தமிழ்நடை ஒன்று பத்திரிகைகளுக்கு இசைவாக உருவாயிற்று. அதேசமயம், திராவிட இயக்கத் தினரிடம் காணப்பட்ட மிகைஉணர்ச்சிப்பாங்கு இந்த நடையைச் சிறுமை கொண்ட தாக்கியது. நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் திராவிட இயக்கத்தினரின் பங்கினைக் குறைத்து மதிப்பிடஇயலாது. திராவிடஇயக்கத்தினர் முன்னெடுக்கவில்லை என்றால் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களோடு தமிழ்நாடக வளர்ச்சி நின்று போயிருக்கக்கூடும்.

     புலவர்கள், தமிழாசிரியர்களிடம் திராவிட இயக்கத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. தமிழ் ஆய்வில், ஏற்புநிலையில் சில இருமைஎதிர்வுகளை திராவிட இயக்கம் உருவாக்கியது. பதிப்புத்துறையில் சி.வை.தாமோதரம் பிள்ளை X உ.வே.சாமி நாதையர் என்ற இருமை செயல்பட்டது. சங்கஇலக்கியம் X கம்பராமாயணம், பாரதிதாசன் X பாரதியார் என்ற விதமாக எதிர்முனைகள் முக்கியமாகச் செயல்பட்டன. திராவிட இயக்கம் சார்ந்தோர், சமூகப் பார்வை நோக்கில் பாரதியைப் புறக்கணித்து, பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தனர். மார்க்சிய முற்போக்கு அணியினர், பாரதியை அவருடைய முற்போக்குப் பார்வைகளுக்காகவும், தேசிய நோக்குக்காகவும் பாராட்டினர். குறுகிய இன, மொழிப் பார்வையில் இலக்கியம் படைத்தவர் என்று பாரதிதாசனைப் புறக்கணித்தனர். பாரதிதாசன் மறைவுக்குப் பின்னர், 1970 அளவில் இம்முரண் பாடுகள் மறைந்தன. எனினும் இன்றும் தனித்தமிழாளர்களால், தமிழ்ப் பற்றாளர் களால் பாரதிதாசனே பாரதியைவிடச் சிறந்த கவிஞர் என மதிக்கப்படுகிறார். இரச னையாளர்களால் பாரதி உயர்ந்தவர் என மதிப்பிடப்படுகிறார்.

     பல்கலைக்கழகங்களில் மிகமுக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய பேராசிரியர்கள் மு. வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய இருவரும். இவர்கள் பொதுநோக்கில் திறனாய்வு செய்வதுபோல் தோன்றினாலும், இருவருடைய நூல் தேர்வு என்பதன் வாயிலாகடச் சார்புகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக, மு.வ., ஒருபோதும் கம்பராமாயணம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதில்லை. (அதேசமயம் நேரடியாகக் குறைகண்டதும் இல்லை. தனிப்பட்ட முறையில் பாராட் டியும் இருக்கிறார்.)

     தெ.பொ.மீ.யும் கம்ப ராமாயணத்தைப் புறக்கணிக்கவில்லை. என்றாலும் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டது போன்று விரிவாக அதில் ஆய்வில் இறங்கவில்லை. சங்கஇலக்கியச் சார்பானவர்கள், கம்பராமாயணச் சார்பானவர்கள் என்ற பிரிவுகள் கல்வியாளர்களிடையே இன்றுவரை காணக்கிடப்பதற்கு இந்நோக்கு காரணமாகிவிட்டது. திராவிடக் கருத்துகளை மறைமலையடிகள் போன்ற சைவர்கள் ஓரளவு ஏற்ற துண்டு. இவர்களிடமும் தேவாரம் X திவ்யபிரபந்தம் என்ற எதிர்நிலை செயல்பட்டது. இந்த மரபும் இன்றுவரை ஆய்வாளர்களிடம் தொடர்கிறது.

     பொதுவாக, திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்களிடம் நாம் காணக்கூடிய குறைகள் பல உள்ளன. இயங்கியல் முறையில் அவர்கள் ஆய்வு செய்யவில்லை. மதம் என்பதை ஓர் அழிவுச் சக்தியாகவும் மூடநம்பிக்கையாகவும் மட்டுமே கண்டனர். சிற்சில கருத்துபேதங்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியம் பற்றி அவர்களுடைய கருத்துகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. உள்ளடக்கத்தை நோக்குதல் மட்டு மே அவர்களிடம் உள்ளது. உருவஆய்வில் அறவே ஈடுபடவில்லை. உள்ளடக்கத்திலும் அறநோக்கத்தை முதன்மைப்படுத்திக் காணும் நோக்கு உள்ளது.

     கொச்சையான மார்க்சியப் பார்வை, இலக்கியத்தை வர்க்க அரசியலாக மட்டும் நோக்கியதை ஒத்த ஒரு பார்வையே திராவிடப் பார்வையும். திராவிட இயக்கத்தில் சாதிய அரசியலின் இடமும் மார்க்சிய இயக்கத்தில் வர்க்க அரசியலின் இடமும் ஏறத் தாழ ஒரேமாதிரியானவை.

     திராவிட இயக்கம் சார்நத ஆய்வுகள், எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாலும், உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தியதாலும், திறனாய்வுக்கான சிறந்த நிலையை எட்ட முடியவில்லை. நேர்முகமாக எழுந்த திறனாய்வுகளும் வெறும் பாராட்டுகள் என்ற அளவில் நிற்கக்கூடியவையே. எனினும் அதனால் தனித் தமிழ்க் கொள்கை வலுப்பெற்று, து£ய தனித் தமிழ்ப் பண்பாட்டையும், மொழியையும் பிரதி பலிப்பவை என்ற நிலையில் சங்க இலக்கிய ரசனை வளர்ச்சி பெற்றது.

     1960-70 காலப்பகுதியிலேயே பகுத்தறிவாளர் திறனாய்வு பாரதிதாசன் நூல்களின் திறனாய்வு என்ற நிலைக்கு ஒடுங்கிவிட்டது. பிற கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிப்பிடப்பட்டது மிகவும் குறைவு. 1970-80 காலப்பகுதியிலும் இந்நிலையே நீடித்தது. 1971இல் பல இதழ்கள் பாரதிதாசன் நினைவு சிறப்பு மலர்கள் வெளியிட்டன. 1980-2000 காலப்பகுதியில் தனித்த திராவிட இயக்கத் திறனாய்வு என்பதை வே. ஆனை முத்துவும் அவருடைய கருத்தியலோடு தொடர்புடைய ஒரு சிலரும் மட்டுமே செய்து வந்தனர். மற்றப்படி திராவிட இயக்கத் திறனாய்வு என்பது இல்லாமற்போய், அதன் கொள்கைகளை மார்க்சிய இயக்கத்துடன் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாயிற்று. மூடநம்பிக்கை சார்ந்தனவற்றை எதிர்க்கும் பகுத்தறிவுத் திறனாய்வு கைவிடப்பட்டு, சாதி பற்றிய, பெண் அடிமைத்தனம் பற்றிய பெரியாரின் கொள்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு, பெரியாரியம் என்று நோக்கப்படும் நிலை உருவாயிற்று.

     திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் எல்லாநிலையிலும் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெரும்பாலானோர் நேரடியாக இயக்கப்பணி ஆற்றாவிடினும் இயக்கத்தாக்கம் பெற்று அதனைத் தம் எழுத்தில் காட்டியுள்ளனர். வெளி அரசியலில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் மிக நுட்பமான நிலையில் திராவிட இயக்கத் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

     திராவிட இயக்கத் தாக்கம் பெற்ற பேராசிரியர்கள் 1960-90 காலப்பகுதியில் மிகுதியாகப் பல்கலைக்கழகங்களிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றிவந்தனர். முதல் தலைமுறையைச்சேர்ந்த சி. இலக்குவனார் முதலாக, க. த. திருநாவுக்கரசு, இரா. தண்டாயுதம், பொன். கோதண்டராமன் போன்றவர் வழியாக, எழில் முதல்வன், தா.வே. வீராசாமி, மெ. சுந்தரம் எனப் பலரைப்பட்டியலிடஇயலும். தமது இளமைப் பருவத்தில் திராவிட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டுப் பிறகு தமிழ் படித்துப் பேராசிரி யர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஆன அனைவரும் இப்பட்டியலில் வருவர். ஆனால் இவர்களது திறனாய்வுமுறை கல்வித்துறைசார் திறனாய்வாகும்.

     வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

     அறுபதுகளின் இறுதிக்குள் திராவிட இயக்கத்தின் கருத்துகள் பின்பற்றுவோர் இன்றி வெறும் முழக்கங்களாக எஞ்சி இற்றுப்போயின. பொதுவாக, அமைப்பியம் முதலான இயக்கங்கள் தோன்றியதிலிருந்து ஆசிரியன் இறந்துபோனான், ஆசிரியனுக் கும் நூலுக்கும் தொடர்பில்லை போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோஷங்கள் ஒருவகையில் உண்மையானதை திராவிட இயக்கம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் அதீதமான பிம்பங்களின் கலாச்சாரத்தினை உருவாக்கியதும் திராவிட இயக்கமே. பெரியார் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கச் சார்பான கொள்கைகளை உருவாக்கியவர்கள், அவற்றைப் பரப்புவதற்கான நூல்கள் எழுதியவர்கள், அவற்றைப் பின்பற்றுவதில் சற்றும் அக்கறை காட்டவில்லை. ஆகவே ஆசிரியன் வேறு, நூல்கள் வேறு என்பது உண்மையாகிவிட்டது. திராவிட இயக்க நூல்களைப் பொறுத்தவரை ஆசிரியன் இறந்து போனான் என்பது முற்றிலும் உண்மை. தாங்கள் கூறியவற்றைத் தாங்களே நம்பாதவர்களை-தங்கள் வாழ்க்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என்று ஆனவர்களை, வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது?

—–

http://www.buyessayonline.ninja/

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard