Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 072 அவையறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7337
Date:
072 அவையறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அவையறிதல் 
அவையினது இயல்பு அறிதல்.
குறள் திறன்-0711 குறள் திறன்-0712 குறள் திறன்-0713 குறள் திறன்-0714 குறள் திறன்-0715
குறள் திறன்-0716 குறள் திறன்-0717 குறள் திறன்-0718 குறள் திறன்-0719 குறள் திறன்-0720

openQuotes.jpgஒரு பொருளை எடுத்துச் சொல்வதானால் யாருக்குச் சொல்கின்றோம் என்று ஆராயாமல் பேசுவது கூடாது. அதனால் ஒரு பயனும் இல்லை.
- மு வரதராசன்

 

ஒரு அவையில் பேசச் செல்வோர் அந்த அவை, அவையிலுள்ளோர் இயல்பைத் தெரிந்துகொள்வதைச் சொல்வது அவையறிதல் அதிகாரம். பொதுமக்கள் கூடிய இடமாயிருந்தாலும் கற்றோர் அவையாயிருந்தாலும் அவையினர் தன்மை அறிந்து பேசவேண்டும். பேசுபொருள் பற்றிய அறிவுடன், சொல்வன்மையும் கொண்டு உரைக்கவேண்டும். தம்மைவிட அறிவிலும் திறனிலும் மிக்கார் அவையில் எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது. ஒத்தார் அவையில் எவ்வழியும் சொல்லுக; தாழ்ந்தார் அவைக்கண் பேசவே வேண்டாம் எனவும் சொல்கின்றன இவ்வதிகாரக் குறட்பாக்கள்.

அவையறிதல்

அவை, மன்றம், கழகம் என்பன ஒரு பொருள் தரும் சொற்கள். அவை என்பது ஒரு கருத்தை மற்றவர்க்குச் சொல்லும் இடம். அது பெரும் மக்கள் திரள் கொண்ட ஒரு திடலாகவோ சில நூறுபேர் மட்டுமே கொண்ட மாநாட்டு அரங்கமாகவோ அல்லது கருத்தரங்கு நடக்கும் சிறிய அறையாகவோ இருக்கலாம். வணிக நிறுவன ஆட்சிமன்றக் கூட்டமும் ஓர் அவைதான். மாணவர்களும் ஆசிரியரும் கூடும் வகுப்பறையையும் ஒரு அவையாகக் கருதலாம்.
அறிஞர் அவை, பொதுமக்கள் அவை, தொழிலாளர் அவை, புலவர் அவை என அவைகள் பெரும்பான்மையினர் பற்றிப் பல வகைப்படும். இவ்வதிகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவன புல்லவை, தம்கணத்தார் அல்லாதார் கோட்டி, ஒள்ளியார் அவை, முதுவர் அவை என்றிவை. மற்ற வகையினர் வேறுவிதமாகக் குறிக்கப் பெறுகின்றன.

இவ்வதிகாரத்தில் அவையில் பேசச்செல்வோருக்குச் சிறந்த நடைமுறைக் குறிப்புகள் தரப்படுகின்றன:
யாருக்குச் சொல்கின்றோம் என்று ஆராயாமல் பேசுவது கூடாது; பேசும்போது சொற்களின் தொகை, வகை, நடை அறிந்து ஆளவேண்டும்; மன்றத்தின் செவ்வியை -பொருத்தமான நேரத்தை- நன்றாக உணர்ந்த பிறகே பேச வேண்டும்; அறிவு மிக்கவர்களின் கூட்டத்தில் தாம் அவர்களினும் அறிவு மிகுந்தவர்களாக அறியப்படுமாறு பேச வேண்டும்; அறிவு குறைந்தவர்களின் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருக்கவேண்டும்; தம்மைவிட முதிர்ந்தவர்களின் கூட்டத்தில் முற்பட்டுப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்டும்; பேச்சு வன்மை மிக்க அறிஞர்களின் கூட்டத்தில் ஒருவரது கல்வி விளக்கம் பெறும்; சொல்வதை உடனே புரிந்துகொள்பவர்கள் அவையில் பேசுவது, தனக்கு நல்ல ஊட்டமாக அமையும்; இழிவானர்கள் கூட்டத்தை அறவே தவிர்க; தம்மோடு ஒத்த உணர்வு இல்லாதவர் அவையில் சென்று உரைப்பது பயனில்லை.

 

 

அவையறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 711ஆம் குறள் சொற்களைத் தொகுத்துக் கூறுவதன் பயனை அறிந்த தெளிவுடையவர்கள் அவையின் நிலையைத் தெரிந்து ஆராய்ந்து பேசுக என்கிறது.
  • 712ஆம் குறள் பேச்சு நடையினை அறிந்த நன்மை உடையார் கூட்டத்தின் செவ்வி அறிந்து நன்மையாய் உள்ளவற்றை உணர்ந்து சொல்லுக எனக் கூறுகிறது.
  • 713ஆம் குறள் அவையின் தன்மையையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர்; வன்மையுடையவரும் அல்லர் எனச் சொல்கிறது.
  • 714ஆம் குறள் அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக; பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண்சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக என்கிறது.
  • 715ஆம் குறள் முதிர்ந்தார் கூடிய அவையில் தான் முற்பட்டு எதனையும் சொல்லாத அடக்கம் நல்லது எனக் கூறப்படுவனவற்றுள்ளெல்லாம் சிறந்தது எனச் சொல்கிறது.
  • 716ஆம் குறள் பரந்துபட்ட நூற்பொருள்களைக் கேட்டு அவற்றின் உண்மையை அறிய வல்லவரது அவையில் குற்றப்படுதல் வழியில் செல்லும்போது நிலை கலங்கியது போலும் என்கிறது.
  • 717ஆம் குறள் குற்றமற சொற்பொருள் அறியும் வன்மையுடையார் அவையின்கண் கற்றவரின் கல்விப்பயன் விளங்கித் தோன்றும் எனச் சொல்கிறது.
  • 718ஆம் குறள் செய்தியை உடன் புரிந்துகொள்ளும் திறனுடைய கூட்டத்தின் முன்னர் சொல்லுதல் வளர்கின்ற பயிரின் பாத்தியில் நீரை ஊற்றியது போல என்கிறது.
  • 719ஆம் குறள் நல்ல அவையில் நன்கு மனங்கொள்ளச் சொல்ல வல்லார் இழிந்தோர் கூடியுள்ள இடத்தில் மறந்தும் போய்ப் பேச வேண்டாம் எனக் கூறுகிறது.
  • 720ஆவது குறள் தம்முடன் ஒத்த உணர்வுடையவர் அல்லாத அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் சாக்கடையில் பாலைக் கொட்டியது போன்றது என்கிறது.

 

அவையறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

அவையத்திற்கு வள்ளுவர் மிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இவ்வதிகாரப்பாடல்களன்றி மற்ற அதிகாரப் பாடல்கள் வழியும் அறியலாம். கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் அவையங்கள் இன்றைய குடியாட்சிக் கோட்பாட்டில் ஒரு இன்றியமையாத கூறு ஆகும்.

ஓர் அவையில் பேசுபவர் இடையிடையே கூட்டத்தினர் சொற்பொழிவை விரும்பிக் கேட்கின்றனரா என்பதை உய்த்து உணர்ந்துகொண்டு மேற்செல்ல வேண்டும் என்று இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர் (712) என்ற பாடல் கூறுகின்றது. இதைச் செவ்வியறிதல் என்றும் கூறுவர். அவையறிதலில் இது மிகத் தேவையான ஒன்று.

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (714) என்ற பாடல் ஒரு துறையில் சிறந்தவர்கள் நிரம்பிய அவையில் வித்தக நடையில் பேசவேண்டும்; ஒருவரது துறைக்கு வெளியே உள்ளவர்கள் கூடிய அவையில் இருக்கவேண்டிய கட்டாயம் உண்டானால் அப்பொருள் பற்றி ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கவேண்டும் என்கிறது. அவையறியாமல் அவ்விடத்துள்ளோரிடம் தன்னை அதுபற்றி அறிந்தவராகக் காட்ட முனைவது இழிவைத் தரும் என்பதால் அவ்விதம் சொல்லப்பட்டது.

யாரும் அருகிருந்து விளக்கிச் சொல்லத் தேவையில்லாமல், தாமாகவே, சொல்லப்பட்ட பொருளை உடனே புரிந்துகொள்ளும் ஆற்றலை உடையோரைக் கொண்ட அவையில் பேசுவது எவருக்கும் இன்பம் பயக்கும். கேட்போரின் பாராட்டுரையாக அது கருதப்படும். இதைச் சொல்வது உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (718) என்ற பாடல். இன்றைய பேச்சாளர்கள் இதை ஊக்க மருந்து என்று அழைக்கின்றனர்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் (720) என்ற குறள் தம் கருத்துக்கு ஒவ்வாதவர்கள் அவையில் பேசுவது பயனளிக்காது என்கிறது. இதை விளக்க நம் இல்லங்களில் நமது கண்ணில் நாளும்படும் இடம் ஒன்றை உவமையாக்கிச் சொல்கிறார் வள்ளுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard