Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 115 அலர் அறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
115 அலர் அறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அலர் அறிவுறுத்தல் 
அலர் நல்லது
குறள் திறன்-1141 குறள் திறன்-1142 குறள் திறன்-1143 குறள் திறன்-1144 குறள் திறன்-1145
குறள் திறன்-1146 குறள் திறன்-1147 குறள் திறன்-1148 குறள் திறன்-1149 குறள் திறன்-1150

openQuotes.jpgஅலரறிவுறுத்தலை வரவேற்கிற முறையில் வள்ளுவர் பாடுவது புதுமை.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்

 

காதலர்களின் மறைவொழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து அலராகப் பரவியது. அலர்என்பது காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு நாணத்தைத் துறந்தவர்களாக இருப்பதை ஊரார் பேசுவது. அலரறிவுறுத்தல் என்பது அப்படி ஊர் பேசுவதைக் காதலர்களுக்குத் தெரிவிப்பது. காமத்துக்கு எதிராகப் பேசப்படும் கௌவை இவர்கள் காதலை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. அலரே தங்கள் காதலை இணைக்கப் போவது என்று காதலர் உள்ளூர மகிழவும் செய்கிறார்கள். அலர் நன்மை செய்ய வந்தது என்றெண்ணினர். அதுவே பின்வரும் இணைந்து வாழும் மண வாழ்க்கைக்கு வழி வகுத்தது என்ற குறிப்புடன் அதிகாரம் முடிகிறது.

அலர் அறிவுறுத்தல்

தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறியவருகிறார்கள்.

பிறர் அறியாமல் தலைவனும் தலைவியும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் காதல் கொண்டவர்களிடையேயுள்ள உறவு குறித்துப் பழித்துப் பேசுகிறார்கள். 'அலருரையை மிகச் சொல்லித் தீருகின்றது இவ்வூர்; 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்றாற்போல என் காதலியை எளிதில் அடையற்குரியவள் என்று பேசுகிறார்களே' என்ற பொருள்படும்படி காதலன் சொல்கிறான். இந்த ஊர்ப்பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். ஊர்ப்பேச்சை காதலருக்குத் தெரியப்படுத்துவது அலர் அறிவுறுத்தல் ஆகும்.
ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு மறைவாக ஒழுகுகின்ற செய்தி வெளிப்பட்டு அதைச் சிலராகக் கூடிப் பேசினால் அம்பல் என்றும், பலராகக் கூடிப் பேசினால் அலர் என்றும் சொல்லப்படும். அம்பல் என்பதை மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறுவர். ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி, நாரை போன்றவற்றின் சத்தத்தை அம்பலுக்கும் முரசின் ஒலி, அருவியின் ஓசை ஆகியவற்றை அலருக்கும் ஒப்புமை செய்வர். அம்பல், அலர், கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. ஒத்த பொருளைத் தரும் இவை ஊர்மக்கள் கூடியிருந்து காதலரின் களவு ஒழுக்கம் பற்றி முணுமுணுத்தோ உரக்கவோ பேசுவதைக் குறிப்பன. தெருவில் நடந்து செல்கிற தலைவியைப் பற்றிக் 'கிசுகிசுத்து'ப் அவர்கள் பேசும் காட்சியினை நற்றிணைப் பாடல் ஒன்று (149) அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, அது:
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்ற... 
(நற்றிணை 149 பொருள்: சிலபல பெண்கள் ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி, வியப்புடையார்போலத் தம்தம் மூக்கின் நுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்...)

அலர் எழுவது சமுதாய ஒழுக்கம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஊராரது வம்புப் பேச்சுக்கள் காதலரது மன மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் அதாவது காதலை மறக்கடிக்கச் செய்யலாம் அல்லது அவர்கள் விரைவில் கற்பு வாழ்க்கை மேற்கொள்ள அவை உந்துதல் செய்யலாம் என்ற எண்ணத்தில் உண்டாயின. ஆனால் காதல் கொண்டோர் தங்கள் காதலைக் குற்றம் என்று உணராத காரணத்தால் ஊராரது இழிவுப் பேச்சு காதலரிடம் எந்தவித எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

மடலேறியாவது அவளை மணக்க வேண்டும் என்ற என்ணத்தில், மனநிலை குன்றியவன் என்று ஊரார் நினைக்கும் அளவுக்கு (நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்), உளம் நொந்து, ஊரில் வலம் வந்த காதலன், தனக்கு இனி மடலேறாமலேயே அவள் கிடைத்து விடுவாள் என்பதற்கு அறிகுறியாக ஊரெங்கும் அலர் பரவியது என் நற்பேறுதான் என்று கூறுகிறான். காதலனைப் போலவே வீட்டுச் சிறையில் கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ள காதலியும் ஊரில் பரவிவிட்ட கௌவை அறிந்து மகிழ்ச்சியடைகிறாள். தம்மைப் பற்றி எழுந்துள்ள அலர் தமக்குத் துணை செய்கின்றன எனக் காதலர் நம்புகின்றனர். அலர்கேட்ட பெற்றோர் குடி மானம் காக்கும் பொருட்டு தங்களது மணவினைக்கு ஏற்பாடு செய்வர் என நினைக்கின்றனர், ஆகவே, இந்த அலரால் அவர்களது உறவு வலுப்படவே செய்தது.

அதிகாரத்தின் ஐந்து குறள்கள் காதலன் பேச்சாகவும் மீதி ஐந்து குறள்கள் காதலி கூற்றாகவும் அமைந்துள்ளன. இவர்கள் இருவரும் தனித்தனியே இருந்து சொல்லிக்கொள்வதிலிருந்து அறியக் கிடப்பது என்னவென்றால் அலர் எழுந்து விட்டதால் இனிக் காலத்தாழ்ச்சியின்றித் தமக்குள் மணமாகிவிடும் என்ற உறுதியின் மகிழ்ச்சிதான். ஆதலால் இந்த அலர் இவர்களுக்கு மட்டும் அறிவுறுத்துவது அல்ல; இவர்களுடைய பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும்கூட விரைவில் இவர்களுக்கு மணமுடித்துவிடவேண்டும் என்பதையும் அறிவுறுத்தல் ஆகும் (நாமக்கல் இராமலிங்கம்).

களவொழுக்கம் வெகுகாலம் நீடிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அது கற்பு நெறிக்கு மாறியே ஆகவேண்டும். கற்பு நெறி என்பது ஆணும் பெண்ணும் ஊரார்க்குத் தெரியும்படி மணம் புரிந்து இல்லறம் மேற்கொள்வதைக் குறிக்கும். இதுவே சமுதாயம் ஒப்புக்கொள்ளும் வாழ்வு நெறியுமாகும்.
களவு வாழ்க்கையை முடித்துக் கொள்ள காதலர்க்கு உண்டான வழிகளாவன:
1. காதலியின் பெற்றோர் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஊரார் முன் காதலன் முறையிடும் மடலேறுதல்.
2. அலர் எழுந்ததால் பெற்றோர் தம் குடி மானம் காக்க அவர்கள் காதலை ஏற்றுக் கொள்வது.
3. பெற்றோர் ஒப்புதல் கிடைக்காவிட்டல் உடன்போக்கு மேற்கொள்வது உடன்போக்கு என்பது காதலன் காதலியைத் தன்னுடன் தன்னூர்க்கு இட்டுச் செல்லுதல்.
சென்ற (நாணுத்துறவுரைத்தல்) அதிகாரத்தில் காதலன் மடலேற முடிவு செய்கிறான் என்ற நிலையில் அவனது மனஓட்டங்கள் கூறப்பட்டன. மடலேறினானா அல்லவா என்று சொல்லாமலேயே அதிகாரம் நிறைவுற்றது. மேலும் அவ்வதிகாரப் போக்கு மடலூர்தல் ஏற்கத்தக்க வழியல்ல என்பதையும் உணர்த்தியது. 'உடன்போக்கு' பற்றி குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே வள்ளுவருக்கு அதுபற்றி கருத்து ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. அலர்வழி களவொழுக்கம் முடிவு பெறுவதை 'தாம்வேண்டின் நல்குவர்' (குறள் 1050) என்னும் பாடல்வழி குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
தங்களுக்குள் இணைந்திருந்தாலும் உலகத்தில் இருந்து பிரிந்து நின்ற காதலர்களை அலர் ஒன்று சேர்க்கும்; அலர் நன்மை தருவது என்று இவ்வதிகாரம் காட்டுகின்றது.
இவ்வதிகாரத்தில் அலர் வழி களவு வாழ்வு முடிவுக்கு வருவதாகக் காட்டப்படுகிறது.

நாமக்கல் இராமலிங்கம். '....ஆனால் இவர்களுக்கு மணவினை நடந்தது பற்றிக் குறள் பேசவில்லை. ஏன் என்றால் காமத்துப்பால் முழுதும் காதலர்களுக்குள் நிகழ்ந்த காம உணர்ச்சிகளையும் காதல் உணர்ச்சிகளையும்பற்றி மட்டும் சித்தரித்துக் காட்டும் காமக் காதல் நாடகமானதால் இடையில் நிகழும் மற்றச் செய்கைகளெல்லாம் தொக்கு நிற்கச் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அங்கங்கே கூட்டிப் பொருள் கொண்டால்தான் காமத்துப்பாலைத் திருவள்ளுவர் நடத்திக் காட்டுகிற அழகு தெரியும்' என்று களவொழுக்க நிறைவு பற்றிக் கருத்துரைப்பார்.

அலர் அறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1141 ஆம்குறள் அலரினால் உயிர் நிலைத்து நிற்கின்றது என்று காதலன் சொல்வதாக அமைந்தது.
  • 1142 ஆம்குறள் என் காதலியின் அருமை அறியாது எங்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்று காதலன் வருந்துவதைச் சொல்வது.
  • 1143 ஆம்குறள் அலரால் அவளை அடைந்தே விட்டேன் என்ற உணர்வு ஏற்படுகிறது என்று காதலன் கூறுவதைச் சொல்வது.
  • 1144 ஆம்குறள் அலர் காதலனிடம் கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது என்பது.
  • 1145 ஆம்குறள் எங்கள் காதல் செய்தி மேலும் மேலும் பரவட்டும் என்று காதலன் கூறுவதாக அமைந்தது.
  • 1146 ஆம்குறள் காமம் பற்றிய அலர் பெரிதாகப் பேசப்பட்டு விரைவாகப் பரவியது என்கிறது.
  • 1147 ஆம்குறள் காதல் கட்டுப்பாடுகளை உள்ளத்தால் காதலி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்வது.
  • 1148 ஆம்குறள் ஊர்ப்பேச்சால் எங்கள் காதல் தீ கொழுந்துவிட்டு வளரவே செய்கிறது என்று காதலி உரைப்பதைக் கூறுவது.
  • 1149 ஆம்குறள் அலர் உருவாகக் காரணமான நிகழ்வு குறிப்பது.
  • 1150 ஆவதுகுறள் காதலர்தம் களவொழுக்கம் நிறைவு எய்தப் போவதை அறிவிப்பது.

 

அலர் அறிவுறுத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

 

அலருரை எப்படி விரைவாகப் பரவுகிறது என்பதற்கு கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று (1146) என்ற உவமை சொல்லப்பட்டது. 'நிலாவைக் காணோம்! அதைப் பாம்பு விழுங்கிவிட்டது!!' என்று சந்திர கிரகண நிகழ்வு பரபரப்பாகப் பேசப்படுவது போல காதலர் கொண்ட களவு ஒழுக்கச் செய்தி ஊருக்குள் பரவியது என்பது இதன் கருத்து.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (1147) - காதலர்கள் உறவைத் தடுப்பதற்குப் நேர்மாறாக, ஊராரது பழிச்சொற்கள் எருவாக உரமூட்டியும் தாயின் கடுஞ்சொற்கள் நீர்பாய்ச்சியும், அதைச் செழிக்கச் செய்கிறது என்ற கருத்துக்கொண்ட இப்பாடல் மற்ற புலவர்களாலும் அடிக்கடி எடுத்தாளப்படுவது ஆகும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard